நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் சிதைந்து சிதறப்போவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இப்பொழுது தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 17ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
புதிய முகங்களை அறிமுகப்படுத்தியும், பழையவர்களை அப்படியே வைத்தும் கட்சிகள் வாக்கு வேட்டையில் இறங்கவுள்ளன.
குறிப்பாக சிங்களப் பிரதான கட்சிகளில் வாக்கு சேகரிப்பின் பிரதான கோசம், புலி வருகிறது என்பதாக அமைந்துள்ளது. மகிந்த தரப்பினர் மீண்டும் நாட்டில் பிரிவினை வாதம் தலைதூக்குவதாக கோசம் போடத் தொடங்கியுள்ளனர்.
ரணில் தலைமையிலான மங்கள சமரவீர, ஐக்கிய தேசிய கட்சியினர் சர்வதேசத்தில் உள்ள புலிகளை அழிப்பதாக கூறி களத்தடுப்பில் இறங்கியிருக்கின்றார்கள்.
ஆக இம்முறையும் தேர்தலின் பிரதான கோசம் புலி அழிப்பாக இருக்கின்றது. இது முன்னாள் போராளிகளையும், தமிழ் இளைஞர்களுக்குமான மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.
இது சிங்களத்தரப்பின் பிரதான தேர்தல் உத்தி.
இதுவொருபுறமிருக்க, தமிழர் தரப்பின் தேர்தல் களமோ படுமோசமாக மாறியுள்ளது. இப்பொழுது தமிழ்மக்களுக்கு இருக்கிற ஒரே ஒரு குழப்பம் யாரை தேர்வு செய்வது என்பதாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரையா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரையா? அல்லது ஈபிடிபியினரையா? முன்னாள் போராளிகளின் புதிய கட்சியின் உதயமா என்பதில் மக்கள் கொடூரமான சிக்கலில் மாட்டியிருக்கின்றார்கள்.
2009ம் ஆண்டு ஒரு இனத்தின் அழிப்போடு சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழர்களின் உரிமைப்போராட்டம் மீண்டும் உள்நாட்டு பிரச்சினையாக மாறிவிடுமோ என்கின்ற அச்சம் வேறு உருவாகியிருக்கின்றது.
புலிகளின் மௌனிப்பிற்கு பின்னர் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை கையிலெடுத்து செயலாற்றுவதற்கென்று இதுவரை எவரும் முன்வரவில்லை.
சிங்களம் தமிழின எதிர்ப்பில் குறியாகவே அது முன்னின்று நாடாளுமன்றம் சென்று அங்கு எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தி காணி பொலிஸ் அதிகாரத்தையாவது தாருங்கள் என்று கெஞ்ச வைத்திருக்கின்றது தமிழர் தரப்பை. தமிழீழம் கேட்ட நாம் இப்பொழுது கூனிக்குருகி காணி பொலிஸில் வந்து நிற்கின்றோம்.
ஆனால் இன்னமும் ஒற்றுமைப்படாமல். நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதையப்போவது உண்மை. ஏற்கனவே யாழ்ப்பாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையானது 9ல் இருந்து 7ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழர்களின் கட்சிகள் ஒரே கொள்கைக்காக போராடினாலும் அவர்கள் ஓரணியில் சேராமல் இருப்பது இன்றைய தமிழர் அரசியல் சூழலில் நல்லதல்ல. நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இனத்தின் உரிமையில் சென்று கைவைப்பதானது ஆரோக்கியமான செயலல்ல.
நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலினூடாக எப்படியேனும் நாடாளுமன்றத்திற்குள் மகிந்த ராஜபக்ச நுழைந்துவிடுவார். அதற்கான அனுமதியை இந்நாள் ஜனாதிபதி வழங்கியும் இருக்கின்றார்.
இனி நடக்கவிருப்பவைகளை சொல்லித் தெரியவேண்டும் என்றில்லை. எங்கள் இனத்தின் உரிமை விடையத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டாக வேண்டும். இப்பொழுது காலம் வகுத்துள்ள சிக்கலுக்குள் நாமும் சேர்ந்து வீழ்வது என்பது முன்னால் கிணறு உண்டு என்பதை தெரிந்து கொண்டே சென்று வீழ்வதைப்போன்றது.
சிங்களத்தரப்பு தனது கொள்கைகளில் குறிக்கோளாகவே இருக்கின்றது. அது எந்த கட்சியானாலும். ஆனால் எங்களால் மட்டும் இன்னமும் ஒன்றினைய முடியவில்லை.
கட்சி வேறுபாடுகளை களைந்து பேரம் பேசும் சக்தியாக தமிழர்களின் அரசியல் பேசும் பலம் கட்டியெழுப்பப்படவேண்டும். தமிழ் மக்கள் என்றைக்கும் சோரம் போகாமல் நமக்கு வாக்களிக்க தயாராகத் தான் இருக்கின்றார்கள். அவர்களை எவராலும் இலகுவில் தேசிய கொள்கைகளில் இருந்து விலத்தி எடுத்து கொண்டுவர முடியாது.
அபிவிருத்தி மாயைக்குள் வீழ்பவர்கல்ல தமிழர்கள் என்பதை யுத்தத்திற்கு பின்னரான எத்தனையோ தேர்தல்களில் அவர்கள் நிரூபித்துக்காட்டியிருக்கின்றார்கள். ஆனால் தமிழர் அரசியல் கட்சிகள் தான் இன்னமும் ஒன்றுபடாமல் தனித்தனியாகவே இருக்கின்றன.
நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழர் தரப்பு ஒன்றாக நின்று தேர்தலை எதிர்கொள்ளவில்லையாயின் குறுகிய காலத்தில் நாடாளுமன்றத்தில் நமக்கான பலம் வெகுவாக குறைந்துவிடும்.
இப்பொழுது மைத்திரி தனக்கான அதிகாரங்களை குறைத்து அதை நாடாளுமன்றத்திடம் கொடுத்தும்விட்டார். அதனால் மைத்திரியிடமும் எதனையும் கேட்க முடியாது.
எனவே வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளின் கையிலேயே தங்கியுள்ளது. எங்களின் நாடாளுமன்றப்பிரதிநிதித்துவம் என்பது குறைந்து கொண்டு செல்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இல்லையேல் இழப்புக்களோடு சர்வதேசம் ஏறிய எங்கள் உரிமைப் போராட்டம் மீண்டும் உள்நாட்டுப் பிரச்சினையாக நமது நாடாளுமன்றத்திற்குள்ளேயே வந்து சேர்ந்துவிடும். கவனம்.
Geen opmerkingen:
Een reactie posten