ரணில் விக்கிரமசிங்க இரண்டு தடவைகளும் பின் கதவால் தான் பிரதமர் ஆனார், இந்த உண்மையை மறுக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணை இருந்ததால் தான் ரணில் விக்கிரமசிங்க இரண்டு தடவைகளும் பிரதமர் ஆனார். எமது துணை இல்லையென்றால் இன்றும் ரணில் தோல்வியின் நாயகனாகவே இருந்திருப்பார் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆனதுடன் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ரணில் பிரதமர் ஆனார். மக்கள் வரப்பிரசாதத்துடன் ரணில் பிரதமர் ஆகவில்லை.
ரணில் விக்கிரமசிங்க இரண்டு தடவைகள் பிரதமராக இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளார். ஆனால் இந்த இரு தடவைகளும் அவர் பின் கதவால் தான் அதிகாரத்துக்கு வந்தார் என்பதே உண்மையாகும்.
இரண்டு தடவைகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைதான் அவரை பிரதமர் ஆக்கியது. 2001ம் ஆண்டு ரணில் பிரதமர் ஆவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்கவே காரணமாகும். அவர் 12 பேருடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதன் காரணமாகவே அதிகாரம் கைமாறியது.
ஐக்கிய தேசியக் கட்சி தனித்து பலமான ஆட்சியை அமைக்க முடியாத நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தான் கைகொடுத்தனர். அதேபோல் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து களம் இறங்கினாலோ அல்லது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கினாலோ தோல்வி உறுதியானது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
அவ்வாறானதொரு நிலைமையில் எமது கட்சியின் பொதுச் செயலாளரை வைத்தே அவர்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். இம்முறையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்ததால் தான் ரணில் பிரதமர் ஆனார்.
அதேபோல் மக்களின் ஆதரவு இம்முறை ரணிலுக்கு கிடைக்கவில்லை. மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கவே வாக்களித்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரணில் அதிகாரத்தை கைப்பற்றிவிட்டார்.
ஆகவே இந்த இரு சந்தர்ப்பங்களிலும் ரணில் பின் கதவால் தான் அதிகாரத்தை கைப்பற்றினார் என்பதே உண்மையாகும்.
எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணை இல்லாவிட்டால் ரணில் அதிகாரத்துக்கு வந்திருக்கமாட்டார். அதேபோல் அடுத்த முறை யாருடைய தயவில் ரணில் பிரதமர் ஆவார் என்பது தெரியவில்லை.
ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டோம். இம்முறை மட்டுமே ரணில் பிரதமராக இருக்க முடியும். இம்முறை அவர் போட்டியிடுவதால் வெற்றி எம் பக்கமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten