அவுஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங் (Geelong) நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக் கம்பத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
சிறிலங்காவின் சுதந்திரநாளைப் புறக்கணித்து, தமிழ்மக்களின் இறைமையை வலியுறுத்தி தமிழீழத் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (04.02.2013) அன்று நடைபெற்றது.
மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங் (Geelong) நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக்கம்பத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
பழமை வாய்ந்த ஜீலோங் தொழிற்சங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் தனது அக்கறையையும் ஆதரவையும் கடந்த காலங்களில் தெரிவித்து வந்துள்ளது.
இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின.
ஜீலோங் தொழிற்சங்கத்தின் செயலர் Tim Gooden தனதுரையில், தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர் இனப்படுகொலையை விளக்கி, தமிழினத்தின் விடுதலையின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.
அத்தோடு தொழிற்சங்கவாதிகளான தாம் எவ்வகையில் தமிழரின் உரிமை மீட்புப் போராட்டத்தை ஆதரிக்கின்றோம் என்றும் விளக்கினார்.
மேலும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மெத்தனப்போக்கையும், எதிர்க்கட்சியின் சிறிலங்கா அரசுடனான நெருக்கத்தையும் சாடினார்.
அடுத்து, தமிழத் தேசியச் செயற்பாட்டாளர் கரன் மயில்வாகனம் அவர்கள், இக்கொடியேற்றல் நிகழ்வு குறித்தும் தமிழீழத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்தும் விளக்கினார்.
தமிழீழத் தேசியக்கொடி பற்றிய சுருக்கமான குறிப்புக்களையும், இக்கொடியேற்றல் நிகழ்வை சிறிலங்காவின் சுதந்திரநாளில் தெரிவு செய்தமைக்கான காரணத்தையும் விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி பற்றிய விளக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், தீவிர தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளருமான திரு. டோமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் வாசித்தார்.
இறுதி நிகழ்வாக ஜீலோங் தொழிற்சங்கக் கட்டடத்தில் தமிழீழத் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
கொடிப்பாடல் இசைக்க, தமிழீழத் தேசியக்கொடியை Tim Gooden அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஜீலோங் நகரிலேயே இரண்டாவது உயரமான கொடிக்கம்பத்தில் தமிழீழத் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.
இக் கொடி சில வாரங்களுக்கு தொடர்ந்தும் தொழிற்சங்கக் கட்டடத்தில் பறந்து கொண்டிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten