தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 maart 2013

சர்வதேச போர்க்குற்ற விசாரணை! இலங்கை இராணுவம் அச்சம்! தளபதி வன்னி முகாம்களுக்கு விஜயம்!


ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்துலக போர்க்குற்ற விசாரணை பற்றிய சந்தேகங்கள் சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக வன்னிப் பகுதியில் உள்ள, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிரமாகப் பங்கெடுத்த அரச படையினர் மத்தியில், இந்த விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.
குறிப்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுத்திருந்த எச்சரிக்கை படையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவில் என்ன நடந்தது என்று விசாரிக்க அனைத்துலக குழுவொன்றை ஐ.நா அனுப்பவுள்ளதாகவும், வீசா இல்லாமல் வரக்கூடிய அந்தக் குழு இலங்கைக்குள் வரப்போவது நிச்சயம் என்று அவர் கூறியிருந்தார்.
இது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணை பற்றிய அச்சத்தை படையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதையடுத்து சிறிலங்காப் படையினர் மத்தியில், ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தீர்க்கும் முயற்சியாக, சிறிலங்கா இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் கடந்த இரண்டு நாட்களாக வன்னியில் தங்கியிருந்து, அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
நேற்று முன்தினம் கிளிநொச்சிப் படைத்தளத்துக்குச் சென்ற இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, பின்னர், பூநகரியில் உள்ள 66வது டிவிசன் தலைமையகம், துணுக்காயில் உள்ள 65வது டிவிசன் தலைமையகம் ஆகியவற்றுக்கும் சென்று படையினருடன் கலந்துரையாடினார்.
இதன்போது, இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே அனைத்துலக அரங்கில் இலங்கை மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.
படையினருக்கு பெரும் பக்கபலமாக உள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவையும் அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே இந்தக் குற்றச்சாட்டுகளின் நோக்கம் என்றும் அவர் விபரித்திருந்தார்.
இதையடுத்து நேற்று முல்லைத்தீவு படைத் தலைமையகத்துக்குச் சென்ற இராணுவத் தளபதி, அங்கும் படையினருடன் கலந்துரையாடியுள்ளார்.
அதையடுத்து புதுக்குடியிருப்பில் உள்ள 68வது டிவிசன் தலைமையகத்திலும், ஒட்டுசுட்டானில் உள்ள 64வது டிவிசன் தலைமையகத்திலும், படையினர் மத்தியில் அவர் உரையாற்றியுள்ளார்.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணை பற்றிய அச்சத்தில் இருந்து படையினரை விடுவிக்கும் உளவியல் நடவடிக்கையாகவே, சிறிலங்கா இராணுவத் தளபதியின் வன்னிப் பயணம் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டும் ஜெனிவா கூட்டத்தொடரின்போது, இராணுவத் தளபதி இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/show-RUmryDTaNYkry.html

Geen opmerkingen:

Een reactie posten