தாய்நாட்டை இழந்து தாய்மடி தேடும் மக்களுக்கு விடியல் வெகுதூரத்திலா? (வீடியோ இணைப்பு)
முகவரியை தொலைத்து மூச்சு விடவும் அடைக்கலம் தேடும் மனிதர்கள் அகதிகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர்.
உலகில் பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர் மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த நாடுகளை கைவிட்டு அந்நிய தேசங்களை நோக்கி அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தமது சொந்த நாடுகளை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர், இன, மத ரீதியான மோதல்களால், இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடுகளில் காணப்படும் போர் மற்றும் அரசியல் வன்முறை சூழல்களால், தமது உயிரை பாதுகாத்து கொள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக இருப்பதுடன் அந்நிய தேசங்களை நோக்கியும் புலம்பெயர்ந்து வருகின்றனர்.
ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா, சோமாலியா, நைஜீரியா, கென்யா, உகண்டா, காங்கோ, தென் சூடான், சூடான், நைஜர்,கேமரூன் உட்பட பல ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாக உள்ளனர்.
அத்துடன் மத்திய கிழக்கில் இஸ்ரேல் என்ற நாடு உருவாகிய நாள் முதல் பாலஸ்தீன மக்கள் மிக நீண்டகாலமாக உள்நாட்டிலும் பல்வேறு வெளிநாடுகளிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக இருந்து வருகின்றனர்.
இதனை தவிர இஸ்லாமிய தேசத்தை உருவாக்க போராடி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளால், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் தாயகத்தை விட்டு பல்வேறு திசைநோக்கி செல்கின்றனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளின் அடக்குமுறையால் அதிகமாக பாதிக்கப்படும் குர்திஷ் மற்றும் யாஸிதி இன மக்கள், தமது தாயகத்தை விட்டு வெளியேறி ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் இந்த மக்கள் அகதிளாகியுள்ளனர்.
மத்திய கிழக்கின் சிரியா, ஈராக், லிபியா, எகிப்து,லெபனான், ஏமன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாகியுள்ளனர்.
இந்தியாவின் காஷ்மீர் மற்றும் வடக்கிழக்கு மாநிலங்களில் ஆயுதப் போராட்டங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகியுள்ளனர்.
இதனை தவிர இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற இன ஒடுக்குமுறை காரணமாகவும் அதனால் ஏற்பட்ட தமிழர்களுக்கு எதிரான அரச வன்முறைகள் காரணமாக சுமார் ஒரு மில்லியன் மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.
இன ஒடுக்குமுறை காரணமாக தமிழீழ விடுதலை போராளிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற போர் காரணமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டிலும் அயல் நாடான இந்தியாவிலும் அகதிகளாக உள்ளனர்.
அதேவேளை தென்கிழக்காசியாவின் மியன்மார் நாட்டில் ரொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிரான பௌத்த தீவிரவாதிகளின் இன வன்முறை தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அருகில் உள்ள பங்களாதேஷ், தாய்லாந்து, மலேசியா நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர்.
இந்த மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளதுடன் புலம்பெயர்வுகளும் தொடர்கதையாக மாறியுள்ளது.
உலகில் பல மில்லியன் மக்கள் தமது சொந்தங்களையும் உறவுகளையும் தாய் நாடுகளையும் விட்டு இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் பல துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
தாய்நாட்டை இழந்து தாய்மடி தேடும் மக்களுக்கு விடியல் வெகுதூரத்திலா?
Geen opmerkingen:
Een reactie posten