ஆட்சியில் உள்ள அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி விலைபோகவோ அடிபணியவோ மாட்டோம். இணக்க அரசியலுக்கும் நாம் வரவும் மாட்டோம் என்ற செய்தியினை அரசுக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் அழித்து விட்டோம் என்றெண்ணி தமிழர்களை அடிமையாக்கி விட முடியாது. எமது உரிமைகளை மீட்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.
காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு காணாமல் போனோர் சங்கத்தினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
எனினும் தமது உறவுகளை மீட்டுத் தருமாறு அந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து சென்ற உறவுகளை நேற்று முன்தினம் வவுனியாவில் வைத்து பொலிஸார் இடை மறித்ததுடன் மேலும் பயணிக்க விடாது தடுத்தும் நிறுத்தியுள்ளனர்.
எனினும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாத மக்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி போராட்டம் ஒன்றினையும் நேற்று நடத்தினர்.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten