தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 juni 2015

வடக்கின் சாபக்கேடு?



யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் தமிழ் சமுதாயத்தையே வெட்கித் தலைகுனியச் செய்யும் வகையில் அமைந்திருப்பதை காணமுடிகின்றது.
முன்னர் ஒரு காலத்தில் கற்றல் நடவடிக்கைகளிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்த நிலையில் வடபகுதி சமூகம் உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் மதிப்பும், கௌரவமும் வாய்ந்த சமூகமாகக் காணப்பட்டது.
ஆனால், வடபகுதியில் இன்று இடம்பெறும் சம்பவங்கள் உலகத்தையே வடபகுதியின் பக்கம் திருப்பி தலையில் கைவைக்கும் அளவுக்கு நிலைமையை மாற்றியமைத்துள்ளது.
எந்தவிதமான ஈவிரக்கமின்றியும் ஒருவரை படுகொலை செய்ய முடியும், துணிந்து எந்தவகையான குற்றச் செயல்களிலும் ஈடுபடமுடியும் என்ற மிகவும் வெறுக்கத்தக்க துணிவை வடபகுதி இளம் சமுதாயத்தினர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதா? என ஏங்கச் செய்யும் வகையில் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
அண்மையில் புங்குடுதீவு மாணவி வித்தியா மிகக் கோரமான வகையில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் நாட்டில் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவராலும் கண்டிக்கப்பட்டது.
மனிதாபிமானமே அற்ற வகையில் எவ்வாறு இவ்வாறான செயல்களில் ஈடுபட முடியுமென அனைவரும் தங்கள் ஆழ்ந்த ஏக்கங்களை வெளியிட்டனர்.
வித்தியாவின் படுகொலையுடன் மக்கள் கிளர்ந்தெழுந்தமையும் அது தொடர்பில் அரசியல் தலைவர்கள் தொடக்கம் சகல தரப்பினரும் வெளியிட்ட கண்டனங்களும் இவ்வாறானதோர் சம்பவம் நாட்டில் மீண்டும் இடம்பெற வழி பிறக்காது என்ற ஒரு மன உறுதியை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், அதனை தகர்ந்து போகச் செய்யும் வகையில், அவ்வப்போது இடம்பெறும் சம்பவங்கள், மறுபுறம் இந்த நாட்டில் சமூக விரோத செயல்கள் முடிவுக்கு வராதா? என்ற ஏக்கத்தை தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 6 வயது சிறுமி 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருந்தார். இதனையடுத்து குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தான்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறான துஷ்பிரயோகங்களின் தொடர்ச்சியாக மற்றுமொரு சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. புத்தளம், தில்லையடி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருத்தி காட்டுக்குள் கடத்தி செல்லப்பட்ட நிலையில் பிரதேசவாசிகளினால் மீட்கப்பட்டிருந்தாள்.
புத்தளம் தில்லையடி பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுமி, பாடசாலை விட்டு தனது சகோதரனுடன் வீடு செல்லக் காத்திருந்த சமயம் அவளை நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் கடத்திச் சென்று காட்டுக்குள் மறைத்து வைத்திருந்தார்.
இதனை அறிந்த பிரதேசவாசிகள் அந்தப் பிரதேசத்தை சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்டனர். இதன்போது சிறுமி மீட்கப்பட்டதுடன், குறித்த நபரும் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

இந்த விதமான சம்பவங்கள் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த அதேவேளை, வடக்கில் குற்றச்செயல்கள் குறைவின்றி தொடர்ந்தவாறே இருந்து வருகின்றன.
இதேவேளை, யாழ்ப்பாணம், வட மராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கணவனும் மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
கணவன் மனைவிக்கி டையே ஏற்பட்ட பிரச்சினையையடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துப் கொலைகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி, அண்மையில் இளைஞன் ஒருவன், தனியாக இருந்த இளம்பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து அவரது கழுத்தை கத்தியால் வெட்டிவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளான்.
இந்நிலையில் இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்ப வம் வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு அடுக்கடுக்காக வடக்கில் தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
எவ்வாறு தமது பிள்ளைகளை பாதுகாப்பது, அவர்களை பாடசாலைக்கு அனுப்பிவைப்பது போன்ற பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக் கின்றனர்.
வடபகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு பிரதான காரணம், இளம் வயதினரிடையே காணப்படும் மது மற்றும் போதைவஸ்துப் பாவனை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இளைஞர்கள் மத்தியில் காணப்படும் அதீத பணப்புழக்கமும் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அவர்களின் உறவினர்களால் அனுப்பி வைக்கப்படும் பணம், மனம்போனபோக்கில் அவர்கள் செலவு செய்ய வழிவகுக்கின்றது.
பெரும்பாலான இளைஞர்கள் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகளே கதியாகக் கிடப்பதுடன் மதுப்பாவனைக்கும் ஆளாகியுள்ளதாகப் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
அதுமாத்திரமன்றி, வடக்கில் தாராளமாக ஊடுருவியுள்ள போதைவஸ்துக்களும், இளம் வயதினரின் இத்தகைய வெறுக்கத்தக்க போக்குகளுக்கும், மனிதாபிமான செயற்பாடுகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகின்றது.
இதனால் வட பகுதியில் மிக மோசமான சமூக சீரழிவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை உருவாகி வருவதாகப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வடக்கில் மீண்டும் அமைதியும் நிம்மதியும் தோன்றுமென எதிர்ப்பார்த்துக் காத்திருந்த மக்களுக்குத் தற்போது தோன்றியுள்ள குற்றச்செயல்கள் மலிந்த சூழ்நிலையானது பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது.
வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர் குழுக்களுக்கிடையேயான மோதல்கள், வாள்வெட்டுக்கள், பழிவாங்கல்கள் போன்ற சம்பவங்களும் எந்தவிதமான குறையும் இன்றித் தொடர்ந்தும் நடந்து கொண்டிருப்பதையே காணமுடிகின்றது.
இந்தவிதமான போக்குகளுக்கு மத்தியில் வடபகுதி எதனை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்ற கேள்வியும் எழவே செய்கின்றது.
இத்தகைய செயல்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்துக்கு அப்பால், சமூக ஒழுங்குகளைப் பேணுவது இன்றியமையாததாகும்.
அதேவேளை, பெற்றோரும் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும், அவதானத்துடனும் நடந்து கொள்வது இன்றியமையாதது.
வடக்கில் மலிந்துவரும் குற்றச்செயல்களை மறுபுறம், ஒரு சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதுவரை காலம் யுத்தத்தால் கொடூர துயரங்களை அனுபவித்த மக்கள், அதிலிருந்தும் மீண்ட நிலையில், படுபாதகமான குற்றச் செயல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இது யுத்தத்தை விடவும் கொடூரமானதாகவே வடபகுதி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அந்தவகையில், பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களும், மக்களும் சதா விழிப்புடன் செயற்படுவதன் வாயிலாகவே குற்றச்செயல்களை ஓரளவேனும் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இன்றேல் நிலைமை மேலும் கட்டுமீறுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத நிலைமைகளே மிஞ்சுவதாக அமையும்.
http://www.tamilwin.com/show-RUmtyGTbSUgu4H.html

Geen opmerkingen:

Een reactie posten