விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாகப் போகின்ற நிலையில், பலருக்கு அது நம்ப முடியாத செய்தியாகவே இருந்து வந்தது. ஆனால் இப்போது அதை ஏற்றுக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறுகி விட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டமைக்கு பலரும் பல காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தப் பேரழிவு நிகழ்ந்தது தனியே ஒலு சம்பவத்தினாலோ, முடிவினாலோ, நடவடிக்கையினாலோ அல்ல.
பல சம்பவங்களின் கோர்வையாக, பல நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, பல முடிவுகளின் விளைவுகளாக, பல நடவடிக்கைகளின் தாக்கங்களினாலேயே இந்த அழிப்பு நிகழ்த்தப்பட்டது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி நிமால் லெவ்கே அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்டதே என்று குறிப்பிட்டிருந்தார்.
விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதில் புலனாய்வு முக்கிய பங்கை வகித்திருந்தது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இந்த விடயத்தில் தனிப்பட்ட ரீதியாக அக்கறை கொண்டிருந்தார்.
நாட்டின் எல்லா அரச புலனாய்வு அமைப்புகளையும் அவர் தனிப்பட்ட ரீதியாக ஒருங்கிணைத்தது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தந்தது.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சோ்ந்த கீழ் மட்டத்தினருடனும் கூட அவர் அவ்வப்போது கலந்துரையாடி ஊக்குவித்தார்.
சாதகமான புலனாய்வு உள்ளீடுகள், தீவிரவாத முறியடிப்பு பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் என்று அவர் உறுதியாக நம்பினார்.
தொழில்நுட்ப புலனாய்வில், விடுதலைப்புலிகளின் இரகசிய சமிக்ஞை குறியீடுகளை நாம் இனங்கண்டு கொண்டது முக்கியமானது.
விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவினர், விடுதலைப்புலிகளின் சங்கேத குறியீட்டு முறையை இனங்கண்டனர்.
எமது நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் அவர்களின் தொடர்பாடல் இடைமறிக்கப்பட்டது.
அதன்மூலம் காத்திரமான தொழில்நுட்ப புலனாய்வுமுறை கட்டி எழுப்பப்பட்டது.
தொழில்நுட்ப புலனாய்வில் ஜி.ஐ.எஸ் எனப்படும் புவியில் தகவல் முறை, ஜி.பி.எஸ் எனப்படும் புவிநிலை காட்டி என்பன கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் பெரும் உதவியாக இருந்தன.
இது மிக உயர்ந்த வெற்றியையும், நடவடிக்கைகளுக்கு திட்டமிடும் போது படையினர் மற்றும் தளபதிகளுக்கு தன்னம்பிக்கையையும் கொடுத்தது. இவ்வாறு அவர் எழுதியிருந்தார்.
வெளிப்படையாக நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப்போரைத் தான் பலருக்குத் தெரியும்.
ஆனால் இரகசியாக நடந்து கொண்டிருந்த புலனாய்வுப் போர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கை வகித்தது என்பது வெளியே அதிகம் தெரியாத இரகசியம்.
இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல புலனாய்வு அமைப்புகள் செயற்படுகின்றன.
இராணுவம், விமானப்படை, கடற்படை என்பன தனித்தனியாக புலனாய்வு அமைப்புகள கொண்டுள்ளன. பொலிஸ் திணைக்களத்தில், அரச புலனாய்வுச் சேவை, அதில் உள்நாட்டு புலனாய்வுப் பணியகம், வெளிநாட்டுப் புலனாய்வுப் பணியகம் என இரண்டு பிரிவுகள், விசேட அதிரடிப்படைக்கு தனியான புலனாய்வுப் பிரிவு என்பன உள்ளன.
இவை தவிர பயங்கரவாத தடுப்பு பிரிவும் ஒரு புலனாய்வு அமைப்பாகவே செயற்படுகிறது.
இப்படி அரச பாதுகாப்புக் கட்டமைப்பில் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இருந்தன.
இவற்றை ஒருங்கிணைத்து, கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்தது. சாதகமான பெறுபேற்றைக் கொடுத்தது என்பது முன்னாள் கட்டளை அதிகாலி நிமால் லெவ்கேயின் கருத்து.
இந்த விடயத்தில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் பங்கு முக்கியமானதாக இருந்தது. என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னரும் இவ்வாறு புலனாய்வு அமைப்புகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடந்திருந்தன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை.
1984ம் ஆண்டு வரை இலங்கையில் பொலிஸ்தான் உள்நாட்டுப் புலனாய்வுப் பணிகளுக்கு பொறுப்பாக இருந்தது.
அதில் சிறப்பு பிரிவு தான் புலனாய்வு வேலைகளைக் கவனித்தது.
பின்னர் அது புலனாய்வு சேவை பிரிவாக மாறியது.
1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் எழுச்சியை அடுத்து புலனாய்வுக் கட்டமைப்பை முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன ஒருங்கிணைத்தார்.
இதன்படி இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகளை ஒன்றிணைத்து தேசிய புலனாய்வுப் பிரிவு 1984ல் உருவாக்கப்பட்டது.
இதுவே 2006ல் அரச புலனாய்வுச் சேவையாக பெயர் மாற்றப்பட்டது.
1984 இலேயே நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை அப்போது அரசாங்கத்தினால் தடுக்க முடியவில்லை.
அதேவேளை 2006ல் அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட போது விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை.
இதில் பாதுகாப்புச் செயலர் காட்டிய தனிப்பட்ட ஈடுபாடு முக்கியம் பெறுகிறது.
ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி என்ற வகையில் அவர் கொண்டிருந்த துறை சார்ந்த அனுபவம் இதற்குக் கைகொடுத்திருந்தது.
அதுமட்டுமன்றி 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட புலனாய்வுக் கட்டமைப்பு மாற்றங்களையும் அவர் உள்வாங்கியிருந்தார்.
அல்கொய்தாவின் அந்தத் தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறித்த எச்சரிக்கைகள் முன்னரே அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகளுக்குக் கிடைத்திருந்த போதிலும் அவை ஒன்றிணைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படவில்லை. இதனால் தான் செப்படம்பர் 11 தாக்குதலை பின்லேடனால் இலகுவாக ஒருங்கிணைக்க முடிந்தது.
அந்த மிகப்பெரிய தாக்குதல் அமெரிக்காவை மட்டுமன்றி உலகத்தையே உலுக்கிப் போட்டது.
இதன் பின்னர் தவறுகளைக் களைய முற்பட்ட அமெரிக்கா, செய்த முக்கியமான மாற்றம் தனது உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்டது தான்.
சுமார் 14 புலனாய்வு அமைப்புள் ஒன்றிணைக்கப்பட்டு பரிமாறப்படும் தகவல்கள் ஒன்றிணைக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும் மத்திய நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இது அமெரிக்காவுக்கு சாதகமான விளைவைக் கொடுத்துள்ளது.
2011ற்குப் பின்னர் எந்தவொரு தாக்குதலையும் அமெரிக்கா எதிர்கொள்ளாததற்கு இது முக்கிய காரணம் என்பதே பாதுகாப்புத்துறை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அதேவேளை இந்தியா இன்னமும் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இத்தகைய ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளாதது முக்கிய காரணம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
புலனாய்வுப் பிரிவுகள் அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதால் மத்திய மாநில புலனாய்வுப் பிரிவுகளுக்கு இடையில் சீரான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியாத நிலை இந்தியாவில் உள்ளது.
ஆனால் 2006ல் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க அனுபவங்களைக்கொண்டு தனிப்பட்ட ரீதியாக புலனாய்வுப் பிரிவுகளை ஒருங்கிணைத்திருந்தார்.
அமெரிக்காவில் அவர் பெற்றிருந்த அனுபவங்கள் அதற்குத் துணையாக அமைந்தன.
இதனால் தான் நான்காவது கட்ட ஈழப்போரிவ் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினால் போர்முனைக்கு அப்பால் பெரிய தாக்குதல்களை செய்து திசைதிருப்ப முடியாமல் போனது.
3வது கட்ட ஈழப்போருடன் ஒப்பிடுகையில் இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தாக்குதல்களும் செயற்பாடுகளும் சொற்பமானவை என்றே கூறலாம்.
சமாதான காலத்தில் நன்கு தயாரிப்புகளை மேற்கொண்டிருந்த போதிலும் அவர்களால் தமது அழிவுகளை தடுக்கின்ற அளவுக்குச் செயற்பட முடியாமல் போனது.
அதுமட்டுமன்றி சரத் பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் மீதான தாக்குதல்கள் தோல்வியில் முடிந்து போனது புலிகள் மீதான அவர்களின் நடவடிக்கைகளில் தீவிரத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது.
விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பையுமே அழித்துப் போடுகின்ற அளவுக்கு புலனாய்வு கட்டமைப்பு ஒருங்கணைப்பு இலங்கை அரசுக்கு கைகொடுத்திருந்தது.
விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிற காரணிகளும் துணைநின்றன.
இராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகித்தன என்ற பேதிலும் இந்தப் புலனாய்வு ஒருங்கிணைப்புத் தான் இவற்றிற்கெல்லாம் மூலாதாரமாக இருந்தது என்பதே உண்மை.
விமானப்படை வேவு விமானங்கள் மூலம் பிடித்த படங்களை இராணுவத்திடம் கையளிக்காது போயிருந்தால், இராணுவப் புலனாய்வுப் பிரிவு தமக்கு கிடைத்த புலிகளின் ஆயுதக் கப்பல்கள் குறித்த தகவல்களை கடற்படைக்குப் பரிமாறியிருக்காது போயிருந்தால், இப்படி எத்தனையோ ஒத்துழைப்புகள் சாத்தியமற்றுப் போயிருந்தால், விடுதலைப் புலிகளின் அழிவு கூட நிச்சயமற்றதாகவே மாறியிருக்கும்.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten