தமிழக தாக்குதல் சம்பவங்களை கேள்வியுற்றவுடன் முதன்முதலாக கண்டனம் தெரிவித்து, நமது கண்டன செய்திகளை தமிழ், சிங்கள, ஆங்கில மொழி ஊடகங்களில் அறிவித்த தமிழ் கட்சியின் தலைவன் நான்.
ஏனென்றால் நாங்கள் இனவாதிகள் இல்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று எல்லா இனவாதங்களையும் நாம் கண்டிக்கிறோம்.
ஆகவே எங்களுக்கு தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை கண்டிக்க உரிமை இருக்கிறது.
ஆனால், இந்நாட்டில் இன்று தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தும் பொதுபல சேனை, சிங்கள ராவய சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு, தமிழகத்தை கண்டிக்க என்ன விதமான தார்மீக உரிமை இருக்கின்றது? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தமிழக தாக்குதல்கள் எமது கட்சியில், எமது இந்த கூட்டு அமைப்பில் இனவாதம் பேசுவோருக்கு இடமில்லை. நான் சென்னை சம்பவம் நடந்த அன்றே மாலை தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மூலமாக நடந்த சம்பவத்தை கண்டித்தும், அது தொடர்பில் அவர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் கடிதம் அனுப்பியுள்ளேன்.
ஆகவே இன்று எங்களுக்கு இந்த பெளத்த மதத்தின் பெயரில் மத, இன வாதங்களை தூண்டி விடுவோருக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவிக்கும் உரிமை இருக்கிறது. தமிழ் இந்து மக்களுக்கு எதிராக அனைத்தையும் முன்னின்று செய்து முடித்துவிட்டு, இன்று முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்காதீர்கள், முஸ்லிம் பெண்களே, நீங்கள் அபாயா அணியாதீர்கள் என்று பயமுறுத்தி இவர்கள் மதவாத பிரச்சாரம் செய்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு மாவட்ட மாலபே நகரில் ஒரு கிறிஸ்தவ வீட்டுக்குள் அடாவடியாக சென்று சென்று புனித பைபிள் நூலை தரையில் வீசி எறிகிறார்கள். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதஸ்தலங்களை தாக்குகிறார்கள். இவர்கள்தான் இன்று தமிழகத்தை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
இதை நியாய சிந்தை கொண்ட எவரும் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.உண்மையில் சென்னையில் வன்முறையில் ஈடுபட்ட ஒருசிலர் தமது செயல்கள் மூலம் இவர்களை சந்தோசப்படுத்துகிறார்கள். இவர்களும் தமது இன-மதவாத செயல்கள் மூலம் அவர்களை சந்தோசப்படுத்துகிறார்கள்.
இந்த இரண்டு தரப்பினரும் சம்பந்திகள். ஆனால், அங்கு இனவாதம் இதுவரையில் அமைப்பு ரீதியாக இல்லை. சில தனிநபர்கள் அதை அங்கு செய்கிறார்கள். ஆனால், இங்கே இவர்கள் அமைப்புரீதியாக செய்கிறார்கள்.
தமிழகத்தில் புத்த பிக்குகளை தாக்கியவர்கள் அங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்பது இவர்களது புதிய கண்டுபிடிப்பு. இங்கே இருந்துகொண்டே அதை கண்டுபிடித்துவிட்டார்கள்.
தமிழக போலீஸ் இவர்களுடன் தொடர்பு கொண்டு மேலும் தகவல்களை பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
ஜெனீவா தீர்மானம் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. சிலவேளைகளில் கடைசி நேர திருத்தங்கள் வரலாம். எப்படி இருந்தாலும் இலங்கையின் மீதான விசாரணையை இலங்கை அரசை கொண்டே விசாரிக்க சொன்னால் அது சுத்த ஏமாற்றுவித்தை.
இதை இந்தியாவும், அமெரிக்காவும் செய்து விட்டு, இலங்கை தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்று தந்து விட்டோம் என கூற முடியாது.
மனித உரிமை விசாரணை கோரிக்கைகள் ஒருபுறம் இருக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் பெயரில் நாம் அரசிடம் இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.
முதலாவது, உடனடியாக உறுதி அளித்ததை போல் வட மாகாணசபை தேர்தலை நடத்துங்கள்.
இரண்டாவது, உடனடியாக இலங்கை ஜனாதிபதிக்கும், ஐநா செயலாளர் நாயகத்துக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டறிக்கையில் சொல்லப்பட்ட 13ம் திருத்தத்தை அமுல் செய்து, அதை மேலும் அபிவிருத்தி செய்யுங்கள்.
மாகாணசபையும், 13ம் திருத்தமும், கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகளை தரவில்லை.
ஆனால், முதலில் இவற்றையாவது செய்து அரசாங்கம் தனது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். அ
தன்பிறகுதான், வட்ட-சதுர மேசை சர்வ கட்சி பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
http://news.lankasri.com/show-RUmryDRUNZntz.html
Geen opmerkingen:
Een reactie posten