சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து போராட்ட இயக்கம், சமூக வலைத்தளங்களில் பரப்பரபடைந்துள்ளதோடு ஆறு லட்சத்தினை நெருங்கி வருகின்றது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரையில் காத்திரமாக தாக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இக்கையெழுத்து இயக்கம் ஐ.நாவைக் கோருகின்றது.
இந்நிலையில் பேஸ்புக், வட்ஸ் அப், டுவிட்டர் போன்ற பல்வேறு வலைதளங்களிலும் குறுஞ்செய்திகளிலும் இக்கையெழுத்து இயக்கத்துக்கான பரப்புரை தீவிரமடைந்துள்ளது.
'நிறைந்த மன வருத்தத்தோடுதான் இந்தச் செய்தியினை பதிவு செய்கின்றேன்' என வலைப்பதிவர்கள் பலரும் கையெழுத்துப் போராட்டத்துக்கு உந்துதலைக் கொடுக்கும் பொருட்டு பரப்புரை யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
www.tgte-icc.org எனும் இணைய மூலமாக ஆறு லட்சம் மின்னொப்பங்களை இக்கையெழுத்து இயக்கம் எட்டியுள்ள நிலையில், நேரடியாக பெறப்படும் ஒப்பங்களும் பல லட்சங்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கையெழுத்துப் போராட்டம் தோல்வியென சிங்கள ஊடகமொன்று எதிர்பரப்புரை மேற்கொண்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம், புலம், தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசங்களெங்கும் பல்வேறு தரப்பினரும் இக்கையெழுத்து இயக்கத்தினை முன்னெடுத்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
Geen opmerkingen:
Een reactie posten