“கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்” என்று கூறித் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாகக் கம்பன் புகழுக்காகக் கம்பன் விழா நடந்து வருகின்றது. இலங்கையிலும் கம்பன் விழா சிறப்பாக நடந்து வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது சிறிது காலம் நடைபெறவில்லை. கொழும்பில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டும் கொழும்பில் விழாச் சிறப்பாக நடந்துள்ளது. தமிழகத்திலிருந்து அறிஞர்கள் வந்திருந்தனர்.
பாராட்டுக்குரியதே. அதே நேரம் இந்திய மத்திய அரசான பாரதிய ஜனதாக் கட்சியின் இல.கணேசனும் அழைக்கப்பட்டிருந்தார். நோக்கம் என்ன என்பது புரியவில்லை.
அதே போல் நவலங்கா சமசமாசக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணாவும் அழைக்கப்பட்டார். கௌரவிக்கப்பட்டார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி.
சிங்கள மக்களிடையே இவரைப் போன்ற சிந்தனைப் போக்குக் கொண்டவர்கள் சிலரே உள்ளனர்.அந்த வகையில் அவரை அழைத்துக் கௌரவித்தமை பாராட்டுக்குரியதே.
யார் யாரை அழைப்பது என்பதெல்லாம் கம்பன் கழகத்தின் உரிமை. அதையிட்டு வினா எழுப்புவது தவறு. ஆனால் கம்பன் கழகம் தன் இலக்கியப் பணிக்குப் பொருத்தமில்லாத வகையில் அரசியலுக்குள் ஏன் புகுந்து கொள்கின்றது என்பதே இன்று எழுந்துள்ள மிகப் பெரிய வினாவாகும்.
விக்கிரமபாகு கருணாரட்ணாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்ய வழி கண்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கம்பம் கழகம் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இவ்வளவு காலமும் அரசியலுக்குள் வராத கம்பன் கழகம் விடுதலைப் போராட்டத்தை ஏற்காது ஒதுங்கி இருந்த கழகம் மக்கள் பட்ட சொல்லொணாத் துயரங்களைக் கண்டுகொள்ளா கம்பன் கழகத்துக்கு அரசியலில் ஏன் ஈடுபாடு திடீரென்று ஏற்பட்டுள்ளது.
இதற்காகத் தானா விக்கிரமபாகு கருணாரட்ணாவை கம்பன் விழாவில் கௌரவித்தது. புரியாத புதிராக இருக்கின்றதே. சரி.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இல்லாத ஒருவரை அவர்களால் நாடாளுமன்றத்துக்கு தெரிவாக வழிகாண முடியுமா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு இத்தனை வேட்பாளர்கள் வேண்டும் என்று போட்டி போடுகின்றன. இந்நிலையில் இது சாத்தியமாகுமா? உண்மையில் இது குட்டையைக் குழப்பும் முயற்சியா? என்று தான் நோக்க வேண்டியுள்ளது.
இங்கே மேலும் ஒன்றைப் பார்க்க வேண்டியுள்ளது. 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவுடன் சரத்பொன்சேகா போட்டியிட்டார்.
தமிழர் மீதான போரை வெற்றி கொண்டவர் தானே என இருவரும் சிங்கள மக்களிடம் கூறினர். அப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை அதாவது போரை நடத்தி ஒரு இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களைக் கொன்று மக்களை பேரவலத்துக்கு உள்ளாக்கிய படையை நடத்திய பொன்சேகாவை கண்ணை மூடிக்கொண்டு தொலைநோக்கு சிந்தனையற்று ஆதரித்தார்களே,
அப்பொழுது அந்தத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டென்று கூறிப் போட்டியிட்ட விக்கிரமபாகு கருணாரட்ணாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்து வாக்களிக்கும் படி கூறியிருந்தால் தமிழ் மக்கள் போரினால் துவண்டுவிடவில்லை சுயநிர்ணய உரிமைக்கு வாக்களித்தார்கள் என்று உலகம் உணர்ந்திருக்குமே.
அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்யவில்லை. சரத்பொன்சேகாவை ஆதரிக்காது இவ்வாறு நடந்திருந்தால் மகிந்தவுடன் சில வேளை நல்லுறவு ஏற்பட்டிருக்கும். என்று சிலர் கூறுவதும் சிந்திக்கத்தக்கதே.
கம்பன் கழகம் அப்பொழுது விக்கிரமபாகு கருணாரட்ணவை கண்டுகொள்ளவில்லையே. அப்பொழுதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியிருக்காலாமே. ஏன் அப்பொழுது அதனைச் செய்யவில்லை.?
அப்பொழுது யாரை ஆதரித்தார்கள்? அப்பொழுது இல்லாத அக்கறை இப்பொழுது ஏன் ஏற்பட்டுள்ளது.? இப்பொழுது யாரைத் திருப்திப்படுத்த இந்நடவடிக்கையை மேற்கொள்கின்றனர் இவர்கள்.
நிச்சயமாக அவர்கள் தமிழ் மக்களுக்கான முயற்சியல்ல. ஏனெனில் தமிழ் மக்கள் துன்பப்பட்ட காலங்களில் கண்ணை மூடிக்கொண்டிருந்தவர்களுக்கு திடீர் ஞானம் எப்படி ஏற்பட்டது.? ஏன் ஏற்பட்டது? நிச்சயமாக இவர்கள் சொந்தமாக இயங்கவில்லை. இயங்க வைக்கப்படுகிறார்கள்.
யார் அந்த சூத்திரதாரிகள் என்பது விரைவில் வெளியே வரத்தான் செய்யும். அதே நேரத்தில் இவர்களின் கொள்கைகள் நிலையானதா? என்பதைக் காட்டுவதற்கு ஒரு சிறு நிகழ்வை நினைவுபடுத்துவதே நலம்.
2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தை ஓராம் நாளே தமிழ் புத்தாண்டு என்றும் சித்திரை அல்ல என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி 2007 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்துவதாக அறிவித்தார்.
அதற்காக பாராட்டு விழாவும் சென்னையில் நடத்தப்பட்டது. தமிழக அறிஞர்கள் பலர் அதில் கலந்து கொண்டனர். கருணாநிதியைப் பாராட்டினர்.
அப்பாராட்டு விழாவிலேயே கம்பன் கழகத்தவரும் பங்குபற்றிக் கருணாநிதியைப் பாராட்டினர். பின்னர் கொழும்புக்குத் திரும்பிய பின் இங்கே சிலர் கூடி சித்திரையே எமது ஆண்டுத் தொடக்கம் என முடிவு செய்த பொழுது அதில் பங்குபற்றி கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டனர் கம்பன் கழகத்தினர்.
இத்தோடு நின்றாலும் சரி என்று இருக்கலாம். ஆனால் மீண்டும் சென்னைக்கு அவர் செல்கிறார். கருணாநிதி தையைப் புத்தாண்டுத் தொடக்கமாக்கியதற்காக விழா எடுக்கிறார். அதில் கலந்து கொண்டு போற்றுகிறார். அப்படி என்றால் இவர்களுக்கு என்னதான் இலட்சியம். கொள்கை உண்டு என்று எண்ணத் தோன்றவில்லையா?
இவர்கள் தான் இப்பொழுது தமிழ் மக்களின் அரசியலுக்குள்ளும் மூக்கை நுழைக்கின்றார்கள். இவர்களின் செயலை கம்பன் காட்டும் இராமபிரான் அறியாவிட்டாலும் நிச்சயமாக ஈஸ்வரன் அறிவார் என்பதே உண்மையாகும்.
கதிர் செல்லமுத்து
sinnaththambypa@gmail.com
sinnaththambypa@gmail.com
Geen opmerkingen:
Een reactie posten