இலங்கைத் தமிழர்களின் விடியலுக்காக, டில்லி "டெசோ' மாநாடு, "பந்த்'' போராட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்டமாக, ஒரு கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, விண்ணப்பப்படிவத்தை பிரதமரிடம் வழங்குவதற்கு தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக, மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., அமைச்சர்கள் வெளியேறி, அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கவும், தி.மு.க., தரப்பு தயாராகியுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு எதிராக, ஐ.நா., சபையில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, "டெசோ' சார்பில், டில்லியில் நடந்த மாநாடு படுதோல்வி அடைந்ததால், தமிழகம் முழுவதும், "பந்த்' போராட்டம் நடத்தப்பட்டது.
"டெசோ' சார்பில் நடைபெறும் அடுக்கடுக்கான போராட்டங்களை முறியடிப்பதற்காக, ம.தி.மு.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள், தமிழ் ஆர்வலர்களின் ஆதரவில், தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில், "டெசோ' அமைப்பின் போராட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், இலங்கை தமிழர்கள் நலனுக்காக, 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி, அந்த விண்ணப்ப படிவங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து இயக்க போராட்டத்திற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேறி, மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கவும் தி.மு.க., தரப்பு தயாராகியுள்ளது.
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
காங்கிரஸ் மீது, தி.மு.க., தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையில், "டெசோ' அமைப்பின் கோரிக்கையை, மத்திய அரசு பரிசீலனை செய்வது குறித்து எந்த உறுதியும் அளிக்காமல் இருப்பதால், 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, அந்த விண்ணப்ப படிவங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்க வேண்டும் என, தி.மு.க., தரப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்கும் பின்னும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறி, மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கவும் தி.மு.க., தயாராக உள்ளது.
அதற்கு காரணம், கடந்த 2009ம் ஆண்டில், போர் நடந்த போது, தி.மு.க., - எம்.பி.,க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த கடிதங்களை பிரதமரிடம் வழங்காமல் கருணாநிதியிடம் வழங்கி, நாடகமாடினர் என்ற விமர்சனம் எழுந்தது.
இலங்கை தமிழர்கள் விஷயத்தில், "கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரத்தை' தி.மு.க.,வினர் செய்கின்றனர் என்ற விமர்சனத்தையும் தமிழ் ஆர்வலர்கள் எடுத்து வைக்கின்றனர்.
எனவே, இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என, ஸ்டாலின் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten