சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இன்று திருமலைக்கு வரவுள்ளார்.
இவரது வருகைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும், ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் இடம்பெற்று வருகின்றன.
சென்னை, கோவை, சேலம், மதுரை, இராமநாதபுரம், புதுவை, சிதம்பரம் என்று பரவலாக இடம்பெறும் போராட்டங்களில் சிறிலங்கா அதிபரின் உருவபொம்மைகள் எரிக்கப்படுகின்றன.
இத்தகைய போராட்டங்களில், தமிழ் அமைப்புகள் மட்டுமன்றி, பல்கலைக்கழக, கல்லுரி மாணவர்களும் நூற்றுக்கணக்கில் பங்கெடுத்து வருகின்றனர்.
பல இடங்களில் சட்டவாளர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதால், நீதிமன்றப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று இந்தப் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மாலை திருப்பதிக்கு வரும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்புக் கருதி இரவோடு இரவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபரின் வருகை மற்றும் அவரது பயண ஒழுங்குகள் குறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் சொலமன் ஆரோக்கியராஜ் தகவல் வெளியிட்டுள்ளார்.
“சிறிலங்கா அதிபர் தனி விமானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார்.
மாலை 4.40 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு 5.25 மணிக்கு திருமலையைச் சென்றடைவார்.
அங்கு பத்மாவதி விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள, சிறிகிருஸ்ணா மாளிகையில் இரவு தங்குகிறார்.
நாளை அதிகாலை 2.20 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கச் சென்று, சுப்ரபாத சேவையில் பங்கேற்று, தரிசனம் செய்கிறார்.
பின்னர் விடுதிக்குத் திரும்பும் அவர் அங்கு ஓய்வுவெடுத்து விட்டு, காலை 8.35 மணிக்கு திருமலையில் இருந்து புறப்பட்டு 9.20 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் செல்கிறார்.
அங்கிருந்து நாளை காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் கொழும்பு செல்கிறார்.“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரையிலும், அவர் தங்கும் வளாகத்திலும் அதிரடிப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten