தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 maart 2013

விடுதலைப் புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது!- பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர்


இலங்கையில் தமிழர் படுகொலைக்கு இந்தியா உடந்தையாக இருந்தது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டி உள்ளார்.
லோக்சபாவில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான சிறப்பு விவாத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நமது காலத்தில் நடந்த துயரம் கொடூரமானது. கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கையில் மிகப் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
மனித உரிமை மீறல்கள் நடந்தேறி வருகின்றன. இலங்கை இராணுவ பங்கர் ஒன்றில் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியையும் அவன் சிறிது நேரத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்படுவதையும் பார்க்கும் காட்சிகள் அனைவரையும் உறையவைக்கும்.
இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்தப் படம் ஒன்றே சொல்லும். இலங்கை அண்டை நாடு. அதனால் மற்ற நாடுகளைப் போல இலங்கை பிரச்சினையை கையாள முடியாது. ஆனால் இலங்கையை கையாள்வது எளிதானதுதான்.
இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும். அதற்கு இந்த விவாதம் உதவ வேண்டும். 2009 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பே இலங்கையில் போர் முடிந்துவிட வேண்டும் என இந்தியா கருதியது.
இந்த லோக்சபா தேர்தல் காலத்தை இலங்கை அதிபர் ராஜபக்ச தந்திரமாக பயன்படுத்திக் கொண்டார். இதை பயன்படுத்தி தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தி வெற்றி பெற்றார்.
இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஈழப் போர் முடியும் வரை இந்தியாவும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது.
2009ம் ஆண்டு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என பிரதமரிடம் பேசினேன். ஆனால் நட்பு நாடு என்பதால் தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர்.
இலங்கையில் போர் முடிந்த பின்னரும் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையின் வடபகுதியில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
13வது அரசியல் சாசன திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசு திவிநெகும என்ற சட்டம் மூலம் மாகாண சபைகளின் அதிகராங்களைக் குறைத்திருக்கிறது.
மேலும் இலங்கையின் தலைமை நீதிபதியையே பதவி நீக்கம் செய்திருக்கிறத. இது தொடர்பாக விசாரிக்க சென்ற சர்வதேச விசாரணைக் குழுவை அனுமதிக்கவில்லை.
இலங்கை மீதான புகார்கள் தொடர்பாக இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றங்கள் செய்தோர் தண்டிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten