தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 juni 2015

போர்க்குற்ற விசாரணை! அவசரப்படும் ஆணைக்குழு!



போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முக்கியமான, மூத்த இராணுவத் தளபதிகள் பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு முதலில் வழங்கப்பட்ட பணி காணாமற்போனோர் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதேயாகும்.
இந்த ஆணைக்குழுவுக்கு 1983ம் ஆண்டுக்குப் பின்னர் காணாமற்போனோர் குறித்து கிட்டத்தட்ட 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவற்றில் சுமார் இரண்டாயிரம் முறைப்பாடுகள் குறித்தே இந்த ஆணைக்குழு இதுவரை விசாரணைகள் நடத்தியிருக்கிறது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இடைக்கால அறிக்கை ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.
அந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாது போனாலும் வடக்கில் காணாமற்போன சம்பவங்களில் அதிகமானவற்றுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என்று ஆணைக்குழுவினால் ஊடகங்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும் காணாமற்போனோர் குறித்து நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை மேற்கொண்ட விசாரணைகள், அதன்மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து தெளிவான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இந்தநிலையில் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐநா செயலணிக்குழு இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான விவகாரத்தை அணுகுவது தொடர்பாக எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஐநா அதிகாரிகளின் பயணத்தின் போது தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான சுமார் 10 ஆயிரம் முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளாமலேயே ஜனாதிபதி ஆணைக்குழு தனது அடுத்தகட்ட பணிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவுக்கு இந்த இரண்டாவது பணியையும் ஒப்படைத்திருந்தார். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான மேற்குலக வியூகங்கள் இறுக்கமடைந்த போது இந்த ஆணைக்குழுவுக்கு போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரத்தையும் அவர் அளித்திருந்தார்.
இந்த ஆணைக்குழுவுக்கு உதவுவதற்காக சில வெளிநாட்டு நிபுணர்களையும் நியமித்திருப்பதாக மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். அவர்களில் சிலர் இலங்கை வந்து ஆணைக்குழுவுடன் பேசிவிட்டுச் சென்று போயினர். வேறு சிலர் இலங்கைக்கு வரவேயில்லை.
இன்னும் சிலர் நியமனம் தொடர்பாக தம்மிடம் யாரும் தொடர்பு கொள்ளவேயில்லை என்று கூறினர். ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர் குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்ட செர் டெஸ்மன்ட் டி சில்வா மட்டுமே அவ்வப்போது கொழும்பு வந்து கலந்துரையாடல்களில் பங்கெடுத்து வந்தார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அவர் ஆணைக்குழுவுடன் எத்தகைய தொடர்பைப் பேணி வருகிறார் என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை.
ஆனால் இலங்கை வம்சாவழியினரான சேர் டெஸ்மன்ட் டி சில்வா முன்னைய அரசாங்கத்தின் சார்பாளர் என்ற குற்றச்சாட்டு வந்தது.
போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்காகவே அவரை அரசாங்கம் இந்தப் பொறுப்பில் நியமித்திருப்பதாகவும் கூறப்பட்டது.
அவர் அதனை மறுத்திருந்தாலும் அந்த சந்தேகம் ஊடகங்களால் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தது. அதற்கு முக்கியமான ஒரு காரணம் சேர் டெஸ்மன்ட் டி சில்வா இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த, போர்க்குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்கும் இராணுவத் தளபதிகள் பலரையும் இரகசியமாக சந்தித்து கலந்துரையாடியமை ஆகும்.
போர்க்களத்தில் நடந்த சம்பவங்களை அவர் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து தனிப்பட்ட முறையில் கேட்டறிந்திருந்தார்.
இது போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தினரை விடுவிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் நம்பகமான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளப் போவதாகக் கூறிப் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் இந்த வெளிநாட்டு நிபுணர் குழு குறித்து எந்த முடிவையும் எடுத்திருக்கவில்லை.
அதேவேளை சுதந்திரமான ஓர் ஆணைக்குழுவை நியமித்து போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்போம் என்று கூறிய புதிய அரசாங்கம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவுக்கு உயிரூட்டி வருகிறது.
இந்த ஆணைக்குழு போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தற்போது இராணுவ அதிகாரிகளிடம் விசாரணைகளை நடத்தி வருகிறது.
ஒரு பக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் உள்நாட்டு விசாரணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக உறுதியளித்துள்ள நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழு படை அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைத் திரட்டி வருவது கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த ஆணைக்குழுவுக்கு போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்க மகிந்த ராஜபக்ச பணித்திருந்தார் என்பது உண்மை.
ஆனால் இந்த ஆணைக்குழு நம்பகமானதோ, நடுநிலையானதோ அல்ல என்று ஏற்றுக்கொண்டதால் தான் தாம் ஒரு சுதந்திரமான நம்பகமான விசாரணையை மேற்கொள்வதாக சர்வதேச சமூகத்திடம் அளித்திருந்தது.
தற்போதைய அரசாங்கம் இந்தக் கட்டத்தில் எதற்காக போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு ஆணைக்டகுழுக்கள் சமாந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
பரணகம ஆணைக்குழுவுக்கு ஒரு பெரிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதனிடம் காணாமற்போனோர் தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள 20 ஆயிரம் முறைப்பாடுகளை விசாரிக்கும் திறன் இருக்கிறதா என்ற சந்தேகமே பரவலாக உள்ளது.
தற்போதைய வேகத்தில் சென்றால் அந்த ஆணைக்குழு இந்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரித்து முடிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தெரிந்து கொண்டு தான், இரண்டு விசாரணைகளையும் முடக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்தக் குருவியின் மீது மீண்டும் ஒரு பனங்காயை வைத்தார்.
அந்த ஆணையை வைத்துக் கொண்டு இப்போது காணாமற்போனோர் குறித்த விசாரணையை நிறுத்திவிட்டு போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் இறங்கியிருக்கிறது பரணகம ஆணைக்குழு.
ஏற்கனவே இறுதிப்போரில் 55வது டிவிஷனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 59வது டிவிஷனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, 57வது டிவிஷனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெற்றிருக்கிறது இந்த ஆணைக்குழு.
மேலும் இறுதிக்கட்டப் போரில் மிக முக்கிய பங்காற்றிய 58வது டிவிஷன் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் விசாரணை நடத்துவதற்காகவும் அழைப்பு விடுத்துள்ளது.
புதுடில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கற்கைநெறி ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் ஆணைக்குழு முன்பாக விரைவில் தோன்றி சாட்சியம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல அதிகாரிகளை விசாரணைக்காக அழைத்துள்ளதாக பரணகம ஆணைக்குழு உறுதிப்படுத்தியிருக்கிறது.
எவ்வாறாயினும் இந்த விசாரணைகள் எங்கிருந்து தொடங்கப்பட்டன, எதனை அடிப்படையாக வைத்து நடத்தப்படுகின்றன என்ற எந்தத் தகவலும் இல்லை.
தனியே இராணுவ அதிகாரிகளை மட்டும் விசாரிப்பது போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையாக அமையாது. அதற்கு சாட்சியாக உள்ளவர்களிடம் விசாரிக்கப்பட வேண்டும்.
அத்தகைய எந்த முயற்சிகளும் பகிரங்கமாக எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
அதேவேளை, இந்த அரசாங்கம் பரணகம ஆணைக்குழுவின் மூலம் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதன் பின்னணி குறித்தும் கேள்விகள் உள்ளன.
வரும் செப்படம்பர் மாதம் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த ஆணைக்குழுவிடம் இருந்து ஓர் அறிக்கையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
அதனை வைத்து ஜெனிவாவை மடக்க அரசாங்கம் முயற்சிக்கிறது போலுள்ளது.
அதேவேளை இந்த ஆணைக்குழு போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து எத்தகைய அறிக்கையை அளிக்கப் போகிறது என்ற சந்தேகம் இருக்கிறது.
ஏற்கனவே தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட ஓர் இராணுவ விசாரணைக் குழு போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று அறிக்கை அளித்திருந்தது.
இந்த மாதமே உள்நாட்டு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்னொரு ஆணைக்குழுவும் போர்க்குற்றங்கள் நடக்கவில்லை என்று அறிக்கை ஒன்றை அளித்தால் அது உள்நாட்டு விசாரணையை பலவீனப்படுத்துவதாக அமையும்.
அதைவிடப் பல விசாரணைகள் நடத்தப்பட்டு பல அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் போது எது உண்மை, எது பொய் என்ற குழப்பமு் மக்களிடம் ஏற்படும்.
அதுமட்டுமன்றி உள்நாட்டு விசாரணையில் குற்றவாளிகளாக காணப்படுவோரை சட்டத்தின் முன் நிறுத்தும் போது இத்தகைய முரண்பாடுகளை சுட்டிக்காட்டி அவர்கள் தப்பிக் கொள்ளவும் வழியேற்படும்.
இத்தகைய நிலையில் தான், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் நியாயமான போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க விரும்புகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmtyGTbSUgu1J.html

Geen opmerkingen:

Een reactie posten