தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 maart 2013

கூடங்குளம் அணுக்கசிவு தொடர்பில் இலங்கை முறையிடப் போவதில்லை!– ஆங்கில ஊடகம் (செய்தித்துளிகள்) !


கூடங்குளம் அணு மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள அணுகசிவு தொடர்பில் தகவல் கிடைத்திருந்தாலும், அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச அணுசக்தி அமைப்பில் முறைபாடு செய்யப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அணு மின்னுற்பத்தி நிலையத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடி;கை எடுத்தால், அதற்கு எதிராக இந்தியா செயற்பட்டு விடுமோ என்ற அச்சம் இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது.
இதனால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்படும். பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துவிடும் என்று அரசாங்கம் அஞ்சுவதாகவும் குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் அணுக்கசிவு தொடர்பில் அரசாங்கம் மௌனமாகவே இருக்கும் என்றும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கூடங்குளத்தில் கதிரியக்க கசிவு செய்தியை இந்தியா மறுத்துள்ளது
கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையில் கதிரியக்க கசிவுகள் ஏற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை, இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் உள்ள இந்தியாவின் உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், அணுக்கசிவு குறித்த செய்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தில் கதிரியக்க கசிவுகள் ஏற்பட்டதாக தெரிவித்து, தமிழகத்திலும், இலங்கையிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படைஅற்றவை என்று இந்திய உயர்ஸ்தானிகரத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கூடங்குளம் திட்டம் மிகவும் பாதுகாப்பான முறையில் இடம்பெற்று வருவதாகவும், இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அணுமின்னுற்பத்தி நிலையத்தின் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்தள விமான நிலைய அமைப்பு வெற்றியல்ல – ஐக்கிய தேசியக் கட்சி
மத்தள விமான நிலையத்தின் பணிகள் வெற்றிமாக நிறைவடைவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்தை, ஐக்கிய தேசிய கட்சி நேற்று நிராகரித்துள்ளது
ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து இது தொடர்பில் உரையாற்றினார்.
இதன்போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்குவதற்கு பதிலாக, அரசாங்கம் மத்தள ராஜபக்ஷ வானூர்தி நிலையத்தை உருவாக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் இரண்டு விமான நிலையங்களையும் இணைப்பது தொடர்பிலும் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதற்கிடையில் சில விமானங்களை மத்தள வானூர்திநிலையத்தில் பலவந்தமாக தரையிறக்க முயற்சிக்கப்படுவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டிள்ளார்
இவ்வாறான நிலையில், மத்தள வானூர்தி நிலையத்தில் அரசாங்கம் வெற்றிப்பெற்றதாக கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி,முல்லைத்தீவு மக்களுக்காக ஜப்பான் நிதியுதவி
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேற்றப்பட்டுள்ள யுத்த பாதிப்புக்கு உட்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக, ஜப்பான் நிதி உதவி வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை நேற்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
இதன் கீழ் 4 மில்லியன் டொலர்களை ஜப்பான் வழங்கியுள்ளது.
யுத்தபாதிப்புக்கு உட்பட்ட மக்களுக்கான சமூக உட்கட்டுமான வசதிகள் மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் சுமார் 98 ஆயிரம் மக்கள் நன்மை அடையவுள்ளதாகவும் ஜப்பானின் தூதரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தியவர் கைது 
இலங்கைக்கு சுமார் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இதன் பெறுமதி 15 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் புத்தளம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர் சோதனைக்கு உட்படுத்தியபோது, தம்மிடம் பிலாஸ்ட்டிக் நகைகள் இருப்பதாக அவர் சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்
எனினும் சோதனையின் பின்னர் அவரிடம் இருந்து இந்த கஞ்சா தொகை மீட்கப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten