தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juni 2015

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!

இலங்கையில் ராஜபக்ச போய் மைத்திரிபால அதிபராக வந்தாலும் தமிழ்மக்கள் தொடர்பான நிலைப்பாட்டில் பெரியதொரு மாற்றமுமில்லை. தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச முன்னெடுத்த நடவடிக்கைகள் பலவும் மைத்திரிபாலவின் ஆட்சியில் நுட்பமாக முன்னெடுக்கப்படுகின்றது.
அறுபது வருட காலமாக நிலவும் ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் சூழலில் சிக்கித் தவிக்கும் ஈழ மக்கள் மைத்திரிபாலவின் ஆட்சியிலும் பல பின்னடைவுகளைச் சந்திக்கின்றனர்.

ராஜபக்ச இழைத்த  இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களிலிருந்து  பௌத்த சிங்கள நாட்டைக் காப்பாற்றும் நுட்பமான நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் முதல் நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படவிருந்த இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை பிற்போட வேண்டும்  என்ற இலங்கையின் புதிய அரசின் கோரிக்கையை ஐ.நா. ஏற்றிருக்கிறது.

இது இலங்கைக்கு கிடைத்த பெரிய வெற்றி என்றே மைத்திரிபாலவும், ரணில் விக்கிரமசிங்கவும் கூறுகின்றனர்.

இலங்கைத் தீவில் ஈழ மக்களுக்கு எதிராக நடந்தது இனப்படுகொலையா? அங்கு போர்க்குற்றங்கள் நடந்ததுவா? என்பதை ஆராய்ந்து உண்மையை கண்டுப்பிடிப்பதைக் காட்டிலும் நடந்த கொடூரத்தை மறைப்பதும் தாமதிப்பதும் வெற்றி என்றே சிங்கள ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

இலங்கைத் தீவில் மாறிமாறி ஆட்சி புரிந்த இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்க ஈழத் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பை - இன ஒடுக்கு முறையை மேற்கொண்ட இவர்கள் இன்று நுட்பமான நவீனமுறையில் தமது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜபக்ச இரத்தம் சிந்தச் செய்ததை தாம் வேறொரு முறையில் செய்வதாக அவர்களே சொல்கின்றனர்.

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

அதனை புதிய அரசு ஏற்க மறுத்தது. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் முரண்பட்டார். இந்த முரண்பாடே இலங்கையின் தமிழ் - சிங்கள சமூகங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடு.

ராஜபக்ச தெற்கில் உள்ள மக்களுக்குச் செய்தது எல்லாம் ஊழலும் மோசடிகளும் என்று சுறி நடவடிக்கை எடுக்கும் மைத்திரிபால - ரணில் அரசு ராஜபக்சே தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்தது மனிதாபிமான யுத்தம், பயங்கரவாத யுத்தம் . அதில் ஈடுபட்ட ராஜபக்சவையும் இராணுவத்தையும் காப்பாற்றுவோம் என்கின்றனர்.

ஆக தெற்கிற்கு ஒரு நீதியும் , வடக்கு - கிழக்கிற்கு ஒரு நீதியும் என்ற விடயத்தில் மைத்திரிபால - ரணில் அரசும் பழைய நிலைப்பாட்டையே பின்பற்றுகின்றது.

தமிழர் பகுதியிலிருந்து இராணுவ வெளியேற்றத்திற்கு மாத்திரமல்ல...இராணுவக் குறைப்புக்குக் கூட புதிய அரசு தயாரில்லை.அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டது. இராணுவத்தை வெளியேற்றினால் தமிழர்கள் தமது உரிமைக்கான ஜனநாயகப் போராட்டங்களைத் தொடங்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சிங்கள அரசு கடந்த கால ராஜபக்ச அரசைப் போலவே செயற்படுகிறது.

இராணுவ வெளியேற்றமே தமிழர் பகுதியில் சிவில் வாழ்க்கைச் சூழலை உருவாக்கும். ஆனால் அதை நீக்கும் எண்ணம் இல்லை என்றால் தொடர்ந்தும் தமிழர் பகுதி இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் மைத்திரிபால அரசும் உறுதியாக இருக்கிறது.

தமிழர் நிலங்களைக் கையளிக்கிறோம் என்று கண்துடைப்பு நாடகங்களை மைத்திரிபால அரசு செய்கிறது.

ஆறாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் அபகரிக்கப்பட்டுள்ள வலிவடக்கில் வெறும் ஆயிரம் ஏக்கரைத்தான் விடுவித்துள்ளது.

இதைப்போலவே சம்பூர் நிலத்தை விடுவிக்கிறோம் என்று கூறி பல மாதங்கள் ஆகியும் இன்னும் அங்கு மக்கள் மீள்குடியேற அனுமதிக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேன ஆட்சி மலர்ந்தவுடன் ராஜபக்சவுக்கு எதிரான நடவடிக்கைகளும் ராஜபக்சவால் பாதிக்கப்பட்ட சரத்பொன்சேகா ( ஈழ இனப்படுகொலையின் தலைமைத்தளபதி) போன்றவர்களுக்கும் உடனடியாக நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

 ஆனால் அறுபது வருடங்களாக பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்குரிய தீர்வையோ, அல்லது முப்பது வருடங்களாக இழந்த நிலங்களையோ உடனடியாக வழங்கவில்லை.

வழங்கப்படும் சொற்ப நிலங்களும் தமிழர் நிலத்தை வழங்கிவிட்டோம்` என்று வெளிஉலகிற்குக் காட்டும் கண்கட்டு வித்தைகளே.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பேரினவாத இனப்படுகொலையை மறைக்கவும் அந்த வெறியை தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டு நூதனமான நடவடிக்கையை செய்கிறது.

மைத்திரிபால - ரணில் ஆட்சி தெற்கின் ஆட்சி மாறினாலும் தமிழர் மண்ணில் எந்த மாற்றமும் இல்லை. காலங்கள் மாறுகின்ற போதும் சிங்கள அரசு தமிழர் நிலத்தில் செய்யும் காட்சியில் மாற்றமில்லை!

- தீபச்செல்வன் -
deebachelvan@gmail.com

Geen opmerkingen:

Een reactie posten