தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 januari 2013

முழுமையான இராணுவ ஆட்சியில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம்!!


உலக நாடுகளின் ஆசியுடன் ஏகாதிபத்திய அமரிக்காவின் வதிவிட உரிமை கொண்டவர்களின் இராணுவ ஆட்சி தமிழர் தாயகத்தில்,கேட்டால் பயங்கரவாதம் அழிப்பு என்கிறது ஐ நா இறந்த குழந்தைகளை காட்டி !!ஊதியத்துக்கு வேலை செய்பவரிடன் லஞ்சம் பெற்று, பதவி பெறுபவரிடம் மனிதாபிமானம்,நீதி கிலோ என்ன விலைதானே!!



முழுமையான இராணுவ ஆட்சியில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம்.
VaakaiTV 10.01.2013 http://www.livestream.com/vaakai
* பாடசாலைகளுக்கு இராணுவ ஆசிரியர்கள்
* பொது நிகழ்வுகளில் இராணுவத் தலையீடு
* சிவில் நிர்வாகங்களில் இராணுவ அதிகாரிகள்
* பெண்கள் மீதான வல்லுறவுகள் அதிகரிப்பு
* தொடரும் மர்ம மரணங்கள்
* தொடரும் கடத்தல், காணாமல்போதல்கள்
* தொடரும் கைதுகள்

தமிழர் தாயகத்தில் இருந்து சிறீலங்கா இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட்டு, பொது மக்களின் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா. சபையில் கடந்த ஆண்டு வலியுறுத்தப்பட்டு, அதற்காக ஓர் ஆண்டு கால அவகாசமும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தமிழர் தாயகமெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தமிழ் மக்கள் முழுமையாக அடக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களின் சிவில் நிர்வாகங்கள், நிகழ்வுகள் அனைத்திலும் இராணுவத்தினர் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பாடசாலைகளுக்கு இராணுவ ஆசிரியர்கள்

இந்நிலையில் தற்போது வடக்கில் உள்ள பாடசாலைகளில் சிங்கள மொழியைக் கற்பிப்பதற்காக எனக் கூறி இராணுவத்தினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களை இன அழிப்புச் செய்யும் இன்னொரு நடவடிக்கை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு வழியிலான போராட்டங்களும் உயிர்த்தியாகங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்த தலைமுறைகளுக்கு இந்த வரலாறு சென்றடைவதைத் தடுக்கும் வகையில், மிகவும் திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரசின் இச்செயற்பாடு அரங்கேறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் பாடசாலைகளில் புகுந்து இரண்டாம் மொழி கற்பிக்க முனைவது, இராணுவ ஆட்சி மயமாக்கலின் உச்சகட்டம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனை உடனடியாக சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவரவேண்டும், குறிப்பாக கொழும்பில் உள்ள ஐ.நா. அமைப்பின் கீழ் வரும் யுனேஸ்கோ என்ற ஐ.நா கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறுவன வதிவிட பிரதிநிதியின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரிய தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்து இதுபற்றி தமது சர்வதேச ஆசிரிய அமைப்புகளின் கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் என்றும் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

சிறீலங்கா இராணுவம் முதலில் எந்தவித சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளும் இல்லாமல் தமிழ்ப்பெண்களை இராணுவத்துக்கு சேர்த்தது. இப்போது வட மாகாண கல்வி அமைச்சு மூலமாக இந்த இராணுவ ஆசிரியர் செயல் முன்னெடுக்கப்படுகிறது.

பாடசாலைகளில் சிங்கள மொழி, கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை போதிக்க ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனால் இராணுவ ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும், கல்வி போதிக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் முன்னுக்கு பின் முரணாகத் தெரிவிப்பது விசித்திரமானது.

தென்னிலங்கையிலும் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் இங்கு இராணுவத்தினர் பாடசாலை ஆசிரியர்களாக பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. ஆசிரியர் பற்றாக்குறை நிலவுமானால் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்வித்தகைமை மற்றும் பயிற்சி பெற்றுள்ளவர்கள் இருக்கின்றார்கள். நிறைய பட்டதாரிகள் தொழில் நியமனங்களுக்காக காத்திருக்கிறார்கள். பல்வேறு பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற பல ஆசிரியர்கள் உரிய நியமனங்களுக்காக காத்திருக்கின்றார்கள்.

இவற்றை கணக்கில் எடுக்காமல், பற்றாக்குறை நிலவுகிறது என்பதை ஒரு காரணமாக கொண்டு பாடசாலைகளுக்குள் இராணுவ ஆசிரியர்களை கொண்டு செல்வது ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என்றும் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

கல்வித்துறை அதிகாரம் மாகாணசபைகளுக்குள் வருகிறது. வடக்கில் மாகாணசபை இல்லை என்ற காரணத்தால்

முன்னாள் இராணுவ அதிகாரியான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி சட்டத்தை தனது கையில் எடுத்துகொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார். இந்த நடவடிக்கையை மாகாணசபை அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியாது. மாகாணசபை உறுப்பினர்கள் இல்லை என்பதால் ஆளுநர் தான்தோன்றித்தனமாக செயல்படவும் முடியாது.

உண்மையில் வடக்கில் மாகாணசபை உறுப்பினர்கள் இல்லை என்பதால் இது இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்காணிப்புகளின் கீழ் வருகிறது. எனவே, கிளிநொச்சி மாவட்டம் உள்வரும் யாழ் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும், முல்லைத்தீவு மாவட்டம் உள்வரும் வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இது தொடர்பாக கட்சி அரசியல் பேதங்கள் இல்லாமல் உடனடியாக களமிறங்கி இந்த நடவடிக்கையை எதிர்த்துத் தடுத்து நிறுத்த வேண்டும்.

உண்மையில் இந்த அரசாங்கம் கதை, வசனம் எழுதி தயாரித்து சர்வதேசத்தில் திரையிட்ட கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள சிபாரிசுகளையே இந்த நடவடிக்கை மீறுகிறது. அந்த அறிக்கையில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இன்று குறைப்பதை விடுத்து இந்த அரசாங்கம் தமிழ் சமூகத்தின் அனைத்து அம்சங்களிளும் இராணுவத்தை திணிக்கிறது என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினர் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்பிப்பதற்கான அனுமதியை உடன் இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி, வடக்கு மாகாண ஆளுநருக்கும், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இராணுவத்தின் இந்தச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதனைத் தமது சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கூறியுள்ளார்.

பொது நிகழ்வுகளில் இராணுவத் தலையீடு

இதுஇவ்வாறிருக்க, தமிழர் தாயகத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகள், தனிப்பட்ட நிகழ்வுகள் அனைத்திற்கும் இராணுவத்தினர் கட்டாயமாக அழைக்கப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. இதனால், தற்போது எந்தவொரு நிகழ்வும் இராணுவத்தினர் இல்லாமல் நடத்தமுடிவதில்லை என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிவில் நிர்வாகங்களில் இராணுவ அதிகாரிகள்அத்துடன், பொது மக்களின் நிர்வாக செயற்பாடுகளிலும் இராணுவத்தினர் அதிகளவில் இணைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வடமாகாண ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதியான சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பல்வேறு அதிகார உயர்மட்டங்களிலும் இராணுவத்தினரும், அவர்களுக்கு உதவுகின்ற ஒட்டுக்குழுக்களைச் சேர்ந்த தமிழர்களுமே சிவில் உடையில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பெண்கள் மீதான வல்லுறவுகள் அதிகரிப்பு

நிலைமை இவ்வாறிருக்க முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டில் படுகொலைகளும், தமிழ் பெண்கள், சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவுகளும் மிகமோசமாக அதிகரித்துள்ளன. மண்டைதீவில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டு, ஒரு சில தினங்களுக்குள் கடந்த டிசெம்பர் மாதம் 6ம் திகதி காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காரைநகரில் சிறீலங்காக் கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து சடலமாக உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தமிழர் தாயகத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மிக மோசமாக அதிகரித்துள்ளன. அம்பாறை திருக்கோவில் - வட்டமடு வயல் பிரதேசத்தில் வயல் வேலைக்குச் சென்ற மூன்று பெண்களை நான்கு பேர்கொண்ட ஒரு குழுவினர் தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளனர். இதிலிருந்து மூவரும் காயங்களுடன் தப்பியோடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

ஆலையடி வேம்பு மகா சக்திபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான மூன்று பெண்கள் வழமைப்போல காலையில் வட்டமடு வயல் பிரதேசத்தில் வயலில் களை பிடுங்கிக்கொண்டிருந்தவேளை நான்கு பேர் கொண்ட குழுவினர் மூன்று பெண்களையும் தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளனர். இதனையடுத்து பெண்கள் கத்தி கூச்சலிட்டதையடுத்து வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கையில் இருவர் உடன்வந்த போது அவர்களை தாக்கிய நிலையில் அந்த குழுவினர் தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்திருந்த மூன்று பெண்களும் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் மது போதையில் வந்து தம்மை தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டதாக இந்தப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தப்பியோடியவர்கள் சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடரும் மர்ம மரணங்கள்

இதேவேளை, மீண்டும் மர்மமான முறையில் இறந்தவர்களின் உடலங்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர்கள் பின்னர் உடலங்களாக மீட்கப்படுவதும், வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சிறுமிகள், பெண்கள் சடலங்களாக மீட்கப்படுவதும் அதிகரித்து வரும் நிலையில், எவ்வாறு மரணமடைந்தார்கள் என்பது தெரியாமல் சடலங்கள் கண்டெடுக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. இவர்களது மரணத்திற்கான காரணங்கள் கண்டறியப்படாமல் இருப்பதுடன், இவர்கள் இயற்கையாகவும், தற்கொலை செய்துகொண்டும் மரணமடைந்ததாக காரணம் கற்பிக்க சிறீலங்கா காவல்துறைத் தரப்பு முயல்வதும் நடைபெற்றுவருகின்றது.

தொடரும் கடத்தல், காணாமல்போதல்கள்

இதேவேளை, தமிழர்கள் கடத்தப்படுவதும் காணாமல் போகச்செய்வதும் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருவர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளனர். சிறீலங்காப் படையின் புலனாய்வாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்த நபர்களால் சண்டிலிப்பாய்ப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இதனைத் தடுத்த குறித்த குடும்பஸ்தரின் நண்பர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த குடுபம்பஸ்தர் சாவகச்சேரியில் திருமணம் செய்து வழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட சிறு குழப்பம் காரணமாக குடும்பத்தினை விட்டுப் பிரிந்த சண்டிலிப்பாயிலுள்ள சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர். தனது நண்பர்களுடன் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தச் சென்றுள்ளார். அங்கு வந்த 8 பேர் தம்மை சிறீலங்கா படையின்புலனாய்வுப் பிரிவு என்று அடையாளப்படுதிக்கொண்டு சிங்கள மெழியில் குறித்த குடும்பஸ்தரை தம்மோடு வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர். இதனை மறுதலித்த அவரது நண்பர் ஒருவர் அவருடன் இணைந்து தானும் வருவதாக கூறினார். இதனால் கோபமடைந்த புலனாய்வாளர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு அவருடைய செல்பேசி மற்று வாகனத்தின் திறப்பினையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான 56 வயதான கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் கடந்த 28ம் திகதி இரவு 9.40 அளவில் இடம்பெற்றுள்ளதென தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மலபார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை கம்பளை பகுதியில் வைத்து இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொடரும் கைதுகள்

இதேவேளை, முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு பெறாதவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏராளமான தமிழர்கள் வடபகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன், தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்கள் என்பதை மறைத்து புனர்வாழ்வு பெறாமல் நழுவிய ஆயிரம் முன்னாள் போராளிகளை படைப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என யாழ். மாவட்டத்திற்கான சிறீலங்காவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார் என்று ‘சிலோன் ருடே’ என்ற ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது வடக்கில் இடம்பெற்றுவரும் கைதுகள் தொடர்பாக இந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள யாழ். மாவட்ட இராணுவத்தளபதியின் விளக்கத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹத்துருசிங்க தெரிவித்ததாக குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததைச் சிலர் மறைத்து புனர்வாழ்வு பெறுவதில் இருந்து நழுவி விட்டார்கள். படையினரின் கண்களில் இருந்து தப்பிய இவர்கள் பொதுமக்களோடு பொதுமக்களாக நலன்புரி நிலையங்களுக்குச் சென்று விட்டனர். இவ்வாறு நழுவியவர்களே வடக்கில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.

எனவே இவர்களின் நடவடிக்கைகளை படைப் புலனாய்வாளர்களும், பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறையினரும் கண்காணித்து வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 48 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் இவர்கள் விரைவில் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்படவுள்ளனர். இதேவேளை, வடக்கில் ஆயிரம் முன்னாள் போராளிகளை இன்னமும் படைப் புலனாய்வாளர்களும், பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். என்று ஹத்துருசிங்க தெரிவித்தார் என்று ‘சிலோன் ருடே’ தகவல் வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten