போர் நிறுத்தப்பட்டதாக சிங்கள அரசு பொய் சொன்னதே ஒரு போர்க்குற்றம்தானே? இதற்கு வழி காணத்தான் தற்போது தி.மு.கழகம் ஆட்சியிலே இல்லாவிட்டாலும்கூட, ‘டெசோ’ இயக்கத்தை மீண்டும் ஏற்படுத்தி அதன் சார்பாக பல போராட்டங்களையும், மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறோம். என கருணாநிதி தெரிவித்தார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2009ம் ஆண்டு இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் நடைபெற்ற போது இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற உணர்வுபூர்வமான அக்கறையை, அப்போதே காட்டவில்லை என்பதைப் போல ஒருசிலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை; அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை தி.மு.கழகம் அப்போது ஆட்சியிலே இருந்த காரணத்தால் தடுத்து நிறுத்தியிருக்கலாம், ஆனாலும் தடுத்து நிறுத்தவில்லை என்பதைப்போல தெரிந்தோ, தெரியாமலோ கூறி வருகிறார்கள்.
2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, தி.மு.கழகம் எதுவும் செய்யவில்லையா? அனைத்துக்கட்சி கூட்டம் மற்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
26-4-2009 அன்று விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா.சபை ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம்.
இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமுலுக்கு வரும். இலங்கை இராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
26ம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்குப் பின் அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை. போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பலமுறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்கள்.
அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் என் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன்.
அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த நான் என் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப் படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், நானாக முடிவெடுத்துச் சென்றேன்.
அதே நாளில் பகல் 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் “இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்து விட்டது.
வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்று இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்து குண்டு வீசுவதும் நிறுத்தப்படுகிறது. வடக்கில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுவார்கள். இனி அப்பாவி மக்களை பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.
இலங்கை அரசு வெளியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையிலும்; பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தியதன் அடிப்படையிலும் மதியம் 1 மணி அளவில் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.
இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மையென்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால் உண்ணாவிரதத்தை நான் திரும்பப் பெற்றேன்.
ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்சவின் சிங்கள பேரினவாதப் பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர்.
போராட்டத்தை நிறுத்துவதற்கான எவ்வளவோ முயற்சிகளை நாம் மேற்கொண்டோம். அதற்கு உறுதுணையாக மத்திய அரசும், பிரதமரும், மத்திய அமைச்சர்களும் இருந்தும்கூட, சிங்கள இராணுவம் தன்னுடைய தாக்குதலைத் தொடர்ந்தது. இன்னமும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
போர் நிறுத்தப்பட்டதாக சிங்கள அரசு பொய் சொன்னதே ஒரு போர்க்குற்றம்தானே?
இதற்கு வழி காணத்தான் தற்போது தி.மு.கழகம் ஆட்சியிலே இல்லாவிட்டாலும்கூட, ‘டெசோ’ இயக்கத்தை மீண்டும் ஏற்படுத்தி அதன் சார்பாக பல போராட்டங்களையும், மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறோம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நான் அக்கறை காட்டியதற்காகவே இரண்டு முறை ஆட்சியை இழந்திருக்கிறேன்.
சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையே பேராசிரியரோடு சேர்ந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதற்கு மேலும் விஷமத் தனமானப் பிரச்சாரங்களுக்கு விளக்க மளிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.
12ம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை எப்போதும் போல வெற்றிகரமாக ஆக்கித் தர வேண்டியது தமிழகத்திலே உள்ள அனைத்துச் சாராரையும் சேர்ந்ததாகும்.
இந்த நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு, மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஜெனீவா நகரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலே இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை முழுமனதாக ஆதரிக்க முன்வர வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்து, அதற்கான அறிவிப்பினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten