பெவிக்கால் போட்டு ஒட்டியதைப் போன்று பதவி நாற்காலியில் அவர் ஒட்டிக் கொண்டிருந்தால், அதற்காக நாம் ஆச்சரியப்படவும் முடியாது. காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் இந்த விஷயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.
தார்மீகப் பண்புகளுக்கும் இவர்களுக்கும் என்றைக்குத்தான் தொடர்பிருந்தது?
ஒருவேளை ஊடகங்கள் கொடுக்கிற நெருக்கடியில் சுஷ்மா சுவராஜ் பதவி விலகினால், அதற்காக லலித் மோடியைக் காட்டிலும் அதிகமாகக் கவலைப்படுபவர் இன்னொருவர் இருக்கிறார்.
அந்த மலை விழுங்கி மகாதேவனோடு ஒப்பிட்டால், லலித் மோடி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஜுஜூபி என்றாகிவிடும். அந்த ம. வி. மகாதேவனின் பெயர் - மகிந்த ராஜபக்ச.
சர்வதேசத்தின் கிடுக்கிப்பிடியிலிருந்த ராஜபக்சவை பெயிலில் எடுக்க சோனியா சாம்ராஜ்யத்தால் இலங்கைக்கு ஒரு குழு அனுப்பிவைக்கப்பட்டதும், அந்தக் குழுவுக்குப் பெருமிதம் பொங்க ஸ்ரீமதி சுஷ்மா சுவராஜ் தலைமையேற்றுச் சென்றதும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? சோனியாவின் நிழல்தான் சுஷ்மாவோ என்று வியக்குமளவுக்கு இருந்தது, சுஷ்மாவின் ஒவ்வொரு நடவடிக்கையும்!
நேற்று நடந்ததும் நன்றாகவே நடந்தது....
இன்று நடப்பதும் நன்றாகவே நடக்கிறது.... நாளை நடப்பதும் நன்றாகவே நடக்கும்' என்று கொலைகார இலங்கைக்கு சர்வதேச அரங்கில் 'மெரிட் சர்டிபிகேட்' கொடுப்பதற்காகத்தான் அந்தக் குழு அனுப்பப்பட்டது.
சோனியாவின் அபிலாஷையை அப்பழுக்கில்லாமல் நிறைவேற்றிவிட்டுத்தான் திரும்பியது அந்தக் குழு. கொழும்பிலிருந்து அவர்கள் ஒன்றும் வெறுங்கையோடு புறப்பட்டுவிடவில்லை. ராஜபக்ச கொடுத்த பரிசுப் பொருளோடுதான் புறப்பட்டார்கள்.
இந்த விஷயத்தில் கூட, நம்மூர் நாச்சியப்பன், ரங்கராஜன் உள்ளிட்ட அத்தனை பேரையும் முந்திக் கொண்டார் சுஷ்மா. புரோட்டோ கால், பரோட்டா கால் எல்லாம் பார்க்கவில்லை சுஷ்மா. குழு உறுப்பினர்களுக்கே தெரிவிக்காமல், அலரி மாளிகைக்குப் போய், ராஜபக்சேவுடன் சிற்றுண்டி சாப்பிட்ட கணத்திலேயே பரிசுப் பொருளையும் பெற்றுக் கொண்டார்.
(அந்தப் பரிசுப் பொருட்களை எல்லாம் தங்கள் தங்கள் கட்சி அலுவலகத்தில் மேலே குறிப்பிட்ட மரியாதைக்குரிய தலைவர்கள் அனைவரும் ஒப்படைத்திருப்பார்கள் என்று நான் சர்வநிச்சயமாக நம்புகிறேன். நீங்கள் அப்படி நம்பாவிட்டால், கம்பெனி பொறுப்பல்ல!)
தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தைத் திரும்பப் பெறுவதாக மகிந்த ராஜபக்ச தன்னிடம் தெரிவித்தாரென்று சுஷ்மாஜி சொன்னதுதான் அப்போதைய தலைப்புச் செய்தி. (அப்படிச் சொல்லாவிட்டால், பரிசுப் பொருள் திரும்பப் பெறப்படுமென்று ராஜபக்ச தரப்பில் சொல்லி அனுப்பப்பட்டதா - என்பது குறித்து நமக்குத் தகவல் இல்லை!)
இந்தியாவுக்கு சுஷ்மாஜி வந்து சேர்வதற்குள்ளாகவே, 'தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற்றால், அதை வேறெங்கே கொண்டுபோய் நிறுத்துவது, இந்தியாவில் கொண்டுபோய் நிறுத்திவிடலாமா' என்றெல்லாம் ராஜபக்ச நக்கலடித்ததை இந்தியத்திருநாடு கண்டுகொள்ளவேயில்லை.
'ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்' என்கிற வள்ளுவத்துக்கு இலக்கணமாக இருந்தே தீருவது - என்று ஒற்றைக்காலில் நின்று யோகா செய்துகொண்டிருந்தது. (ஓஹோ.... மன்மோகன் ஆட்சியிலேயே யோகா ஆரம்பிச்சாச்சா! இந்தத் தகவலை ராகுலுக்கு யாராவது சொல்லுங்கப்பு!)
அப்போது, ஒன்றரை லட்சம் தமிழர் உயிர்களைப் பறித்த தங்கள் ஆருயிர் நண்பன் மகிந்த ராஜபக்சேவை பெயிலில் எடுக்க சுஷ்மாவைப் பயன்படுத்திய அதே சோனியா தான், 'சுஷ்மாவே வெளியேறு' என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்கிறார் இப்போது! லலித் மோடிக்கு பெயில் கொடுத்த சுஷ்மா விழிபிதுங்கிப் போய் முழித்துக் கொண்டிருக்கிறார்.
யாரை யார் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா? இருவரில் யார் புத்திசாலி? பயன்படுத்திக் கொண்டவரா, பயன்படுத்தப் பட்டவரா? அந்த இளிச்சவாய்த் தனத்துக்கு சுஷ்மா சார்ந்திருக்கும் அகில இந்திய அறிவாளிகள் கட்சி எப்படி ஒப்புதல் கொடுத்தது? இத்தனைக்கும், அந்தக் குழுவை அ.இ.அ.தி.மு.க. புறக்கணித்ததே.... அதைப் பார்த்த பிறகுமா என்ன நடக்கிறதென்பது பாரதீய ஜனதாவுக்குப் புரியாமல் போனது!
நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கவும், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழரின் தாய்மண் இயல்பாகத்தான இருக்கிறது - என்கிற பொய்யான அபிப்பிராயத்தை உலக அரங்கில் ஏற்படுத்தவும், ராஜபக்சவும் சோனியாவும் சேர்ந்து எப்படியெல்லாம் நாடகமாடியிருக்கிறார்கள்.... அந்த நாடகத்தில் யார் யாரை எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதற்கு இது ஒரு குட்டியூண்டு உதாரணம்... அவ்வளவுதான்!
சோனியாவுக்கும் சுஷ்மாவுக்கும் நிறைய ஒற்றுமைகள். இருவருக்குமே பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. சோனியா தானாகவே முன்வந்து 'பிரதமர் பதவி வேண்டாம்' என்று விலகிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சுஷ்மாவோ, பிரதமர் நாற்காலிக் கனவிலிருந்து வேண்டா வெறுப்பாகத்தான் விலகினார்.
உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த பிரபாகரனின் வயோதிகத் தாயார் பார்வதி அம்மாளை விமானத்திலிருந்து இறங்கக்கூட விடாமல், அப்போதிருந்த கலைஞரின் அரசு திருப்பி அனுப்பியதே... நினைவிருக்கிறதா? அந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கைக்கு ஒரே ஒருவார்த்தை கண்டனம் கூடத் தெரிவிக்காத தலைவிகள் - இந்த இரண்டு பேரும்தான்!
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா அணியில்தான் வைகோவின் ம.தி.மு.க. இருந்தது. அப்படியிருந்தபோதே, 'அமைய இருக்கிற அரசில், வெளியுறவுத் துறையை சுஷ்மாவிடம் கொடுத்துவிடாதீர்கள்' என்று நரேந்திர மோடியிடம் வைகோ அட்வான்சாகவே கேட்டுக்கொண்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் வைகோ எதற்காக பயந்தாரோ, அதுதான் நடந்தது. சுஷ்மாஜிக்கு வெளியுறவு அமைச்சர் கிரீடம் சூட்டப்பட்டது.
நடந்தது இனப்படுகொலை - என்கிற உண்மையை ஏற்கவோ, போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைதான் வேண்டும் - என்று வலியுறுத்தவோ சுஷ்மாஜியின் வெளியுறவுத் துறை ஒருபோதும் முன்வரவில்லை. அன்னை சோனியாவின் அடிச்சுவட்டைத்தான் மில்லிமீட்டர் மில்லிமீட்டராகப் பின்பற்றுகிறது.
எம் புலம்பெயர் உறவுகளின் தொடர் முயற்சிகளாலும், கல்லம் மேக்ரேவின் வலுவான ஆதாரங்களாலும், நவநீதம்பிள்ளை என்கிற இரும்புப் பெண்மணியின் உறுதியான நடவடிக்கைகளாலும்தான், இலங்கை செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்கிற கோரிக்கை வலுப்பட்டது.
இன்று இலங்கையின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது அந்தக் கத்தி. அந்த சர்வதேசக் கத்தி அறுந்து இலங்கையின் தலைக்குமேல் விழுந்துவிடாதபடி பார்த்துக் கொள்வது ஒன்றுதான், இந்தியாவின் தலையாய கடமையாக இருக்கிறது இன்றுவரை. நடந்த இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளி ஆயிற்றே...
இலங்கை என்கிற அந்தக் குட்டிச்சுவருக்கு முட்டுக் கொடுக்காமல் இருக்க முடியுமா? சோனியா சாம்ராஜ்யத்திலிருந்து சுஷ்மா சாம்ராஜ்யம் வரை அத்தனையும் இதைத்தான் செய்கிறது.
சென்ற மார்ச்சில் வெளியாக இருந்த, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ,நா,மனித உரிமைகள் பேரவை அறிக்கை தள்ளிப்போடப்பட்டதற்கு அடிப்படையாக இருந்தது இந்தியா தான்! அதன் பின்னணியில் இருந்தவர் சுஷ்மாஜியைத் தவிர வேறு எவராக இருக்க முடியும்!
இந்தியாவின் இந்தத் தொடர் துரோகத்தைப் பார்த்துப் பார்த்து நொந்துபோன நிலையில் தான், 2009 யுத்தம் தொடர்பாக இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார், வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசீதரன்.
"எங்களை அழித்துவிட்டு மௌனம் சாதிக்கும் இந்தியா யுத்தம் தொடர்பில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்கிற அனந்தியின் கோரிக்கை சுஷ்மாவின் செவியை எட்டவேயில்லை...... லலித் மோடிகளின் குரல் மட்டும்தான் எட்டுகிறது. இதுதான் கொடுமை!
இலங்கையில் மகிந்த ராஜபக்சே அரசு வீழ்ந்து மைத்திரிபாலா அரசு ஆட்சிக்கு வந்தவுடன், இனப்படுகொலையில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்று விவரம் தெரியாத விருமாண்டிகள் வேண்டுமானால் நம்பியிருக்கலாம்.
நம்மில் எவரும் அப்படி நம்பவில்லை. மகிந்த கும்பல் மீது சர்வதேச விசாரணை நடக்க மைத்திரி அரசு வழிவிட்டதென்று வைத்துக்கொள்ளுங்கள்..... 'நாட்டையே காட்டிக்கொடுத்துவிட்டார் மைத்திரி' என்று பௌத்த சிங்களப் பொறுக்கிகள் கிளர்ந்து எழுந்துவிடுவார்கள்.... மைத்திரியின் கதி நிர்கதியாகிவிடும்.
இந்த பௌத்த சிங்கள இனவெறியின் உக்கிரத்தை அறிந்தே இருக்கிறார்கள் மைத்திரியும் ரணிலும்! அதனால்தான், மகிந்த குடும்பத்தில் யாராவது கல்யாண வீட்டில் செருப்பு திருடினார்களா - என்றெல்லாம்கூட வேகவேகமாக விசாரிக்கும் மைத்திரி அரசு, ஒன்றரை லட்சம் தமிழர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பது பற்றி எப்.ஐ.ஆர். போடக் கூட மறுக்கிறது.
ஜனாதிபதி பதவியில் தலைவலியில்லாமல் மைத்திரி ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றால், ராஜபக்சேக்களை சர்வதேச விசாரணையிலிருந்து அவர் காப்பாற்றியாக வேண்டும்.
அதற்காகத்தான், பதவியேற்றதும் இந்தியாவை அணுகியது மைத்திரி அரசு. சுஷ்மாவின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் அந்த நாடகம் அரங்கேறியது. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைக் காரணம் காட்டி அவகாசம் வாங்கிக் கொடுத்தார்கள் சுஷ்மாவும் மோடியும்! (லலித் மோடி இல்லை... நரேந்திர மோடி!)
இலங்கையின் கொலைவெறியை நிரூபிக்கும் வலுவான ஆதாரமாக இருப்பது, எங்கள் சகோதரி இசைப்பிரியா தொடர்பாக கல்லம் மேக்ரே வெளியிட்ட ஆவணப்படம். அந்த ஆவணப்படத்தைத் திரையிட அனுமதி மறுத்த சோனியா அரசுக்கும், அந்தத் தடையை அப்படியே தொடரும் மோடி அரசுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதென்று நினைக்கிறீர்கள்?
இரண்டு பேருமே, தங்கள் நண்பனின் பிணவெறியை மூடிமறைத்து, அந்த மிருகத்தைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள். இதில் சுஷ்மாவின் வெளியுறவுத் துறைக்குத்தான் பெரும்பங்கு இருக்கிறது என்கிற அழுத்தந் திருத்தமான குற்றச்சாட்டை நான் முன்வைக்கிறேன். எந்த விஷயம் குறித்தும் தெள்ளத்தெளிவாக அறிக்கைவிடும் சகோதரி தமிழிசையாவது இதை மறுக்க முடியுமா?
உலகே பார்த்து உருகிய ஓர் ஆவணப்படத்தின் அடிப்படையில்தான், எனது திரையுலகத் தோழன் கணேசன் 'போர்க்களத்தில் ஒரு பூ' திரையோவியத்தைச் செதுக்கியிருக்கிறான். இசைப்பிரியாவுக்கு என்ன நேர்ந்தது என்கிற கொடுமையைக் கண்ணீர் மல்கக் காட்சியாக்கியிருக்கிறான்.
'நட்பு நாட்டுடனான உறவைப் பாதிக்கும்' என்று கூறி, இதையும் தடை செய்கிறார்கள். நட்பு நாட்டால் இசைப்பிரியாக்கள் நாசமாக்கப்படலாம், ஆனால் அதை யாரும் படமாக்கக் கூடாது என்கிறார்களா? இந்த சோனியா கொள்கையைத்தான் சுஷ்மா கடைப் பிடிக்கிறாரென்றால், சுஷ்மா யார்?
இப்படி சோனியாவுக்கும் ராஜபக்சேவுக்கும் மறைமுக ஏஜென்டாக செயல்படுகிற ஒருவரைப் பதவியில் வைத்திருப்பதற்கு பதில், ராஜபக்சேவின் நேரடி ஏஜென்ட் சு.சு.வையே அமைச்சராக்கி விடலாமே! அப்படி அவரை அமைச்சராக்குவதில் உள்ளபடி ஒரு நன்மையும் இருக்கிறது.
அமைச்சர் பதவியில் அமர்ந்த பிறகு, திருமணங்களை நேரில் போய் நடத்தி வைக்கிற அளவுக்கு அவருக்கு நேரமிருக்காது.... அதனால், தாலியை அவரே கட்டிவிடுவாரோ என்கிற பதற்றம் கல்யாண வீட்டாருக்கும் இருக்காது... அதுவும் ஒருவகையில் நன்மைதானே!
பின்குறிப்பு: தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவம் திரும்பப் பெறப்படும் - என்று ராஜபக்சே தன்னிடம் தெரிவித்ததாக சுஷ்மா அறிவித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரே ஒரு சிப்பாயைக் கூட திரும்பப் பெறவில்லை இலங்கை அரசு இன்றுவரை! அதைப்பற்றி சுஷ்மாஜியோ இந்திய அரசோ இதுவரை கவலைப் படவுமில்லை.
ராஜபக்சேவைப் போலவே, தேர்தலில் நிற்கும்போதே, ராணுவத்தைத் திரும்பப் பெறுவதென்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லிவிட்டுத்தான் நின்றார் மைத்திரி. இப்போதும் அதையேதான் சொல்கிறார். இரண்டு மிருகத்துக்கும் இருக்கிற ஒரே ஒற்றுமை, அவற்றில் ஒன்று சிகப்புத் துண்டு போட்டிருக்கிறது என்பது மட்டும்தான்!
சென்றவாரம், 59 ராணுவ முகாம்கள் மூடப்படுவதாக வெளியான ஒரு செய்தியையடுத்து, ரத்தக் கொதிப்பே வந்துவிட்டது ராஜபக்சேவுக்கு! 'நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து' என்று அடுத்த நொடியே அலறியது மகிந்த மிருகம். மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் மைத்திரி அரசு, 'ஒரே ஒரு சிப்பாய் கூட திரும்பப் பெறப்படவில்லை' என்று அவசர அவசரமாக அறிவித்திருக்கிறது.
ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று சுஷ்மா சொன்ன சமயத்தில், தலைப்புச் செய்தியாக அதை வெளியிட்ட நமது ஊடகங்கள் 'சுஷ்மாவின் அறிவிப்பெல்லாம் சுத்த ஹம்பக்' என்பதை இப்போதாவது தெரிவிக்க வேண்டாமா?
புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com
mythrn@yahoo.com
Geen opmerkingen:
Een reactie posten