இலங்கை விவகாரத்தில் தெ்னாபிரிக்காவின் நல்லிணக்க முயற்சிகள் திரைமறைவில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் அர்ப்பணிப்புக் குறித்து பலத்த சந்தேகமும் சர்ச்சையும் சர்வதேச அளவில் எழுந்திருக்கிறது.
இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டில் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை தப்பிக்க விட்ட விவகாரத்தினாலேயே தென்னாபிரிக்காவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
தென்னாபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க் நகரில் நடந்த ஆபிரிக்க ஒன்றியத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டிருக்கிறது தென்னாபிரிக்கா.
சூடானில் நடந்த உள்நாட்டுப் போரின் போது டாபூர் பிராந்தியத்தில் லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்தமை, போர்க்குற்றங்களை இழைத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் மீது உள்ளன.
இதனடிப்படையில் அவர் மீது ஷேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
இந்தப் பிடியாணையினால் சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் தமக்கு நெருக்கமான ஆபிரிக்காவில் உள்ள சில நாடுகளுக்கு மட்டுமே சென்று வருகிறார்.
அவர் தென்னாபிரிக்காவில் நடைபெறும் ஆபிரிக்க ஒன்றிய உச்சி மாநாட்டுக்கு வரப் போகிறார் என்ற தகவல் வெளியானதும் சர்வதேச நீதிமன்றம் அவரது பிடியாணையை செயற்படுத்த தென்னாபிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியிருந்தது.
அதுபோலவே ஐநா தரப்பிலிருந்தும் அமெரிக்கத் தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
ஆனால் அதையெல்லாம் தென்னாபிரிக்கா கண்டுகொள்ளவில்லை.
ஜொகனஸ்பேர்க் வந்த சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் பத்திரமாக தனது நாட்டின் தலைநகரான கார்ட்டூமுக்குத் திரும்பியிருக்கிறார்.
கடைசி நேரத்தில் தென்னாபிரிக்க நீதிமன்றம் மூலம் அவரது பயணத்தை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு முன்னதாகவே சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் தென்னாபிரிக்காவை விட்டு வெளியேறி விட்டார்.
இந்த விவகாரத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றவாளிகளை கைது செய்யும் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் கொண்டதே தவிர கைது நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான எந்தக் கட்டமைப்பையும் கொண்டதல்ல.
இதனால் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பும் தயவும் இருந்தால் தான் இது வெற்றிகரமாக செயற்பட முடியும்.
சரவதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் இந்தளவு காலமும் போக்குக் காட்டி வருவதை விடவும் தென்னாபிரிக்காவின் செயல் மேற்குலகிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பலவீனப்படுத்த முனைகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரையில் நீண்ட இன ஒடுக்கலுக்கு முகம் கொடுத்த ஒரு நாடு.
இதனால் அங்கு கறுப்பின மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையில் கடுமையான பிணக்குகள் ஏற்பட்டன. அதன் விளைவாக ஏராளமான உயிர்கள் பலிகொள்ளப்பட்டன.
அதிலிருந்து மீண்ட தென்னாபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டது. குற்றங்களுக்குத் தண்டனை விதிக்கும் முறைமையின் கீழ் அல்ல.
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக குற்றம் செய்தவர்கள் அதனை ஒப்புக்கொண்டு மன்னிப்பளித்தலின் மூலமே அங்கு நல்லிணக்கம் உருவாக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இதே முறைமையைப் பலப்படுத்துவதே தென்னாபிரிக்காவின் இலக்காக இருப்பதாகத் தெரிகிறது.
சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சர்வதேச நீதிம்ன்றில் நிறுத்தப்பட்டிருந்தால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் தண்டனை அளிக்காத முறைமையின் மூலம், குற்றங்களை ஒப்புக்கொள்ள வைக்கும் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்படுவதை விரும்பவில்லையா என்ற கேள்வியை இப்போது எழுப்பியிருக்கிறது.
தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கை விவகாரத்திலும் அதன் தலையீடுகள் இருக்கின்றன.
ஏற்கனவே தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ரமபோசா, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் சமாதான முயற்சிகளுக்காக இலங்கை வந்திருந்தார்.
அவர் இங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
அவர் தென்னாபிரிக்காவில் தமது நல்லிணக்க அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே வந்திருந்ததாகக் கூறியிருந்தார்.
அதற்குப் பின்னரும் தென்னாபிரிக்கா மறைமுகமான இணக்க முயற்சிகளில் ஈடுபட்டே வந்திருக்கிறது.
சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் விடயத்தில் தென்னாபிரிக்கா காட்டியிருக்கும் அலட்சியப் போக்கு ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திபத்திய ஆன்மீகத்தலைவர் தலாய்லாமாவுக்கு வீசா வழங்க மறுத்த தென்னாபிரிக்கா அண்மையில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருந்தது.
இப்போது போர்க்குற்றவாளியான சூடானிய ஜனாதிபதியை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளதன் மூலம், சர்வதேச சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையை இழந்து போயிருக்கிறது.
இலங்கையிலுள்ள தமிழ் மக்களும் தென்னாபிரிக்கா விடயத்தில் அதிகமான நம்பிக்கை கொண்டிருந்தனர்.
நெல்சன் மண்டேலா காலத்து தென்னாபிரிக்காவின் அணுகுமுறைக்கும் தற்போதைய தென்னாபிரிக்காவின் அணுகுமுறைக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதை உலகம் கண்டுகொள்ளத் தொடங்கியிருக்கிறது.
சூடானிய ஜனாதிபதி விடயத்தில் தென்னாபிரிக்கா சர்வதேச சட்டங்களை மீறியது மட்டுமன்றி போர்க்குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை செய்தவர்களுக்கும் புதிய தெம்பை ஊட்டியிருக்கிறது.
சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணைக்கும் பிடிகொடுக்காமல் உலகத்தை சுற்றி வரலாம் என்ற தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு நியாயம் கோரும் மக்களுக்கு தென்னாபிரிக்காவின் இந்தச் செயல் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஏனென்றால் இலங்கை விவகாரத்திலும் தென்னாபிரிக்காவின் அணுகுமுறை இத்தகையதாக அமைந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இலங்கையில் நடந்த மனித மனித உரிமை மீறல்கள் குறித்து நியாயமான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதுடன் நிற்காமல் அதற்குப் பொறுப்பானவர்களுக்குத் தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் உள்ளது. சர்வதேச ரீதியில் இதற்கு கணிசமான ஆதரவும் இருக்கிறது.
இத்தகைய கட்டத்தில் தென்னாபிரிக்கா சூடானிய ஜனாதிபதியை தப்பிக்க விட்ட முன்னுதாரணம். அத்தகைய நியாயம் தேடும் பொறிமுறைக்கு சாதகமாக அந்த நாடு நடந்து கொள்ளுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
மேற்குலக நாடுகளின் கண்டனம் தென்னாபிரிக்கா மீது எத்தகைய விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஏற்படுத்தாமலும் போகலாம்.
ஆனால் இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள தென்னாபிரிக்காவுக்கு இது மோசமான முன்னுதாரணமாகவே கருதப்படப் போகிறது.
இதனால் போர்க்குற்றவாளிகள் விடயத்தில் சகிப்புத் தன்மை கொண்ட ஒரு நாட்டின் அனுசரணையை ஏற்றுக்கொள்ள தமிழர் தரப்பு முன்வருமா? என்ற கேள்வி இனி வலுப்பெறலாம்.
இது தென்னாபிரிக்கா முன்னடுக்கும் நல்லிணக்க அல்லது நிலையான அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு சாதகமான ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten