மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமல்போன பெண் ஒருவர் 21 நாட்களின் பின் வீடு திரும்பியுள்ளார்.
கடந்த மே மாதம் 27ம் திகதி புதன்கிழமை கொம்மாதுறை கிராமத்தில் வைத்து கடத்தப்பட்ட பெண் 21 நாட்களுக்கு பின்னர் கடந்த 17ம் திகதி வீடு திரும்பியுள்ளதாக தெரியவருகின்றது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் வசிக்கும் ஒரு குழந்தையின் தாயான குறித்த பெண்னை 27.05.2015 அன்றைய தினம் கறுப்புநிற முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கடத்திச் சென்று இருட்டறை ஒன்றில் கண்ணை கட்டி வைத்துள்ளனர்.
சுமார் 21 நாட்களாக குறித்த பெண்னை இருட்டறை ஒன்றில் அடைத்து வைத்த இனந்தெரியாத நபர்கள் சிலர் அவரை பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தியதுடன் கடந்த 17ம் திகதி கண்ணைக்கட்டி இனம் தெரியாத இடமொன்றில் கொண்டு விட்டதாகவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்பியதாகவும் தெரியவருகின்றது.
இதேநேரம் குறித்த கடத்தல் சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்ட பெண்னை தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும்,
கடத்தல்காரர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் விரைவில் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யுத்தத்தின் பின்னர் வடகிழக்கு பகுதிகளில் இது போன்ற கடத்தல்கள், கொள்ளைகள், கற்பழிப்பு போன்றன மிகவும் சாதாரணமாக இடம்பெற்றுவருவதுடன் இந்த விடயங்கள் நடைபெறுவதற்கு பொலிசாரின் அசமந்தபோக்கே காரணமென கூறப்படுகின்றது.
மிகமுக்கியமாக பொலிசார் குற்றவாளிகளுடன் உறவை பேணிவருவதே பல குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமைக்கு காரணமென சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten