இலங்கையில் ஊடக அடக்குமுறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. குறிப்பாகக் கூறுவதாக இருந்தால் அண்மைக்காலமாக தமிழ் ஊடகங்களை குறிவைத்துத் தாக்கப்படும் செயற்பாடுகள் அதிகரித்தே காணப்படுகின்றது என்றுதான் சொல்லவேண்டும்.
தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும், அடக்குமுறைகள் குறித்தும், உரிமை மறுப்புக்கள் குறித்தும் வெளிப்படையாகக் கூறமுடியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் ஊடகங்களின் வாயிலாகவே தமது பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்திருந்தார்கள்.
இதனைக் பொறுக்க முடியாதவர்கள், கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள் ஊடகப் பணியாளர்களையும், ஊடகவியலாளர்களையும் இலக்கு வைத்து அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளையும், தமது அடாவடித்தனங்களையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த வகையில்தான் யாழ்ப்பணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளும் அவற்றில் பணிபுரியும் ஊடகவியலாளர்களும் இலக்கு வைக்கப்பட்டு தொடர்ச்சியாகத் தாக்கப்கடுகின்றார்கள்.
கடந்த காலங்களில் பல தமிழ் ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் கண்டபடி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள், ஆயுதங்களால் மோசமாகத் தாக்கப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் சொந்த நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து அகதியாக சென்றுள்ளார்கள்.
ஊடகவியலாளர்களின் கொலையுடன் தொடர்புடைய கொலைகாரர்கள் யார் என்பதையோ அல்லது ஊடகவியலாளர்களை இலக்கு வைக்கும் பின்னணியில் யார் இருந்து செயற்படுத்தி வருகின்றார்கள் என்பதைப் பற்றியோ இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் கொலைகாரர்கள், தாக்குபவர்கள் இன்னமும் இனந்தெரியாதோர் என்னும் போர்வையில் இருந்து வருவதுமேதான் ஊடகவியலளர்கள், ஊடகப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதற்கு ஊக்கியாகவும் முக்கிய காரணியாகவும் காணப்டுகின்றது என்பது வெளிப்படையான உண்மை.
கருத்துக்களைக் கருத்துக்களால் வெல்ல முடியாதவர்கள், கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத கையாலாகாதவர்கள் ஊடகங்களை அச்சுறுத்த வேண்டும், உண்மைகள் வெளிவராதபடி குரல்வளையை அறுக்க வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் தற்போதும் செயற்பட்டு வருகின்றார்கள்.
அந்த வகையில்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளான யாழ்.தினக்குரல், உதயன் போன்ற தமிழ் பத்திரிகைகளும் அவற்றின் பத்திரிகையாளர்களும் இலக்கு வைக்கப்பட்டு மிகவும் மோசமான வகையில் தக்கப்பட்டு வருகின்றார்கள்.
உதயன் பத்திரிகை விநியோகஸ்தரை பின் தொடர்ந்து சென்றவர்கள் இருபம்புக் கம்பிகளால் தாக்கிக் காயப்படுத்தியதுடன் அவர் சென்ற மோட்டார் சைக்கிளையும் பத்திரிகைகளுடன் சேர்த்து தீயிட்டுக் கொழுத்தி அட்டகாசம் புரிந்துள்ளார்கள்.
இச்சம்பவம் இடம்பெற்று ஓரிரு தினங்களில் மீண்டும் அதே பாணியில் யாழ்.தினக்குரல், உதயன் பத்திரிகை விநியோகஸ்தர்களை பின் தொடர்ந்து கலைத்துச்சென்றவர்கள் புத்தூர்ப் பகுதியில் வைத்து யாழ்.தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தரை அடித்து விழுத்தி மிக மோசமான வகையில் இரும்புக் கம்பிகளால் தாக்கி படுகாயப்படுத்தியதுடன் பத்திரிகைகளையும் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்;து தீ மூட்டி எரித்துள்ளார்கள்.
இச் செயற்பாடுகளானது தமிழ் மக்களுடைய அவலங்களும், அடக்குமுறைகளும், உரிமை மறுப்புக்களும் வெளிக்கொண்டு வரக்கூடாது, உரியவர்கள் கவனத்தில் எடுக்கக் கூடாது என்னும் நோக்கங்களின் அடிப்படையில்தான் மக்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஊடகங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன என்பது புலனாகின்றது.
அப்படி என்றால் தமிழர்கள் தொடர்ந்தும் அடிமைகளாகவும் அவலம் சுமந்தவர்களாகவுமேதான் வாழ்ந்து மடியவேண்டுமென்றா இவர்கள் விரும்புகின்றார்கள்?.
சசி
Geen opmerkingen:
Een reactie posten