தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 februari 2013

ஜெனிவாவில் அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்க இந்தியா முடிவு?


இராஜதந்திரச் சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்­கைக்­கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவர­வுள்­ள பிரேர­ணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது.
ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்பமாவதற்கு முன்­னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விட­யத்­­தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்­ட­னும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்­கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளி­யாகியுள்ளது.
அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெ­ரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேர­ணைை­ய வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்­கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்­கா­வி­டம் கோரியுள்ளது என அறியமுடிகின்றது.
அண்மையில் நடைபெற்ற இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் எட்டாவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் டில்லி சென்றிருந்தவேளை, ஜெனிவா பிரேர­ணையை தமது அரசு ஆதரிக்கவுள்ள விடயத்தை இந்திய அதிகாரிகள் கோடிகாட்டியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முழுமையாக வெளிப்படுத்தும்வரை தாம் சர்வதேசத்தின் பக்கம் நிற்கவேண்டிய நிலை உள்ளது என்றும் பீரிஸிடம் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்­ளனர்.
எனினும், தமது பக்க நியாயங்களைத் தொடர்ச்­சியாக இந்தியாவிடம் எடுத்துரைக்கும் இலங்கை அரசு, அந்நாட்டின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கடந்த வியாழக்கிழமை இவ்விடயத்தை உறுதிப்படுத்தியிருந்தார்.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை சர்வதேசத்தின் உதவியுடன் முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தி கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை எதிர்த்த நாடுகள் சிலவும் இம்முறை இலங்கைக்கு எதிராகத் திரும்பும் அபாயமுள்ளது என்றும், சீனா, கியூபா, ரஷ்யா, சவூதி அரேபியா உள்ளிட்ட இலங்கை சார்பான நாடுகள் சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் வெளியேறியுள்ளதால் மாநாடு இலங்கைக்குப் பெரும் சவாலாக அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசும் தயாராகிவருகின்றது. இதற்காக தமது இராஜதந்திரிகளையும் அது உஷார்படுத்தியுள்ளது.
மார்ச் மாதம் 15ஆம் திகதி இலங்கை விவகாரம் ஜெனிவாவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை தெரிந்ததே.
கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை 24 நாடுகள் ஆதரித்ததுடன், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் எட்டு நாடுகள் மறைமுகமாக ஆதரவைத் தெரிவித்தன. 15 நாடுகள் பிரேரணையை எதிர்த்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மூவரடங்கிய அமெரிக்க பிரதிநிதிகள் குழு, உறுதியாக நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்­டத்தக்கதாகும். இந்நிலையிலேயே, இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இராஜதந்திர மட்டத்தில் கசிந்துள்ளது.
தமிழகத்தில் எழும் எதிர்ப்பலைகள், இந்தியாவின் இதர மாநிலங்களில் இடம்பெறவிருக்கும் தேர்தல்கள் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டே இலங்கையை எதிர்க்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten