ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்தின் இறுதி நகல் வரைபுக்காக அரசாங்கம் காத்துக் கொண்டிருப்பதாக ஜெனீவா சென்றுள்ள இலங்கை தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இறுதி நகல் வரைபு சமர்ப்பிக்கப்பட்டதும் ஏனைய நாடுகள் இத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது பின்பற்றப்படும் அவற்றின் நிலைப்பாடு பற்றி முடிவு செய்யும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது, இந்தத் தீர்மானமானது வெறுப்புணர்வுடனான நிகழ்ச்சி நிரலின் பேரில் கொண்டு வரப்படுகிறதே தவிர, இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாடுகள் தொடர்பாக கொண்டு வரப்படவில்லை என்றும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதித் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும் இலங்கை மக்களுக்கு உகந்ததை நிறைவேற்ற அரசாங்கம் அதனது உச்சபட்ச முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான உலகளாவிய காலக்கிரம மீளாய்வு அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பிலும் அமைச்சர் திருப்தி வெளியிட்டுள்ளார்.
அறிக்கை அங்கீகரிக்கப்படும் போது சில நாடுகள் கரிசனைகளை எழுப்பிய போதிலும் அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten