தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 maart 2013

பாலச்சந்திரன் படங்கள் பொய்யென்றால்! அரசினது பிடியில்? லண்டன் சண்டே கார்டியன் -


12-வயதுச் சிறுவனான பாலச்சந்திரனது படுகொலையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் மிகக்கொடூரமானவை.
“இந்தப்புகைப்படங்கள் பொய்யென்றால், பிரபாகரனின் மகன் உயிருடன் இருக்கவேண்டும். அவன் உயிருடன் இருந்தால் அவன் இலங்கை அரசினது பிடியில்தான் இருக்கவேண்டும். அதிகாரிகள் செய்ய வேண்டியதெல்லாம் அந்தச் சிறுவனை வெளிக்கொணர வேண்டியது மட்டுமே.”
(லண்டன் சண்டே கார்டியன் பத்திரிகைக்காக அதன் தலைமை ஆசிரியர் எம்.ஜே. அக்பர் – 24-02-2013)
இறப்பு என்பது ஒரு அரைவாசி உண்மையாக இருக்க முடியுமா? இந்தக்கேள்வி வெளிப்படையாகவே ஒரு கொலைகாரனது இறுதி நம்பிக்கையாகவும், சிறந்த தற்பாதுகாப்பாகவும் அமைகிறது. துப்புத் துலங்காத வகையில் இடம்பெற்றிருக்ககூடிய கட்டுக்கதைகளில் கொலையென்பது பலசந்தர்ப்பங்களில் ஒரு திறந்த விவாதமாக இருக்கிறது என்பதில் நிறைய உண்மைகள் இருக்கின்றன. இது இறந்தவரிற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை, ஏனெனில் உயிரிழப்பு இல்லாமல் ஒருபோதும் படுகொலையொன்று இடம்பெற்றிருக்க முடியாது. ஆனால், உயிருடன் இருப்பவர்களுக்கு இது மிகப்பெரியதொரு கரிசனையாகும்.
ஒரு படுகொலை எவ்வகை கொடூரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு அப்பால், சரியான நீதி கிடைக்காமல் அதற்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய முடிவொன்று இருக்கமுடியாது.
12-வயதுச் சிறுவனான பாலச்சந்திரனது படுகொலையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் மிகக்கொடூரமானவை. அப்பாவித்தன்மையுடைய அவனது அழகிய முகத்தோற்றம் கொலையின் வக்கிரம் தொடர்பாக இருக்கக்கூடிய எமது கற்பனைக்கு மேலதிக சித்திரவதையாக அமைகிறது. கொலைகாரர்களைப் பொறுத்தவரை, அந்தச் சிறுவன் செய்த தப்பெல்லாம் பிழையான ஒரு பெற்றோருக்கு மகனாகப் பிறந்தது மட்டுமே. அவனது தந்தை பிரபாகரன், தோற்கடிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் சர்வாதிகாரத் தலைவர். இவர் இலங்கையைப் பிரித்து, அங்குவாழும் தமிழர்களுக்கெனத் தனிநாடு ஒன்றைப் பெறும் முயற்சியில் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.
எந்தப் போருமே இன்பமானதாக இருக்காது. ஆனால் விசேடமாக இலங்கையில் இடம்பெற்ற இந்தப் போர் மிகவும் ஈவிரக்கமற்றது. 2008-09 குளிர்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டதன் பின்னர் பாலச்சந்திரன் ஒரு பணயக்கைதியாகப் பிடிக்கப்பட்டான்.
இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களிற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டம் நடாத்திவரும் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி, இந்தச் சிறுவனது படுகொலை தொடர்பான ஒளிநாடாக்களை வெளியிட்டிருக்கிறது. அத்துடன் இந்தப் படுகொலைக்கான உத்தரவு மிகவும் உயர்பீடத்திலிருந்தே பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வ கருத்துவெளியிட்டுள்ள இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் இவை “பொய்கள், அரைவாசி-உண்மைகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத புனைகதைகள்” என்று மறுதலித்திருக்கிறார்.
இவை அரைவாசி உண்மையென்றால், அதன் மிகுதி அரைவாசி என்ன?
வெளியிடப்பட்டுள்ள இந்த ஒளிநாடாவைப் பொறுத்தவரை, இந்தச் சிறுவனின் படுகொலைக்கான உத்தரவு மிகவும் உயர்பீடத்திலிருந்தே பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்தச் சிறுபகுதி மட்டுமே இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது. ஆனாலும், அந்த உத்தரவு எங்கிருந்து வந்தது என்ற தகவலிற்கான உத்தியோகபூர்வ ஆதாரம் மேற்கோள் காட்டப்படாவிட்டிருந்தாலும் கூட, அவை எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பது பரமரகசியம்.
நாட்டின் அதியுயர் பீடத்தின் அங்கீகாரமின்றி, இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த சிறைக்கைதியை கொன்றொழிக்கும் உத்தரவினை வழங்கும் விஷப்பரீட்சையில் எந்தவொரு அதிகாரியும் இறங்கியிருக்க மாட்டார்.
இராணுவப் பேச்சாளர் இந்தச் செய்தியினை மறுதலித்த அடுத்த 24 மணி நேரத்தினுள், இலங்கை அரசாங்கத்தில் இருக்கக்கூடிய அதிகூடிய புத்திஜீவி, இந்த ஒளிநாடாக்கள் செயற்கையாக உருமாற்றம் செய்யப்பட்டவை என்று தெரிவித்திருக்கிறார். ஆனாலும் சனல் 4 தொலைக்காட்சி, இந்த ஒளிநாடாக்கள், புகைப்படங்கள் சுயாதீனமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உறுதிப்பட்டவை என்று தெரிவித்திருக்கிறது.
ஆனாலும் இதற்கு மிகச் சுருக்கமான விடையொன்று இருக்கிறது. அதாவது, இந்தப் புகைப்படங்கள் உண்மைக்குப் புறம்பானவையென்றால், அந்தச் சிறுவன் தற்போது உயிருடன் இருக்கவேண்டும். அவன் உயிருடன் இருக்கிறானென்றால், அவன் இலங்கை அரசாங்கத்தின் கையில் இருக்கவேண்டும். அந்நாட்டு அதிகாரிகள் செய்யவேண்டியதெல்லாம் அந்தச் சிறுவனை வெளிக்கொணரவேண்டியது மட்டுமே. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சிறைக்கைதியை உயிருடன் நீதியின் முன் வெளிக்கொணரவேண்டியது உச்சக்கட்டத் தேவையாகும்.
இது இங்கு இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிது. ஆகவே, இதனைத் தொடர்ந்து இந்தவிடயம் நிசப்தமாகிவிடும். ஊடகங்கள் கூட இவ்வாறான விடயங்களைத் எப்போதுமே மீள்பிரசுரம் செய்துகொண்டிருக்காது என்ற அதீத நம்பிக்கையின் அடிப்படையில், இந்தவிடயம் ஒட்டுமொத்தமாக நிசப்தமாகிவிடும்.
இலங்கையில் தமது நலனில் அதிக கவனம் செலுத்தும் உலகின் மூன்று முக்கிய சக்திகளான இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த விடயத்தில் இருக்ககூடிய இந்த நிசப்தத்தினை தற்போது ஆதரிப்பது போன்று எதிர்காலத்திலும் ஆதரிக்கும். எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில்கூட இலங்கை அரசாங்கத்தை எவருமே காத்திரமாகக் கேள்வி கேட்கவோ அல்லது இவ்வாறான படுகொலைகளை மேற்கொள்ள முடிவுசெய்த தற்போது ஆட்சியிலுள்ள அந்த அரசுடனான உறவுகளை நலினப்படுத்தவோ மாட்டார்கள். மாறாக, அவர்கள் இந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான தர்க்கரீதியான நியாயங்களை ஏற்றுக்கொள்வார்கள்.
ஒரு காரணத்திற்காக, ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே கொழும்பு இந்தச் சிறுவனை படுகொலைசெய்திருக்கிறது. அதாவது, அந்தச் சிறுவன் தனது தந்தையாரின் கிரீடத்தை இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடத்தின் பின்னர் சூடிக்கொள்ளக்கூடாது என்பதே அதுவாகும். சட்டவரம்புகளிற்கு அப்பாற்பட்ட முறையில் அவனை அகற்றி விடுவதே அவர்களின் ஒரே தீர்வாக இருந்தது.
பயங்கரவாதம் என்ற விடயத்தில் நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, புதுடெல்லி, பீஜிங் மற்றும் வாசிங்டன் என்பன மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதில்லை என்பது வெள்ளிடைமலை. ஆகவே, இதுவிடயத்தில் ஒருவர் குற்றவாளியாக்கப்பட்டால், ஏனையோரினதும் முகத்திரைகளும் கிழிந்து அம்பலமாகி ஜெனிவாவில் மட்டுமல்ல ஏனைய இடங்களிலும் அவர்களிற்கெதிராகப் பிசாசுகள் கிளம்பிவிடும் என்பதே அவர்களிற்கு இருக்ககூடிய பயம்.
படுகொலைகளில் மரபுவழியாக இருந்துவரும் வழமையான மர்மம் போலவே, இங்கும் கொலையாளிகள் முக்கியமான அம்சமொன்றைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். அதாவது கொழும்பு அரசின் புத்திஜீவிகள் நவீனகாலத்தின் புதிய சக்தியான கையடக்கத் தொலைபேசிகள் அதிகரித்த பாவனையை கவனிக்கத் தவறிவிட்டார்கள்.
தொலைபேசிச்சேவையில் நிபுணத்துவம்பெற்று நவீன தொலைபேசிகளை பாரியளவில் உற்பத்திசெய்பவர்கள், கமராக்களை உற்பத்திசெய்யும் நிபுணர்களைப்போலவே, நவீன கைத்தொலைபேசிகளில் தரமான கமராக்களையும் நிர்மாணித்து வெளியிடுகிறார்கள். கைத்தொலைபேசியின் புரட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள விளைவுகள் குறித்து நாம் இன்னமும் ஆய்வு நடாத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒன்றுமட்டும் தெளிவாகப் புலப்படுகிறது — ஆதாவது நீதியை நிலைநாட்டல் என்பது
கண்ணால்-கண்ட சாட்சியங்கள் என்ற நிலையிலிருந்து கமரா-கண்ட சாட்சியங்கள் என்ற புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது.
சீ.சீ.டி.வி கமராக்களின் பயன்பாடுகள் குறித்து நாம் இன்னமும் ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை. எங்காவது பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெற்றால் நாம் சீ.சீ.டி.வி கமாராக்கள் சகல இடங்களிலும் பொருத்தப்படவேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் அமைதியான வேளைகளில், நாம் அரசாங்கம் எமது அந்தரங்களில் மூக்கை நுழைப்பதையெண்ணி கலங்குகிறோம். அநேகமாக, பிரத்தியேகம் என்ற ஒன்று ஏற்கனவே இல்லை என்றாகிவிட்டது. எமது தொலைபேசித் தொடர்பாடல்கள் புலனாய்வுத்துறையினரால் நாளாந்தம் ஒட்டுக்கேட்கப்படுகிறது. அரசாங்கத்திற்குப் பல்வேறு பிரச்சனைகள். எந்தவொரு அதிகாரியும் தனது கமராவை வெளியே எடுத்து ஒரு கோவையினை ஒரு விநாடிக்குள் பிரதிசெய்யமுடியும். இதன்மூலம் அவர் விருப்பினால், தனது மேலதிகாரியின் ஊழலைத் தருணம்பார்த்துத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்காக உபயோகப்படுத்தலாம் என்ற ஒரு நிலை உருவாகிவிட்டது.
களியாட்டமோ, சோகமோ அனேகமாக ஒவ்வொரு நிகழ்வுமே தற்போது பதியப்படுகிறது. நாம் ஒரு காட்டுமிராண்டித்தனமான அரசு எமது பிரத்தியேகத்தில் பங்கத்தினை ஏற்படுத்துவதாக ஆத்திரம்கொள்கிறோம், ஆனால் அநாமதேய நபரொருவர் எமக்குப் பாரியளவு தீங்கினை ஏற்படுத்தலாம்.
இரண்டு வழியூடாக மட்டுமே இந்த புகைப்படங்கள், ஒளிநாடாக்கள் ஊடகங்களை வந்தடைந்திருக்க முடியும். ஒன்றில் அரசாங்கத்தின் பதிவுகளிலிருந்து இவற்றினை யாராவது கசிய விட்டிருக்கவேண்டும், அல்லது கொடூரமான இந்தக்காட்சியை தனது நினைவுச்சின்னமாக வைத்திருக்கவேண்டிப் பதிவுசெய்த ஆட்கொல்லும் அணியிலிருந்த இராணுவ வீரரொருவர், தனது மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயற்பட ஆரம்பித்திருக்கலாம். இவற்றில் எந்த வழியினூடாக இவை ஊடகங்களை வந்தடைந்தன என்பது இன்னமும் தெரியாது. ஆனால் பாதுகாப்பு வலைப்பின்னலூடாக இவற்றில் சில நழுவிவிட்டன.
- See more at: http://www.jvpnews.com/srilanka/16790.html#sthash.PtTSfsBc.dpuf

Geen opmerkingen:

Een reactie posten