'எனக்கு உலக நாடுகள் எங்கும் எதிர்ப்புக்கள் இருக்கின்றது. அதற்காக நான் அஞ்சப் போவதில்லை' என்று திருப்பதியில் வைத்து மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உண்மையில், இது ராஜபக்சவின் அச்சத்தின் வெளிப்பாடே.
பாரிய பொருளாதார வீழ்ச்சியும், அரசுக்கு எதிரான மக்களது கொந்தளிப்பும் மகிந்த அரசுக்கு உள்நாட்டில் பலத்த நெருக்கடிகளை உருவாக்கிவரும் நிலையில், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா கொண்டுவரும் கண்டனத் தீர்மானத்திலிருந்து இந்தியாவின் கரம் பற்றிக் கரையேறும் தனது இறுதி முயற்சியும் தோல்வியைக் கண்டதனால் சிங்கள அதிபர் கலங்கித்தான் போயுள்ளார்.
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை முறியடிக்கும் சிங்கள ஆட்சியாளர்களது அத்தனை வியூகங்களும் பலனற்றுப் போனதை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவீந்திரநாத் ஆரியதாஸ அவர்கள் புலம்பெயர் தமிழர்களை நோக்கி விடுத்த வேண்டுகோளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
இது நாட்டிற்கு கஷ்டமான காலமாகும், வெளிநாடுகளில் வாழும் சிலர் தங்களது சுயலாபகங்களுக்காக இலங்கையின் வளர்ச்சியை தடுக்கும் முகமாக பொய் பிரசாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.
இலங்கையர்களான நமக்குள் எத்தகைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் நலனை கருதி அனைவரும் ஒன்றுபட்டு ஜெனிவாவில் மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளை முறியடிக்க வேண்டும்' என்ற வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது ஒரு சரணாகதி நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதையே உணர்த்துகின்றது. அதைத் தெளிவாகக் கூறப்போனால், புலம்பெயர் தமிழர்களுடன் ஒரு யுத்த நிறுத்தத்திற்கான வேண்டுகோளாக இதனைக் கருதலாம்.
அதாவது, இந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும்வரை சிங்கள ஆட்சியாளாகளுக்கு புலம்பெயர் தமிழர்களது ஆதரவு தேவைப்படுகின்றது.
2002 பெப்ரவரியில் நோர்வே மூலமாக விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்க வைத்து, அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி ஈழத் தமிழினத்தின் மீது இனப் படுகொலையை நிகழ்த்தியது போன்ற இன்னொரு போர் நிறுத்தத்திற்கான முயற்சியைப் தென்னாபிரிக்கா மூலமாக மேற்கொள்ள முனைகின்றது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக, ஜெர்மனியின் பேர்ளின் நகரில் நோர்வே பாணியில் தமிழ் அமைப்புக்களுடன் ஒரு சமரச முயற்சி தென்னாபிரிக்காவால் முன்னெடுக்கப்பட்டது.
இரண்டாவது சந்திப்பாக முன்னெடுக்கப்பட்ட இதில். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சிவில் சமூகம் உட்பட்ட பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் கலந்து கொண்டன.
தமிழ் அரசியல் தளத்தில் ஒரு இணக்கப்பாட்டினை உருவாக்கி, அதன் மூலமாக ஒருமித்த கருத்தாக சிங்கள தேசம் இணங்கக்கூடிய திட்டத்தில் புலம்பெயர் தமிழர்களையும் கொண்டு சேர்ப்பதே தென்னாபிரிக்காவின் தெளிவான நோக்கமாக உள்ளது. ஆனாலும், இதற்குள் புதைந்துபோகும் நிலையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இல்லை என்றே நம்பப்படுகின்றது.
மகிந்த ராஜபக்சவை இதுவரை சர்வதேச அரங்கில் காப்பாற்றி வந்த இந்தியா இந்தத் தடவை அப்படியானதொரு முடிவை எடுக்க முடியாத தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம் உறக்க நிலையில் இருந்த தமிழக மக்களின் உணர்வைப் பூதாகரமாக வெடிக்க வைத்துள்ளது. அடுத்த ஆண்டில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் காங்கிரஸ் கட்சியினால் தமிழக மக்களின் உணர்வுகளுடன் தொடர்ந்தும் தப்பாட்டம் போட முடியாது.
ஜெனிவாவில், சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை எதிர்த்தாலோ அல்லது, கடந்த வருடத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் மேற்கொண்டது போன்று தில்லாலங்கடி வேலைகளைச் செய்தாலோ தமிழகத்தில் அதன் எதிர்வினையை காங்கிரஸ் கட்சி அறுவடை செய்ய வேண்டி வரும் என்பதை இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகவே உணர்த்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், இந்திய அரசு ஜெனிவாவில் என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழக மக்களே உள்ளனர். இதனால்தான், சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நடாத்திய தமிழினப் படுகொலையின் பங்காளரான கலைஞர் கருணாநிதியும் அடுத்த தேர்தலை நோக்கி டெசோ மாநாடு, தீர்மானம், கறுப்புச்சட்டைப் போராட்டம் என மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.
முள்ளிவாய்க்கால்வரை அடிபணியாத வீரத்துடன் தமிழீழ இலட்சியத்திற்காகக் களமாடி வீழ்ந்த விடுதலைப் புலிகளது தியாகம் வீணாகிப் போய்விடவில்லை. தமிழீழம் தோற்றுப் போகவில்லை. தமிழீழ விடுதலைப் போர், தன் வியூகத்தை மாற்றிக்கொண்டு இலங்கைத் தீவைக் கடந்து, தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. அதில், தமிழக மக்களது பங்கேற்பு அதிசயிக்கத் தக்கது. அதற்குச் சமாந்தரமாகப் புலம்பெயர் தமிழர்கள் பொங்கி எழ வேண்டிய தருணம் இது.
சிங்கள தேசம் வாழ்வா, சாவா போராட்டமாக இதனை உணர்ந்துகொண்டு, தனது முழு வல்லமையையும் ஜெனிவா நோக்கித் திருப்பியுள்ளது. அதனை முறியடிக்கும் பலம் புலம்பெயர் தமிழர்களிடமே உள்ளது.
பெரும் சவால்கள் நிறைந்த இறுதிக் களத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழினம் தோற்றுவிடுமாக இருந்தால், இன்னொரு வரலாற்றுக் காலம் இனியும் கிட்டாது என்பதைப் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அகிம்சையின் உச்சத்தைத் திலீபன் பதிவு செய்தான். தியாகத்தின் உச்சத்தை மில்லர் பதிவு செய்தான். வீரத்தின் உச்சத்தை விடுதலைப் புலிகள் பதிவு செய்தார்கள். இப்போது, எங்களது முறை. புலம்பெயர் தமிழினம் எதைப் பதிவு செய்யப் போகின்றது? என்பதே உலகத்தின் எதிர்பார்பாகவும், தமிழினத்தின் அங்கலாய்ப்பாகவும் இருக்கின்றது.
கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வுக்காக ஏங்கும் தமிழீழ மக்களை மீட்கப் போகின்றோமா...? வாழ்வையே தமிழீழத்திற்காக அர்ப்பணித்து வீர காவியமான மாவீரர்களது தமிழீழ இலட்சியத்தை வென்றெடுக்கப் போகின்றோமா...? விடுதலைப் பயணத்தின் நிழல்களாக இருந்து, அந்த மண்ணிலே கொடியவர்களின் குண்டுகளால் வீழ்த்தப்பட்ட எங்கள் தேசத்துக் காவலரண்களைக் கௌரவிக்கப் போகின்றோமா...? தமிழிச்சியாய்ப் பிறந்த காரணத்தினாலேயே சிங்களக் காமுகர்களினால் கிழித்தெறியப்பட்ட எங்கள் சகோதரிகளின் அவலக் குரல்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப் போகின்றோமா..? நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
எம்மால் முடியும்! 83 வரை எம்மை அடித்தவனைத் திருப்பி அடித்த எம்மால், முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு நீதி தேடவும் முடியும்! 21 நாடுகள் திரண்டு வந்தபோதும், தனி ஒற்றை இனமாகக் களமாடிய எம்மால் முடியும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் எழுந்தே நிற்க!
இது எங்களுக்கேயான எங்களது காலம். எதிரி திகைத்துப்போய் நிற்கும்படியாக எங்கள் பலத்தை ஒன்றாக இணைத்துப் போராடவேண்டிய வரலாற்றுக் காலம் இது. முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்று உலக நாடுகளுக்கு அறைகூவும் காலம் இது. எதிர்வரும் மார்ச் 04, ஜெனிவா ஐ.நா. முன்றலில் நாம் நடாத்தும் போர், உலகத் தளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் பாரிய எழுச்சியை உருவாக்கப் போகின்றது. அது தமிழீழத்தை நிச்சயம் மீட்டே தீரும்!
தமிழா! நீ தமிழனாகப் புறப்பட்டு வா, ஜெனிவா போர்க் களத்திற்கு!
- சுவிசிலிருந்து கதிரவன்
Geen opmerkingen:
Een reactie posten