தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 februari 2013

திருப்பி அனுப்பப்படுபவர்கள் இலங்கையில் சித்திரவதை செய்யப்படுவதற்கு ஆதாரம் இல்லை! பிரிட்டிஷ் அரசு !!


இலங்கை தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை அவர்களது நாட்டுக்கு வழமையாக திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுவது போன்று, அப்படியாக திருப்பி அனுப்பப்படுபவர்கள் சில சந்தர்ப்பங்களில் இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகுகிறார்கள் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது என்று இலங்கை சென்றுள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டயர் பேர்ட் கூறியுள்ளார்.
கொழும்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட இன்று வரை இலங்கையில் மனித உரிமைகள் குறித்த கவலைகள் பரவலாக காணப்படுகின்றன.
பிரிட்டனில் அரசியல் தஞ்சத்துக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்படும் மக்களை, குறிப்பாக தமிழர்களை இலங்கை அரசாங்கம் சித்திரவதை செய்கிறது என்பதற்கு மருத்துவ ரீதியான ஆதாரம் இருக்கிறது என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட freedom from torture (சித்ரவதைகளில் இருந்து விடுதலை) மற்றும் அமெரிக்காவின் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகிய அமைப்புக்கள் கூறியுள்ளன.
ஆனால், இலங்கை சென்றிருக்கும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் அலிஸ்டயர் பேர்ட் அவர்கள், இது குறித்து ஒவ்வொரு விடயமாக ஆராயப்பட்டதாகவும், அச்சங்கள் இருக்கும் பட்சத்தில் அவை குறித்து நீதிமன்றங்களுக்கு அரசாங்கம் அறிவித்து வந்திருக்கிறது என்றும் பிபிசியிடம் கூறியுள்ளார்.
தவறாக நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக காணப்பட்டால், அவர்கள் நீதிமன்றங்களால் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்.
அப்படியான பிரச்சினை இல்லாத பட்சத்தில்தான் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். இப்படியான விடயங்கள் குறித்து எங்களுக்கு நேரடியான ஆதாரம் எதுவும் கிடையாது.'' என்றார் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்.
ஆனால், மிகவும் சிரமப்பட்டு சேகரிக்கப்பட்டு, தம்மால் கொடுக்கப்பட்ட ஆதாரங்களை ஏன் நம்ப முடியவில்லை என்பதற்கு பிரிட்டனால் விளக்கம் கூற முடியவில்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
திரும்பி வருபவர்களை பாதிப்புக்குள்ளாக்குவதாகக் கூறப்படுவதை இலங்கை மறுக்கிறது.
அடுத்த நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் எந்த மட்டத்திலான பிரிட்டிஷ் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து இப்போதே முடிவு செய்ய முடியாது என்றும் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மேம்படாவிட்டால், அந்த மாநாட்டில் இருந்து தாம் விலகி இருப்போம் என்று கனடாவின் பிரதமர் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten