தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 januari 2013

முள்ளிவாய்க்கால் கோரத்தை வெளிக்கொணர்ந்த மருத்துவருக்கு வாழும் நாயகன் விருது !!


முள்ளிவாய்க்கால் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய “Still Counting the Dead” என்ற பிரான்செஸ் ஹாரிசன் புத்தகத்தில் இடம்பெற்ற மருத்துவருக்கு ” வாழும் நாயகன் ” என்ற சிறப்பு மிகு விருது அளிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் பங்கேற்க கடந்த ஜனவரி 19 ஆம் திகதியன்று மார்க்கம் ஹில்ரன் உல்லாச விடுதி கலந்தாய்வு அரங்கத்தில் கனடியத் தமிழர் பேரவையின் சார்பில் சிறப்புமிகு பொங்கல் விழா நடைபெற்றது அனைவரும் அறிந்ததே,
மார்க்கம் நகரின் சார்பில் அதன் துணை மேயர் ஜாக் ஹீத், ஒன்ரோறியோ அரசு சார்பில் மார்க்கம் ஓக்ரிட்ஜ் தொகுதியிலிருந்து சட்டபேரவைக்கு தேர்வான Dr. Helena Jackzek , கனடிய அரசின் சார்பில் அஜக்ஸ் பிக்கரிங் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்சாண்டர் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து கட்டங்களையும் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகளும் , பல்வேறு கட்சித் தலைவர்களும், லிபரல் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்றது கனடியத் தமிழர்களின் வலிமையை தரணிக்கே அறிவிக்கும் விதத்தில் அமைந்திருந்தது.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் உள்ளிட்ட தமிழ் சமுதாயத்தினைச் சார்ந்த முக்கியப் பிரதிநிதிகள் இவ்விழாவினில் கலந்து கொண்டிருந்தனர்.
மறைந்த என்.டி.பி தலைவர் ஜாக் லேடனின் மனைவியும், கனடிய பாராளுமன்ற உறுப்பினருமான ஒலிவியா சோ அவர்களும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு விருந்தில் பங்கேற்றார்.
2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற கனடியத் தமிழர் பேரவை பொங்கல் விழாவின் போது சிறந்த முறையில் சேவையாற்றியமைக்கான விருது தன் கணவருக்கு வழங்கப்பட்டதை ஒலிவியா சோ அப்போது நினைவு கூர்ந்தார்
கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் சுந்தரமூர்த்தி உமாசுதன் விழாவிற்கு வருகை புரிந்த விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, 2012 ஆம் ஆண்டில் கனடியத் தமிழர் பேரவையின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.
சிறிலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மனிதாபிமானமற்ற முறையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த சுதந்திர சர்வதேச விசாரணை அவசியம் என்பதனை வலியுறுத்தும் வகையிலும் அதற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் கனடியத் தமிழர் பேரவை தொடர்ந்தும் செயல்படும் எனவும் மார்ச் 2013 ல் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் 22 வது அமர்வில் கனடியத் தமிழர் பேரவை பங்கெடுக்க உள்ளதையும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
                                                                                                                                                      கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் சுந்தரமூர்த்தி உமாசுதன்
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பிரமாண்ட இரவு விருந்தில் பல முக்கிய விருதுகளும் வழங்கப்பட்டது. மாற்றங்களுக்கான தலைவர் விருது ரொறொன்ரோ மாநகர காவல்துறை ஆணையர் பில் ப்ளைருக்கும், பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சிறிலங்கா சமாதான மற்றும் நீதி இயக்கத்திற்கு சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டது.
விழாவின் முக்கிய அம்சமாக ” வாழும் நாயகன் ” என்ற புதிய விருதும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறிலங்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய “Still Counting the Dead” என்ற பிரான்செஸ் ஹாரிசன் புத்தகத்தில் இடம்பெற்ற மருத்துவருக்கு ” வாழும் நாயகன் ” என்ற சிறப்பு மிகு விருது அளிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மருத்துவரின் பெயர் அறிவிக்கப்படவில்லை.
இப்புத்தகத்தின் தமிழ் பதிப்பும் விழாவில் வெளியானது. நாளைய தலைவர்களாகத் துடிக்கும் 13 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களின் சிறப்புரை விருந்து விழாவிற்கு முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.

Geen opmerkingen:

Een reactie posten