நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையினால் கொழும்பு, புதுடில்லி, ஜெனிவா, வாசிங்டன் இந்த நான்கு நகரங்களுக்கும் இடையில் ஒரு வெளிப்படையான இராஜதந்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலின் சிறிய தீவான இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், அந்தத் தீர்மானத்தை மதித்து நடக்க இலங்கை தவறியது. அதன் தொடர்ச்சியாக மற்றொரு தீர்மானத்தை கொண்டுவர அமெரிக்கா தயாராகியுள்ளது. இவைதான் இப்போதைய இராஜதந்திரப் போருக்கான அடித்தளங்கள்.
இலங்கை மீது அமெரிக்கா கொண்டுள்ள கரிசனைகளுக்கு பல காரணங்கள் உள்ளன.
பூகோள ரீதியான நலன்களை மட்டுமன்றி சமகால அரசியல் இராஜதந்திர நலன்களையும் முன்னிறுத்தியே இலங்கையைத் தன் கட்டுக்கள் வைத்திருக்கும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
சீனாவின் நலன்களுக்கு சார்பாக இலங்கை செயற்படுவது மட்டும் அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டுக்கு ஒரே காரணம் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அதற்கும் அப்பால் அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றும் வகையில் இலங்கை நடந்து கொள்ளாதது, அதன் கருத்துகளை மீறி ஆட்சியாளர்கள் நடந்து கொள்வது என்பன அமெரிக்காவின் சினத்துக்கும், கரிசனைக்கும் முக்கிய காரணிகள் என்பதை மறுக்க முடியாது.
விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதற்கு சங்கிலித் தொடரான பல நிகழ்வுகள், முடிவுகள் எவ்வாறு காரணமாக அமைந்தனவோ அதுபோன்றே இலங்கை மீதான அமெரிக்கா அழுத்தங்களுக்கும் தொடரான பல நிகழ்வுகளும், முடிவுகளும் காரணமாகி உள்ளன.
வெளிப்படையாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியதாக, தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியதாக, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், இவையெல்லாம் தான் இலங்கை மீது கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு காரணமல்ல.
இவற்றுக்கு அப்பால் தெரிந்தும் தெரியாமலுமான பல நிகழ்வுகள், முடிவுகளும் காரணமாக இருந்துள்ளன.
வெளிப்படுத்த முடியாத காரணங்களை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்கா போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களைக் கையில் எடுத்துள்ளது.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தவறியதையும் இலங்கை மீதான ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளார் அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்.
அதேவேளை அரசியலமைப்பின் 18வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை வரையறையின்றி நீடித்தமை, சுதந்திர ஆணைக்குழுக்களை நியமிக்கும் அதிகாரங்களை முடக்கியமை, பிரதம நீதியரசர் மீதான நடவடிக்கை என்பன இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தை பின்னோக்கித் தள்ளி வருவதாக அமெரிக்கா உணர்ந்துள்ளது.
இதை முன்னிறுத்தி ஆட்சி மாற்றம் ஒன்றை அமெரிக்கா விரும்புகின்றது என்று கூடச் சொல்லலாம்.
ஆனால் அதற்கான புறச்சூழல் இலங்கையில் இல்லாத நிலையில் அமெரிக்கா தனது அழுத்தங்களை அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை.
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரப் போகும் தீர்மானம் கடுமையானதாகவே இருக்கும் என்று கடந்த வாரம் கொழும்பு வந்த யு. எஸ். எய்ட் அதிகாரியான டெனிஸ் ரோலின்ஸ் கூறியிருந்தார்.
கடந்த முறையை விடவும் தீர்மானம் கடுமையை வெளிப்படுத்தும் போக்கில் இருக்க வேணடியதே யதார்த்தம்.
அவ்வாறு இல்லாவிடின் தீர்மானத்தை கொண்டுவர வேண்டிய தேவையும் அமெரிக்காவுக்கு இருக்காது.
அதைக்கொண்டு வருவதிலும் அர்த்தமில்லை.
அதேவேளை, புதுடில்லியோ இந்த அமெரிக்கத் தீர்மானம் தொடர்பாக எந்த இறுதியான முடிவையும் அறிவிக்கவில்லை.
ஆனால் அமெரிக்கத் தீர்மானத்தை அது பெரிதாக வரவேற்கவில்லை என்ப|து மட்டும் உண்மை.
அதாவது சர்வதேச விசாரணையைக் கோரும் எத்தகைய தீர்மானத்தையும் புதுடில்லி விரும்பாது.
இதற்கிடையே புதுடில்லியுடன் முன்னைய நெருக்கத்தைக் கொண்டிருக்காது போனாலும் ஜெனிவா தீர்மானத்தின் அழுத்தத்தில் இருந்து தம்மை இந்தியா கைவிடாமல் காப்பாற்றும் என்று இலங்கை நம்புவதாகத் தெரிகிறது.
தீர்மானத்தை இந்தியா எதிர்க்காது போனாலும் அதன் கடுந்தன்மையை கடந்த முறைபோலக் குறைப்பதற்கு இந்தியாவின் உதவியை இலங்கை நாடியதாகத் தெரிகிறது.
கடந்தாண்டு ஜெனிவாவில் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்ட தீர்மானத்தின் பல வாசகங்கள், இலங்கைக்கு கடுமையான அ|ழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலும், காலக்கெடு வழங்கும் வகையிலும் இடம்பெற்றிருந்தன.
ஆனால் இந்தியா தான் அதற்குள் புகுந்து தாம் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், கடும்போக்கை குறைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
அதன்படியே அமெரிக்காவும் இணங்கி மென்போக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தது.
அப்போது இலங்கைக்கு எதிராக இந்தியா நடந்து கொண்டு விட்டதே என்று ஆதங்கப்பட்ட இலங்கையிடம், அமெரிக்கத் தீர்மானத்தை வலுவற்றதாக்கி, அதனைச் சமநிலைப்படுத்தியது இந்தியாதான் என்று சாதனைப்பாணியில் கூறியிருந்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்.
இப்போது இலங்கையை நம்பினோம், ஏமாற்றி விட்டது என்று அமெரிக்காவும் சொல்கிறது. இந்தியாவும் சொல்கிறது.
இதனால் அமெரிக்கா எத்தகைய கடும்போக்கான தீர்மான வரைபை முன்வைத்தாலும் அதை எதிர்க்க முடியாத நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்றும், அவ்வாறு எதிர்த்தால், வாக்கெடுப்பில் படுதோல்வியை இலங்கை சந்திக்கும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்சுக்கு இரகசியத் தகவல் அனுப்பியதாகவும் ஒரு செய்தி உள்ளது.
ஆனால் அமெரிக்க பிரதிநிதி எஸ்தர் பிரிம்மர் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப் போவதாக ஜெனிவாவில் அறிவித்ததும், இலங்கைப் பிரதிநிதி பிரியங்கா விக்ரமசிங்க அந்தத் தீர்மானத்தை இலங்கை எதிர்க்கும் என்று பதிலளித்தார்.
இந்தியா கொடுத்த ஆலோசனையை மீறி அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்க இலங்கை துணிந்து விட்டது.
அதேவேளை இந்தியாவின் இன்னொரு ஆலோசனையையும் இலங்கை கரிசனைக்கு எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஜெனிவா தீர்மான வரைபு குறித்து அமெரிக்காவுடனேயே பேசிக்கொள்ளுமாறு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது.
இதன் அர்த்தம் என்னவென்றால் இடையில் நாம் புகுந்து எதையும் செய்ய மாட்டோம் என்பதே.
கிட்டத்தட்ட இலங்கையை கைவிட்டது போன்றதே இது.
ஆனால் இந்தியாவின் பேச்சை ஏற்று அமெரிக்காவுடன் இலங்'கை பேசுமா என்று தெரியவில்லை.
எனினும் இலங்கை விவகாரத்தில் அமெரிக்க அணுகுமுறையும், இந்திய அணுகுமுறையும் வேறுபட்டவை என்பதை உணர முடிகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், 13வது திருத்தம், பொறுப்புக்கூறல் போன்றன குறித்து இலங்கையுடனான ஒவ்வொரு அதிகாரபூர்வ சந்திப்புகளின் போதும் வலியுறுத்துவதாகவும், இதற்குமேல் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் கைவிரித்திருந்தார்.
அதற்கு திமுக, அதிமுக, பாஜக உறுப்பினர்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்றால் போருக்கு எப்படி உதவினீர்கள்? படைகளை எப்படி அனுப்பினீர்கள்? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
ஆனால் அதையெல்லாம் சல்மான் குர்ஷித் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
இலங்கை விடயத்தில் இந்தியா இன்னும் கண்டும் காணாத போக்கில் இருப்பதையே விரும்புகிறது.
அதற்காகவே அது உள்நாட்டு விவகாரம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒதுங்கப் பார்க்கிறது.
ஆனால் அமெரிக்காவோ அடிமேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும் என்ற பாணியில் செயற்படுகிறது.
அதற்காகவே அடுத்தடுத்த தீர்மானங்களை முன்வைக்க முடிவு செய்துள்ளது.
இலங்கை, ஒன்றில் அமெரிக்காவுக்கு நல்லபிள்ளையாக நடந்து கொண்டிருக்க வேண்டும், அல்லது இந்தியாவுக்கு நல்ல பிள்ளையாக இருந்திருக்க வேண்டும்.
இந்த இரண்டையும் கைவிட்டு சீனாவின் செல்லப்பிள்ளை ஆனதால் ஒரு முட்டுச் சந்தியில் முடங்கிப் போயுள்ளது.
இந்தநிலையில் ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இலங்கையை மீட்க யாருமே முன்வராத நிலைதான் உள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் கென்யாவும், உகண்டாவும் தான் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளன.
அதுவும் அதிகாரபூர்வ அறிவிப்புக் கிடையாது.
கொழும்பு வந்த உகண்டா சுகாதார அமைச்சரும், கென்யா நாடாளுமன்ற உறுப்பினரும் கூறியவைதான்.
ரஷ்யா அவ்வாறு கூறினாலும் அதற்கு ஜெனிவாவில் வாக்களிக்கும் உரிமை இல்லை.
கடந்தமுறை அமெரிக்கத் தீர்மானத்தை 24 நாடுகள் தான் ஆதரித்தன.
இம்'முறை அதைவிட அதிகம் நாடுகள் ஆதரவளிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்க முடிவு செய்துள்ளதால் அதிலுள்ள 11 நாடுகள் ஏற்கனவே இலங்கைக்கு எதிராகத் திரும்பி விட்டன.
இந்த நிலையில் ஜெனிவா களத்தைக் கையாளும் மையங்களாக வாசிங்டனும், புதுடில்லியும், கொழும்பும் மாறியுள்ளன.
இந்த இராஜதந்திரப் போரில் இலங்கையைக் காப்பாற்றும் வெளிப்படையான முயற்சிகளில் முக்கிய நாடுகள் எதுவும் இதுவரை இறங்கவில்லை.
இது உலக அரங்கில் இலங்கை நண்பர்களை தொலைத்து வருகிறது என்பதற்கான அடையாளம் மட்டுமன்றி, சர்வதேச அரங்கில் இலங்கை எந்தளவுக்குத் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஹரிகரன்
http://news.lankasri.com/show-RUmryDTXNYlo2.html
Geen opmerkingen:
Een reactie posten