தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juni 2015

விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்போம்: மாவை சேனாதிராஜா



[ பி.பி.சி ]
தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அளித்திருந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவ்வாயன்று கவலை வெளியிட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் இந்த விஷயம் குறித்து ஆராயப்பட்டு கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டமைப்பின் தலைவர் அரசாங்கத்துடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அந்தக் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஹென்றி மகேந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள வலிகாமம் பிரதேசத்தில் உள்ள காணிகளில் முன்னைய அரசாங்கம் விடுவிப்பதாகத் தெரிவித்திருந்த காணிகளிலேயே இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள், புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் காணிகள் விடப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கமைய காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அவ்வாறு இடம்பெயர்ந்த மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேற்ற உதவி, வாழ்வாதார உதவி போன்றவற்றை வழங்குவதற்கு அரசிடம் நிதி இல்லை என்று மீள்குடியேற்ற அமைச்சு கைவிரித்திருப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.
சிறைகளில் உள்ள தமிழ் இளைஞர்கள் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள், பட்டதாரிகள், வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கப்படும் உள்ளிட்ட உறுதிமொழிகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வருமாறு அழைக்கப்பட்டு அவர்களிடம் வேலைத்திட்டங்களுக்காகப் பணம் வழங்கப்பட்டது என்று உண்மைக்கு மாறான வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அரசால் பணம் வழங்கப்பட்டதாக வந்திருக்கும் செய்திகள் குறித்து, விக்னேஷ்வரனிடம் கேட்கப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
விக்னேஷ்வரனிடமிருந்து வருகின்ற பதிலையடுத்து, உண்மை நிலைமையை செய்தியாளர்களின் ஊடாகத் தெளிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மாவை கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்படும் வகையில் அந்தக் கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது பற்றிய விஷயம் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும், இது தொடர்பில் அடுத்த வாரத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வரவுள்ள பொதுத் தேர்தலில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவது, தேர்தலுக்கான கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றைத் தயாரிப்பது உள்ளிட்ட வேறு சில விஷயங்களும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கின்றது.

Geen opmerkingen:

Een reactie posten