முன்னர் விடுதலைப் புலிகளுடன் வெளிநாட்டு அரசாங்கங்கள் பேசிய போதெல்லாம், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.
விடுதலைப்புலிகளுக்கு அரசியல் அந்தஸ்தை அளிக்க வெளிநாடுகள் முனைகின்றன என்பதே அந்தக் குற்றச்சாட்டு.
விடுதலைப் புலிகளுக்கு எந்தவகையிலும் அங்கீகாரம் கிடைத்து விடக் கூடாது என்பதால் தான் அரசாங்கம் அவ்வாறு கூறிவந்தது.
ஆனாலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் பெருமளவு பிரதேசமும், இலட்சக்கணக்கான மக்களும், இருந்த நிலையில் - அவர்கள் தமது கட்டப்பாட்டுப் பிரதேசங்களில் ஒரு தனியான நிர்வாகத்தையே நடத்தி வந்த நிலையில், அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளையும் மீறி வெளிநாடுகள் அந்தத் தொடர்பைப் பேணுவதில் ஆர்வம் காட்டின.
பல நாடுகள் விடுதலைப் புலிகளைத் தமது நாட்டுக்கு அழைக்கும் அளவுக்கு அந்தத் தொடர்புகள் பின்னர் இறுக்கமாயின. ஆனாலும் போரில் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை இழந்து, நிர்வாகத்தை இழந்து தோல்வியைச் சந்திக்கின்ற ஒரு கட்டத்தில், அத்தகைய நாடுகள் எல்லாம் புலிகளைக் கைவிட்டு விட்டதும் வரலாறு.
அப்போது விடுதலைப் புலிகள் இருந்த நிலையில், இப்போது இலங்கை இராணுவம் இருக்கிறது.
நாடு முழுவதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் இருந்தாலும், வடக்கும் கிழக்கும் தான், இராணுவத்தின் ஆட்சியில் இருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது.
மிகையான படைக்குவிப்பு, எல்லாவற்றிலும் படைத் தலையீடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிப்புறத் தோற்றக் காரணிகள், வடக்கு கிழக்கை ஒரு இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகவே இன்னமும் வரையறுக்க வைக்கின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் தான் இலங்கையில் இருவேறு ஆட்சிப் பிரதேசங்கள் காணப்பட்டன.
அரச அல்லது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி என அவை இரு வகைப்படுத்தப்பட்டிருந்தன.
போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளாகின்ற நிலையிலும், இந்த இருவகைப்படுத்தப்படும் நிலை இன்னமும் மாறவில்லை.
இதனால் தான், வழக்கமான சிவில் நிர்வாகம் நடைபெறும் பகுதி தனியாகவும், இராணுவ ஆதிக்கம் நிறைந்த வடக்கு, கிழக்குப் பகுதி தனியாகவும் பார்க்கப்படும் சூழல் காணப்படுகிறது.
என்னதான் அரசாங்கம் அனைவருக்கும் சமஉரிமை என்று கூறினாலும், வடக்கும் கிழக்கும் தனியானதொரு இராணுவக் கவனிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள பிரதேசமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன.
அதிகாரபூர்வமானதாக இந்தப் பிரிப்பு இல்லாவிட்டாலும், மறைமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகவே இது காணப்படுகிறது.
தெரிந்தோ தெரியாமலோ வடக்கு கிழக்கின் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகளுக்கு அரசாங்கம் மட்டுமன்றி வெளிநாடுகள் கூடத் துணை போகின்றன. என்பதுதான் இதில் ஆச்சரியத்துக்குரிய விடயம்.
ஒரு பக்கத்தில், வடக்கில் படைக்குறைப்புச் செய்யப்பட வேண்டும் என்றும், நடைமுறை வாழ்வில் இருந்து படையினரின் தலையீடுகள் அகற்றப்பட வேண்டும் என்றும், வெளிப்படையாக வலியுறுத்தும் நாடுகளே, வடக்கு கிழக்கில் படைத்தலையீடுகளுக்கு அங்கீகாரத்தையும் ஆதரவையும் கொடுக்கின்றன.
இந்த ஆதரவு வெளிப்படையானதாக இல்லாவிட்டாலும், மறைமுகமானது என்று சொல்லமுடியாது.
அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூன்று பிரதி உதவிச் செயலர்கள் இலங்கையின் நிலைமைகளை அவதானிக்க வந்திருந்தனர்.
அவர்கள் கொழும்பில் வந்திறங்கியதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து விட்டு, அடுத்துப் பார்க்கச் சென்றது யாழ்ப்பாணத்தைதான்.
அந்தளவுக்கு யாழ்ப்பாணம் முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திர கேந்திரமாக உள்ளது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் மட்டுமன்றி, இப்போதும் கூட வடக்கின் மீதான, வடக்கு மக்களின் கருத்து மீதான சர்வதேச கவனிப்பு இன்னமும் குறைந்து போகவில்லை.
அமெரிக்க குழு மட்டுமன்றி எந்தவொரு நாட்டுப் பிரதிநிதிகளும் இலங்கை வந்தால், தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை அறிவதற்கு தேடிச் செல்வது வடக்கைத்தான்.
வடக்கு கிழக்குக்கு வெளியே தான் பெரும்பாலான தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தநிலையில் எவ்வாறு வடக்கு கிழக்கிற்கு மட்டும் தனியான தீர்வை அளிக்க முடியும் என்று அரசாங்கம் சொல்லும் நியாயங்களை மறுத்து விட்டு, தமிழ் மக்களின் கருத்தை அறிய வெளிநாடுகள் வடக்கைத்தான் நாடுகின்றன.
அண்மையில் யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க பிரதிநிதிகளிடம் யாழ் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வழக்கம் போலவே ஒன்றை வலியுறுத்தியிருந்தார்.
வடக்கில் சிவில் நிர்வாகங்களில் படையினர் தலையிடுவதில்லை என்பதே அது.
ஆனால் அவரே படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளும் திட்டங்கள், பணிகள் குறித்தும் விபரித்திருந்தார்.
வடக்கில் .கண்ணிவெடிகளை அகற்றல், வீதி புனரமைப்பு, வீடமைப்பு பணிகள் போன்ற போர் சாராத பணிகளில், படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உண்மையில் கண்ணிவெடியகற்றல் தவிர்ந்த, வடக்கில் படையினர் மேற்கொள்ளும் பணிகளுக்கும், அவர்களின் தொழில் சார் பொறுப்புகளுக்கும் தொடர்பேயில்லை.
ஆனாலும் அதில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
படையினர் இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வெளிநாட்டுப் பிரதிசிநிதிகள் அவர்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டியவர்களாக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதனால் வடக்கில் படைக்குவிப்பபையும் நியாயப்படுத்த முடிகிறது.
வடக்கில் சிவில் நிர்வாகத்தில் படையினர் தலையிடுவதேயில்லை என்று அரசாங்கமும் படைத்தரப்பும் கூறினாலும், வடக்கில் படைகள் குறைக்கப்பட்டு, சிவில் நிர்வாகத்தில் அவர்களின் தலையீடுகள் அகற்றப்பட வேண்டும் என்று வெளிநாடுகள் வலியுறுத்தினாலும் இந்த இரண்டுமெ ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றன.
அதாவது வடக்கில் நிர்வாகப் பணிகளில் இருந்த இராணுவம் விலக்கப்படவேண்டும் என்று கூறினாலும் அதே இராணுவத்தை தேடிச்சென்று சந்திக்கி்னறன வெளிநாடுகள்.
வடக்கிற்குச் செல்லும் எந்தவொரு வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் யாழ் படைத் தலைமையகத்துக்குச் செல்லாமல் விடுவதில்லை.
கிளிநொச்சியிலும் இப்போது அதேநிலை உருவாகியுள்ளது.
வடக்கில் படைக்குவிப்பை, சிவில் நிர்வாகத்தை வலியுறுத்தும் நாடுகள் கூட இதற்கு விதிவிலக்காக முடியாது.
காரணம் வடக்கின் நிர்வாகக் கட்டமைப்புடன் இராணுவம் அந்தளவுக்கு இணைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்குச் செல்லும் வெளிநாட்டு பிரதிநிதிகள் எந்தவொரு கட்டத்திலும், அந்தப் பிரதேச இராணுவத் தளபதிகளையோ முகாம்களையோ தேடிச் செல்வதில்லை.
ஆனால் வடக்கில் நிலைமை அப்படியில்லை.
இது ஒருவகையில் வெளிநாடுகளின் முரண்பட்ட போக்கு என்று கூடச் சொல்லலாம்.
வடக்கில் படையினரின் தலையீடுகளைக் குறைக்க வேண்டும் என்ற தமது கொள்கை சார்ந்த விடயத்திலேயே, வெளிநாடுகள் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அளவுக்கு நிலைமைகளை ஏற்படுத்தி வைத்துள்ளது அரசாங்கம்.
வடக்குடன் இராணுவத்தை இரண்டறக் கலந்து விட்டுள்ள நிலையில், வடக்கின் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதில்லை என்று கூறுவது அபத்தமான நியாயம் என்பதை வெளிநாடுகள் நன்றாகவே அறியும்.
ஆனாலும் ஒரு அரசாங்கமாகவே இல்லாத போதிலும், வடக்கின் மீது கொண்டிருந்த அதிகாரம் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க வெளிநாடுகளை எவ்வாறு நிர்ப்பந்தித்ததோ, அதுபோலவே இப்போது வடக்கில் இராணுவத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் இராணுவத்துடன் தொடர்பைப் பேண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இராஜதந்திர ரீதியாக இதனை எவ்வகையில் நியாயப்படுத்தினாலும், இராணுவ மயப்படுத்தலில் இருந்து வடக்கை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகள், அதற்குத் தொடர்ந்து அங்கீகாரம் அளிப்பது முரண்பட்ட விடயமாகவே தோன்றுகிறது.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten