தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juni 2015

சிங்கள கொலைவெறி நமக்கெதற்கு?

இரண்டு வாரங்களுக்கு முன் 'கற்காலத்துக்குத் திரும்பும் இலங்கை' என்கிற தலைப்பில் நான் எழுதியிருந்தது, நண்பர்களுக்கு நினைவிருக்கும்.
அந்தக் கட்டுரை தொடர்பாக கேள்விமேல் கேள்வி கேட்டு அயல்நாடு ஒன்றிலிருந்து வந்த மின்னஞ்சலுக்கு பதில் சொல்லுகிற வாய்ப்பு சென்ற இரண்டு மூன்று இதழ்களில் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
பொதுவாகவே, எனது பெருமரியாதைக்குரிய நண்பர்கள் மின்னஞ்சல் அல்லது அலைபேசி வாயிலாக என் எழுத்தைக் கடுமையாக விமர்சிக்கும்போது, அந்த நண்பர்களின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் கூட, அவர்களது விமர்சனங்களை வாசகர்களுக்கு உடனடியாகத் தெரிவித்தாக வேண்டும் என்று நினைப்பவன் நான்.
கனிமொழி மறுப்பு, சுஷ்மா விவகாரம் - போன்ற உடனடி எதிர் விளைவுகளுக்கு சென்ற இதழ்களில் முன்னுரிமை கொடுக்க வேண்டியிருந்ததால், அந்த மின்னஞ்சல் குறித்து இப்போதுதான் பேச முடிந்திருக்கிறது.
முதலில், எனது கட்டுரையில், மின்னஞ்சல் நண்பர் ஆட்சேபிக்கிற பகுதிகளின் சுருக்கத்தையும், தொடர்ந்து அவரது ஆட்சேபங்களை அடைப்புக் குறிக்குள்ளும் தருகிறேன்.
'முஸ்லிம்கள் தாக்கப்படுவதைக் கண்டித்த விஜித தேரரின் செய்தியாளர் சந்திப்பில், பௌத்த பிக்குகள் நுழைந்து தாக்குவதை மைத்ரி - ரணில் அரசு வேடிக்கை பார்க்கிறது....'
("இது என்ன புதுக்கதை? இதையெல்லாம் எங்கிருந்து பொறுக்குகிறீர்கள்? செய்தி சரியென்றே வைத்துக் கொண்டாலும், மைத்ரியும் ரணிலும் வேடிக்கை பார்த்ததாக யார் உமக்குச் சொன்னது? மைத்திரி அரசுதான் கலகொட அத்த ஞானசேரரைக் கைதுசெய்தது.... இப்போது அவர் பிணையில் வந்துள்ளார்....")
'இலங்கையின் கலாசாரத்தை பௌத்தர்கள் தான் உருவாக்கினோம் - என்கிறார்கள் சிங்கள வெறியர்கள். எங்கள் புனிதவதிகளை கிருஷாந்திகளை இசைப்பிரியாக்களைச் சீரழிக்கும் கலாச்சாரத்தைத் தான் பௌத்தம் போதித்திருக்கிறதா?....'
("இப்படி குதர்க்கமாக எழுதுவதால் உமது மன அரிப்பு குறையக் கூடும். சிங்கள மக்களுக்கென்று ஒரு மொழி - பண்பாடு உள்ளது. அதனை நாம் மதிக்க வேண்டும்.....")
'இனப்படுகொலை தொடர்பான விசாரணையிலிருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப, ராஜபக்சே குடும்பத்தினர் மீதான ஊழல் புகார்கள் தீவிரமாக விசாரிக்கப் படுவதாக நாடகமாடுகிறது இலங்கை...'
("சர்வதேச விசாரணையைத் திசை திருப்பும் நாடகம் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்........ சர்வதேச விசாரணையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நடத்துகிறது.......")
'ஊழல் புகார்கள் தொடர்பாக ராஜபக்சேக்களை விசாரிக்கும் அதிகாரிகள் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள் என்று வெளிப்படையாக எச்சரிக்கிறார் ஒரு மாகாண அமைச்சர். அந்த அதிகாரிகளை ஏவிவிடும் ரணில் - மைத்திரியை எதனால் அடிக்கப் போகிறார்கள்?....'
("மைத்திரியும் ரணிலும் ஏவி விடுகிறார்களா? ஏன் ஏவி விடவேண்டும்? தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை கல்லால் அடிக்கப் போவதாக ஒருவர் சொன்னால், மைத்திரி - ரணில் இருவரையும் அதற்குள் ஏன் இழுப்பான்?.....")
'எண்பதுகளின் தொடக்கத்தில் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடிய இடதுசாரி இளைஞர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டனர்.... ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உடல் மகாவலி நதியில் வீசப்பட்டது....'
("இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் பொல்லுதடி கொண்டா அடக்குவார்கள்?....... அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராடியவர்களுக்குத் தங்கப்பதக்கமா கொடுக்கச் சொல்கிறீர்? பச்சை இனவாதம் பேசிய கூட்டத்துக்கு ஏன் பரிந்து பேசுகிறீர்?")
'எம் இளைஞர்கள் திருப்பி அடிக்கும்போதுதான் இந்த நாடகங்கள் முற்றுப்பெறும்....'
("இன்னொரு யுத்தத்துக்கு தமிழ் இளைஞர்களை உசுப்பிவிடப் போகிறீர்களா..... பிரபாகரன் போன்றோர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறக்கிறார்கள்... உங்களது உணர்வுகளை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்....")
'ஆர்மீனியாவில் நடந்தது இனப்படுகொலை - என்பதை ஏற்க மறுத்த தலைவர் ஒருவரை கட்சியிலிருந்தே நீக்குகிறது பெல்ஜியத்தைச் சேர்ந்த சி.டி.ஹெச்.கட்சி. இங்கோ, 'இனப்படுகொலை - என்றெல்லாம் பேசாதே' என்று மிரட்டுபவர்கள்தான் தமிழ்த் தலைவர்கள். 'நடந்தது இனப்படுகொலை தான்' என்று தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் விக்னேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்றெல்லாம் யோசித்தவர்கள் இவர்கள்......'
("தீர்மானத்தை எல்லோரும் வரவேற்றனர்..... புதிய அரசு பதவியேற்ற கையோடு அப்படியொரு தீர்மானம் கொண்டுவந்தது பொருத்தமா என்பதுதான் கேள்வி....")
இனி நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.
அந்தக் கட்டுரையில் நான் எழுதியதையும், மின்னஞ்சல் கேள்விகளையும், இப்போது நான் தெரிவிக்கிற விளக்கங்களையும் சரியான இடத்தில் உங்களால் பொருத்திக்கொள்ள முடியும். (கொண்டு கூட்டுப் பொருள்கோள்!)
விஜித தேரர், அடிப்படையில் ஒரு மனிதாபிமானி என்பது அவரது தொடர் நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இதற்கு முன்பே, பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்காகப் பேசியபோது தாக்கப்பட்டவர் அவர். அப்போது அதை வேடிக்கை பார்த்தது மகிந்த ராஜபக்சே அரசு.
இப்போது, மகிந்தவின் காட்டாட்சி போயே போச்! "இது, மைத்திரி - ரணிலின் 'நல்லாட்சி'. இதைப் பற்றியெல்லாம் பேசவே கூடாது, மூச்" என்கிறார்கள் அதிமேதாவிகள். இப்போதும், முஸ்லிம் சகோதரர்களுக்காக விஜித தேரர் பேச முடியாத நிலை நீடிக்கிறதே.... எப்படிப் பேசாமல் இருக்க முடியும்? ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதைத் தவிர இதற்கு வேறென்ன அர்த்தம்?
விவரம் தெரியாத விருமாண்டிகள் மாதிரி, வெள்ளந்தியாக, 'நல்லாட்சி' என்றெல்லாம் உளறுபவர்கள், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். விஜித தேரர் அடி உதை படுவதை, அன்று, மகிந்த அரசு வேடிக்கை பார்த்தது. இன்று, மைத்திரி அரசு வேடிக்கை பார்க்கிறது.
இதையெல்லாம் கவனிக்காமல், வேறெங்கோ பராக்கு பார்த்துக் கொண்டிருப்பது எவருடைய தவறு? 'இந்தச் செய்திகளையெல்லாம் எங்கே பொறுக்குகிறீர்கள்' என்று என்னைக் கேட்பது என்ன நியாயம்?
'கடல்குதிரைகள்' திரைப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் மூச்சை முட்டுகிற நிலையிலும், எனக்கு வந்துசேர்கிற செய்திகள் சரியானவைதானா என்பதை 'கிராஸ் செக்' செய்ய நான் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது என்பதை உணராமல், 'எங்கேயிருந்து இதைப் பொறுக்குகிறாய்' என்று நக்கலடிப்பவர்கள், இலங்கையிலிருந்து, குறிப்பாக கொழும்பிலிருந்து, வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசிக்கக் கடவது! (கூடவே வீர கேசரியையும்!)
உலகை ஏமாற்ற - இனவெறி பிடித்த கலகொட அத்த ஞான சார தேரரைக் கைது செய்வதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குவதும், பௌத்த சிங்கள வெறியர்களை குளிர்விக்க அடுத்த கணமே பிணையில் விடுவதும்தானே நல்லாட்சி நாடகத்தின் லட்சணமாக இருக்கிறது!
அந்த வெறியன் வெளியே வந்ததும் - வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை இருக்கும் இந்துக் கோயில்களுக்கு விடுத்திருக்கும் பகிரங்க மிரட்டல் இந்த மின்னஞ்சல் சம்பந்தப்பட்டவர்களின் காதில் விழுந்ததா இல்லையா?
மைத்திரியின் நல்லாட்சி இதையும் வேடிக்கைதானே பார்க்கிறது....! அது ஏனென்று இவர்களுக்குப் புரிகிறதா இல்லையா?

புனிதவதியைப் போன்ற எங்கள் குழந்தைகளும், எங்கள் பிள்ளைகள் கிருஷாந்திகளும் இசைப்பிரியாக்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அனுபவிப்பதற்காகவா இந்தப் பூவுலகில் பிறப்பெடுத்தார்கள்? ஆயிரமாயிரம் சிறுமலர்களைத் தனது பூட்ஸ் காலில் போட்டு மிதிக்கிற கேவலமான கலாச்சாரத்தையா சிங்கள ராணுவ மிருகங்களுக்கு பௌத்தம் போதித்தது?
இது புகழேந்தி என்கிற தனிமனிதனுடைய மனக்குமுறல் அல்ல.... கோடிக்கணக்கான தமிழர்களின் மனக்குமுறல். போரின் பெயரால் எம் குழந்தைகளைக் கூட சீரழித்த சிங்கள மிருகங்களில் ஒரே ஒரு மிருகம் கூட சட்டத்தின் முன் இன்றுவரை நிறுத்தப்படவில்லை.
கெலம் மேக்ரே வெளியிட்ட ஆதாரத்தில், எங்கள் இசைப்பிரியாவுக்கு அருகில் நிற்கிற ஒரு சிங்கள மிருகத்தின் முகம் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறதே.... அந்த மிருகத்தின் மீதாவது மைத்திரியின் நல்லாட்சி நடவடிக்கை எடுத்ததா?
இந்த மனக்குமுறலுக்கு 'குதர்க்கம்' என்று பெயர் சூட்டி மகிழ்கிறவர்களின் நோக்கமென்ன? இதன்மூலம் தங்கள் மன அரிப்பைத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார்களா?
ஒருபுறம், மகிந்த ராஜபக்சே மீதான ஊழல் புகார்களை அவசர அவசரமாக விசாரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை மைத்திரி அரசு ஏற்படுத்துகிறது. மறுபுறம், 'இலங்கையின் புதிய அரசு ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகிறது...
அந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது' என்றெல்லாம் போதிக்கிறது அமெரிக்கா. இந்த நாடகம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதைக் கூட அறியாத அறிவிலிகளாகவே நாம் இருக்கவேண்டும் - என்று சர்வதேச சட்டாம்பிள்ளைகள் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
அமெரிக்காவின் வார்த்தைஜாலம், சர்வதேச விசாரணையை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறதா? அல்லது, குற்றவாளிகளுக்கு மேலதிக வாய்தா வாங்குவதற்கு அது வக்காலத்து போடுகிறதா?
ஊழல் புகார்களில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் ராஜபக்சேக்கள். அவர்களை விசாரிப்பது, மைத்திரி அரசு. எங்களை நாங்களே தான் விசாரித்துக் கொள்வோம் - என்று ராஜபக்சேக்கள் அடம் பிடிக்க முடியுமா? அதே அளவுகோல், போர்க்குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்தும்தானே! இலங்கை ராணுவம் குற்றஞ்சாட்டப் பட்டிருக்கிறது.
அது குறித்து நாங்களேதான் விசாரித்துக்கொள்வோம் - என்று இலங்கை அடம் பிடிப்பதும், அதற்கு அமெரிக்கா வடம் பிடிப்பதும் எந்த ஊர் போங்கு? 'நல்லாட்சி வந்துவிட்டது.... நெருக்கடி கொடுக்காதீர்கள்' என்று அமெரிக்கா ஒத்து ஊதுவது கள்ளத்தனம் இல்லாமல் வேறென்ன?
ஒருவேளை, ராஜபக்சேக்களின் ஊழல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தலாம்..... இனப்படுகொலை தொடர்பாக உள்நாட்டு விசாரணை நடத்தலாம் - என்று மாத்தி யோசிக்கிறார்களா இந்த மேதாவிகள்?
ஊழல் புகார்களை மைத்திரி அரசு விசாரிக்கட்டும்.... நம்மில் யாரும் அதன் குறுக்கே நிற்கவில்லை. ஈழத்தில் நடந்த இனப்படுகொலை பற்றியோ, குறைந்தபட்சம் போர்க்குற்றம் பற்றியோ விசாரிக்க வேண்டும் என்றால் மட்டும் ஆகப்பெரிய சக்திகள் அனைத்தும் அதற்குக் குறுக்கே நிற்கின்றன என்றால், அதன் பின்னணி என்ன?
ராஜபக்சக்கள் மீதான விசாரணையை மைத்திரியும் ரணிலும் ஏவி விடாமல், அப்புசாமியும் குப்புசாமியுமா ஏவிவிட முடியும்? ஊழல் புகார் விசாரணையை முடுக்கி விடுபவர்கள் தான், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை முடக்கி விடுகிறார்கள் என்பதை அறிய, அரசியலில் அரிச்சுவடி தெரிந்தாலே போதும். என்றாலும், வரிக்கு வரி செய்திகளைப் படிக்காமலிருக்க முடியவில்லை என்னால்!
விசாரணை அதிகாரிகளையே 'கல்லால் அடித்துக் கொல்வோம்' என்று மிரட்டும் ராஜபக்சவின் ஆதரவாளர்களுக்கு, விசாரணையை ஏவிவிடும் மைத்திரி - ரணில் மீது எவ்வளவு கோபம் இருக்கும் என்பதை உணர்த்த எழுதியதைப் புரிந்துகொள்ளாமல், இழுப்பான் - என்கிற வார்த்தையை ஏன் இழுப்பான்?
எண்பதுகளின் தொடக்கத்தில் இலங்கை ஆட்சியாளர்களால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட இடதுசாரி இளைஞர் போராட்டத்தையும், ஆயிரமாயிரம் இளைஞர்களின் பிணங்கள் மகாவலி நதியில் மிதந்ததையும் குறித்த வக்கிரப் பார்வைதான் மின்னஞ்சல் அனுப்பியவரிடம் மிகுந்திருக்கிறது என்பதை நான் மிகுந்த வேதனையுடன்தான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
சிங்களவர்களுக்கே உரிய இந்த குரூர மனப்பான்மை, தமிழில் தெளிவாக எழுதுகிற ஒருவரிடம் எப்படி தொற்றியிருக்க முடியும் என்று எனக்குள் எழுகிற கேள்விக்கு என்னாலேயே விடை தேட முடியவில்லை.
"இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் பொல்லுதடி கொண்டா அடக்குவார்கள்?......." என்று ஏறக்குறைய ஒரு பாசிஸ்ட் போன்றே எகத்தாளமாக ஆரம்பித்திருக்கிறார் மின்னஞ்சல் அனுப்பியவர். எம் இனத்தின் இயல்பான மனநிலைக்கு நேர்மாறான வக்கிர மனநிலை இது.
ஒரு ஆறு மாத காலத்தில் நமது ஒன்றரை லட்சம் உறவுகள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதற்குப் பிறகும்கூட, கொன்று குவித்த இலங்கை இராணுவத்தினர் மீது சட்ட நடவடிக்கை வேண்டியே நாம் போராடுகிறோம். 'பழிக்குப் பழி தீர்ப்போம்' என்கிற வெறியோடு அலையவில்லை நாம்.
குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்து - என்றுதான் முழங்குகிறோம். இந்த இனத்தின் ஒட்டுமொத்த மனநிலைக்கு நேர்மாறாக, அபஸ்வரம் மாதிரி ஒலிக்கிறது - 'இரும்புக்கரம் கொண்டுதான் ஒடுக்கவேண்டும்' என்கிற போதனை.
'அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராடியவர்களுக்குத் தங்கப்பதக்கமா கொடுக்கச் சொல்கிறீர்" என்கிற அடுத்த வார்த்தை, அவர் நமக்கும் சேர்த்து வைக்கிற சிங்கள ஆப்பு. அவரது அடிமனத்தில் நிஜமாகவே என்ன இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது அது.
அடுத்த இதழிலும் இதுகுறித்துப் பேசியாக வேண்டும்....
கூடவே, ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் பிரபாகரன்கள் பிறப்பார்கள் என்கிற வினோத கண்டுபிடிப்பு பற்றியும்......
விக்னேஸ்வரன் என்கிற ஒரு மக்கள் முதல்வரின் அறிவும் தெளிவும் துணிவும் மிக்க தீர்மானம் குறித்த இவர்களது பழுதுபட்ட பார்வை பற்றியும் பேசியாக வேண்டும்.......
புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com
http://www.tamilwin.com/show-RUmtyGRVSUft7E.html

Geen opmerkingen:

Een reactie posten