தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 februari 2013

விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை காப்பாற்ற இலங்கை தவறிவிட்டது: ஐ.நா.குற்றச்சாட்டு !!


இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதாக கொடுத்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றத் தவறிவிட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் விசாரணை தெளிவற்று காணப்படுவதாகவும் சுயாதீனம் இல்லை எனவும் பாரபட்சமற்றதாக இல்லை எனவும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ள 18 பக்க அறிக்கையிலேயே இலங்கை மீது மோசமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஏ.எப்.பி. இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த செப்டெம்பரில் இலங்கைக்கு வந்த நிபுணர் குழுவால் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு தசாப்தங்களாக நிலவிவரும் இன முரண்பாட்டுக்கு நீதி வழங்க உண்மையான விசாரணை பொறிமுறை ஒன்றை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஒகஸ்ட் மாதம் மூதூரில் கொல்லப்பட்ட தொண்டர் பணியாளர்கள் 17 பேர் கொலை குறித்து உரிய விசாரணை நடாத்தப்படும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியையும் நிறைவேற்ற தவறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்த உள்நாட்டு விசாரணையில் வெளிப்படை தன்மை இல்லை என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1972ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்படும் வரை 100,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. கணிப்பீடுகள் கூறுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தம் நடந்த  கடைசி ஒரு மாதத்தில் 40,000 பொதுமக்கள் படையினரால் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை மறுத்தது.
கடந்த ஆண்டிலும் தொடர்ந்த சட்டத்திற்கு முரணான கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் இடம்பெற்றன. இவ்வாறான சம்பவங்கள் இலங்கை மீது போர் குற்ற விசாரணையை வலியுறுத்த வலுச் சேர்ப்பதாக ஐநா நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டது எனவும் அவைகளை வழங்க கட்டாயப்படுத்தவும் ஜெனீவாவில் தற்போதைய மனித உரிமைகள் பேரவையின்  அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக மற்றொரு கண்டன தீர்மானம் கொண்டுவர போவதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் சுதந்திர ஊடகங்கள் மீதான தாக்குதல் தொடர்வதாகவும் கைதிகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கொலை செய்யப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆங்கில இணைப்பு
2ம் இணைப்பு
போரில் இறந்த உறவுகளை நினைவுகூர பொதுமக்களுக்கு வழி இல்லை!
இலங்கையில் போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கான விடயத்தில் இலங்கை இராணுவத்துக்காக அருங்காட்சியகங்களும், நினைவிடங்களும் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் தமது உறவுகளை நினைவு கூர்வதற்கு தமிழ்மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் எதுவும் அங்கு இல்லை என்றும் ஐநா இலங்கை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
விடுதலைப் புலிகளின் மயானங்கள் அழிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் சில சமயங்களில் தமது உறவுகளை நினைவு கூர்வதில் இருந்து தடுக்கப்பட்டதாகவும் ஐநா அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இறுதிப் போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு விடுமுறை பங்களாவை இராணுவம் நிர்மாணித்தமை குறித்தும்  ஐநா கவலை வெளியிட்டுள்ளது.
ஆனால், ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் இந்தக் குற்றச்சாடுக்களை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
ஐநா அமைப்பினால் குறை கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களிலும் தான் பல முன்னேற்றங்களைக் கண்டிருப்பதாக இலங்கை அரசு  கூறியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten