சர்வதேச அகதிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகள் தங்களது தாய்நாட்டுக்கு சென்று புதிய எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை உள்நாட்டுப் போரை தொடர்ந்து கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து நான்கு தவணைகளாக 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.
இவர்களில் சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் நல ஆணையத்தின் உதவியுடன் மீண்டும் இலங்கை திரும்பி விட்டனர்.
எஞ்சியுள்ள சுமார் ஒரு லட்சம் மக்கள் தமிழகத்தில் உள்ள சில முகாம்களில் பல ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் தம்பதியராக உள்ளவர்கள் இங்கேயே குழந்தைகளை பெற்று, படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்கியுள்ளனர்.
இந்தவகையில் வளர்ந்து தற்போது வாலிப வயதை எட்டியுள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களில் பலர் தங்களது தாய்நாட்டுக்கு (இலங்கை) சென்று அங்கேயே வேலைசெய்து வாழ ஆசைப்படுவதாக தெரியவந்துள்ளது.
திருநெல்வேலியில் உள்ள கோபாலசமுத்திரம் அகதிகள் முகாமில் பிறந்து, வளர்ந்த சரவணன் (வயது 23),
இலங்கைக்கு சென்று, ஏதாவது வேலைக்கு முயற்சி செய்து ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறேன். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன். ஒருசில மாதங்களில் என் தாய்நாட்டுக்கு சென்று விடுவேன் என்று கூறுகிறார்.
மேலும், அது எங்கள் தாய்நாடு. அங்கு போனால் எங்கள் வேராக இருக்கும் சொந்தங்களுடன் தொடர்பில் இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் எங்கள் குடும்பத்துக்கு சில நிலபுலங்கள் உண்டு. அதை எல்லாம் பார்க்க வேண்டும். எங்கள் மூதாதையர் வாழ்ந்து மறைந்த பூமியில் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட காலமாக உண்டு என தெரிவித்துள்ளார்.
கம்ப்யூட்டர் வன்பொருள் பொறியாளரான இவர் இலங்கைக்கு செல்வதன் மூலம் நல்ல வேலைவாய்ப்பை பெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளத்துள்வாய்பட்டி அகதிகள் முகாமில் பிறந்து வளர்ந்த அகிலன் (வயது 24) என்பவரும் இலங்கைக்கு செல்வதை பற்றி ஆலோசித்து வருவதாகவும் தொலைத்தொடர்புத்துறை பட்டதாரியான தனக்கு அங்கு நல்ல வேலைவாய்ப்பு காத்திருக்கும் என நம்புவதாகவும் கூறுகிறார்.
தமிழகத்தில் இருந்து இரு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சென்று அங்குள்ள வவுனியாவில் வசித்துவரும் மயூரன் என்பவர்,
எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பூமியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முல்லைத்தீவில் ஒரு காலத்தில் எங்கள் பெற்றோர் வாழ்ந்து, தற்போது தரைமட்டமாகி கிடக்கும் பூர்வீக வீடு இருந்த கிராமத்தையும் சமீபத்தில் சென்று பார்த்தேன் என சொல்கிறார்.
இலங்கையில் இருந்து உயிர் பயத்துடன் வெளியேறிய பெற்றோருடன் 14 வயது சிறுவனாக தமிழகத்துக்கு வந்து தற்போது 39 வயது நபராக சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தங்கியுள்ள பத்மநாபன் என்பவர்,
இங்குள்ள மக்களின் அன்பு மற்றும் எங்களுக்கு தமிழக அரசு அளித்துவரும் ஆதரவுக்கு இடையில் நாங்கள் வெறும் அகதிகளாகவே இங்கே வாழ்ந்து வருகிறோம். எங்கள் தாய்நாடான இலங்கைக்கு சென்று சிரமப்பட்டாலும் அந்நாட்டின் குடிமக்களாக வாழவே ஆசைப்படுகிறோம் என்று குறிப்பிடுகிறார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRUSUfs7C.html
Geen opmerkingen:
Een reactie posten