தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 juni 2015

பிரபாகரனின் சிலையை அகற்றிய தமிழக அரசு: போராட்டத்தில் களமிறங்கும் வைகோ!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோவிலில் வைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தலைவர் பிரபாகரனின் உருவச் சிலையை, நாகை மாவட்டத்தில் தெற்கு பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் போர்ச் சீருடையுடன் கம்பீரமாக நிற்கும் வகையில் அமைத்துள்ளனர்.
அவர்கள் வீரன் என்ற குலதெய்வத்தையும், ஐயனாரையும் வழிபட்டு வருகின்றார்கள். எனவே, தலைவர் பிரபாகரனை தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதி சிலை எடுத்துள்ளனர்.
ஆனால், அரசு அதிரடிப் படையை ஏவி, முதலில் சிலையின் தலையைத் துண்டித்து எடுத்துப் பின்னர் முழுமையாக இடித்துத் தகர்த்த அக்கிரமச் செயல் கண்டனத்திற்கு உரியதாகும்.
லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே அரசின் ராணுவம், வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்த வீட்டை இடித்துத் தரை மட்டம் ஆக்கியது.
கிளிநொச்சியில் பிரபாகரன் இயங்கிய பாசறைக் கட்டடத்தையும், மாவீரர் துயிலகங்களையும் இடித்து மண்மேடாக ஆக்கிய செயல், உலகமெல்லாம் வாழும் தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது.
புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ரிட் மனு இன்னும் நிலுவையில் உள்ளது.
இனி வரும் நாள்களில், தமிழ்த்தாயின் வீரத்திருமகன் பிரபாகரனின் சிலை தமிழகம் முழுமையும் எழும். இல்லந்தோறும் அவரது திரு உருவப் படம் அலங்கரிப்பதைத் தடுக்க முடியாது.
தெற்கு பொய்கை நல்லூரில், ஐயனார் கோவில் வளாகத்தில் கிராமத்து மக்கள் எழுப்பிய பிரபாகரன் சிலையை உடைத்து நொறுக்கிய அ.தி.மு.க. அரசைக் கண்டித்து, 9ம் திகதி செவ்வாய்க் கிழமை அன்று காலை பத்து மணி அளவில், வட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
நாட்டின் கோடானு கோடித் தமிழர்களின் நெஞ்சங்களில், குறிப்பாக இளம் தலைமுறையின் இதயச்சுவர்களில் அழியாத ஓவியமாக பிரபாகரன் இடம் பெற்றுள்ளதை எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten