[ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 02:39.45 AM GMT ]
குடாஓயாவில் உள்ள இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ பயிற்சிப் பாடசாலையில் 2 அதிகாரிகளும், 76 கொமாண்டோக்களும் இந்த ஆழ ஊடுருவும் அணிக்குரிய பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளனர்.
பயிற்சியை முடித்து வெளியேறும் இராணு அணிகளின் பயிற்சி நிறைவு நிகழ்வு வழக்கமாக பகல் நேரத்திலேயே நடைபெறும்.
ஆனால் ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாடுகள் பெரும்பாலும் இரவு சார்ந்ததாகவே இருப்பதால் இரவிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கொமாண்டோ படைப்பிரிவின் தளபதி கோ்ணல் லலந்த கமகே இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டிருந்தார்.
இவர் தான் போரின் இறுதிக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட 68வது டிவிஷனின் முதலாவது பிரிகேட்டிற்கு பொறுப்பாக இருந்தவர்.
இவரது படைப்பிரிவின் கீழ் செயற்பட்ட 4வது விஜயபா காலாற்படைப்பிரிவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இறுதிச் சண்டையை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்டப் போரின் போது, இராணுவக் கொமாண்டோ அணிகளை வழிநடத்துவதில் அப்போது லெப்.கோ்ணலாக இருந்த லலந்த கமகே முக்கிய பங்காற்றியிருந்தார்.
அந்தப் போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இராணுவம் ஆழ ஊடுருவும் அணியை மேலும் வலுவாக்க முற்பட்டுள்ளது.
பொதுவாக இலங்கை இராணுவம் இப்போது அதிகளவில் ஆட்சோ்ப்புகளை நடத்துவதில்லை.
இறுதிக்கட்டப் போருக்காக இலங்கை இராணுவம் பெருமளவில் ஆட்சோ்ப்புகளை மேற்கொண்டதன் விளைவாக அதன் ஆளணிப் பலம் இரண்டு லட்சத்தையும் தாண்டி நின்றது. இப்போது போர் முடிவுக்கு வந்துவிட்டது.
இதனால், போர் இடம்பெற்ற வடக்கு கிழக்கில் இருந்து படைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தங்கள் சர்வதேச அளவில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இராணுவத் தரப்போ யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரமாக இருந்த படையினரின் எண்ணிக்கையை சுமார் 13 ஆயிரத்து 500 வரையாக குறைத்து விட்டதாகக் கூறுகிறது.
அதைவிட, இதற்கு மேலும் வடக்கிலிருந்து படையினரைக் குறைப்பதனால், அவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்த முடியும் என்றும் கேள்விகளை எழுப்பி வருகிறது.
இராணுவத்திற்கு மேலும் ஆட்களைச் சோ்த்து, 3 லட்சம் பேராக அதன் ஆளணிப் பலத்தை உயாத்த வேண்டும் என்பதுதான், போருக்குப் பின்னர் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்வைத்த திட்டம்.
ஆனால் அந்தத் திட்டத்தைச் செயற்படுத்தி சரத் பொன்சேகா தனது அதிகாரத்தை விரிவுபடுத்திக் கொள்வாரோ என்ற அச்சத்தில் அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை.
போர் முடிவுக்கு வந்த பின்னர், குறைந்தளவில் ஆட்சோ்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு, போரில் அழிவடைந்த படைப்பிரிவுகள் மீளமைக்கப்பட்டன. அதைவிடப் பெரியளவில் ஆட்சோ்ப்புகளோ ஆயுதக் கொள்வனவுகளோ கடந்த ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் திடீரென ஆழ ஊடுருவும் அணியொன்றுக்கு இராணுவம் பயிற்சி அளித்துள்ளது. இந்த அணியின் தேவை தற்போது இல்லாத நிலையில், குறிப்பிட்ட படைப்பிரிவை இராணுவத் தரப்பு வலுப்படுத்த முனைவது ஏன்? என்ற கேள்வியை இது ஏற்படுத்தாமல் இல்லை.
இந்த ஆழ ஊடுருவும் அணி விடுதலைப் புலிகளுக்கு பெரும் தொல்லையைக் கொடுத்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை இராணுவம் 1990 களின் தொடக்கத்தில் இருந்தே இத்தகைய சிறிய அணிகளை வன்னியில் இயக்கி வந்தபோதும், அது ஒன்றும் ஒழுங்குபடுத்தப்பட்டவையாகவோ முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டவையாகவோ இருக்கவில்லை.
1997ம் ஆண்டிற்குப் பின்னர் தான் இந்தப் படைப்பிரிவு ஒழுங்கமைக்கப்பட்ட, முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டதொன்றாக மாற்றமடைந்தது.
இலங்கை இராணுவத்தின் இந்த ஆழ ஊடுருவும் அணிக்கு பயிற்சி அளித்து, அதனை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது அமெரிக்காதான்.
அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவு தான் குருலேகங்க காடுகளில் வைத்து முதலில் பயிற்சி அளித்தது.
1997 மே மாதம் இந்தப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று இப்போது வலியுறுத்தும் அமெரிக்கா, விடுதலைப் புலிகளை அழிப்பதிலும் முக்கிய பங்காற்றியது.
1997 மே மாதத்துக்கும் 2002 ஏப்ரல் மாதத்துக்கும் இடையில், 3ம் கட்ட ஈழப்போர் காலத்தில் இலங்கை இராணுவத்தின் போரிடும் திறனையும், திட்டமிடல் ஆற்றலையும் மேம்படுத்துவதற்காக அமெரிக்காவின் சிறப்பு படைப்பிரிவு, கடற்படையின் சிறப்பு படைப்பிரிவான சீல் மற்றும் மற்றும் சிறப்பு இராணுவ அணிகள் உதவிகளை வழங்கியிருந்தன.
அதுமட்டுமன்றி விடுதலைப் புலிகளின் கணிசமான ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கான தகவல்களையும் அமெரிக்காவே வழங்கியிருந்தது.
அமெரிக்காவினால் மட்டுமன்றி இந்த ஆழ ஊடுருவும் அணிகளுக்கு இந்தியாவும் பயிற்சி அளித்ததாக படைத்துறை சார் ஊடகமான strategypage கூறுகிறது.
போரின் இறுதி 5 ஆண்டுகளில் இலங்கையின் ஆழ ஊடுருவும் அணிகளை உள்ளடக்கிய சிறப்பு படைப் பிரிவுக்கு, அமெரிக்காவும், இந்தியாவும் தமது சிறப்பு படைப்பிரிவு பயிற்சி நிபுணர்களை அனுப்பி பயிற்சிகளை அளித்ததாக இந்த ஊடகம் குறிப்பிடுகிறது.
வியட்னாம் போரின் போது வியட்கொங் கெரில்லாக்களின் மறைவிடங்களைத் தேடிச்சென்று அழிப்பதில் அமெரிக்காவின் ஆழ ஊடுருவும் அணிகள் முக்கிய பங்கு வகித்திருந்தன.
அந்த அனுபவத்தையே இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியது.
1990 களின் இறுதியில் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை பெரும்பாலும் மையப்படுத்தி இயங்கத் தொடங்கிய இந்த ஆழ ஊடுருவும் அணி, பின்னர் வன்னியில் அசுர பலம் பெறத் தொடங்கியது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பிரதேசம் காடுகளால் நிறைந்திருந்தும், அந்தப் பரந்த பிரதேசத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஆளணி வளம் அவர்களிடம் இல்லாமல் போனதும், ஆழ ஊடுருவும் அணிகளின் செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்பாகியது.
கிழக்கில் சில் இரண்டாம் நிலைத் தளபதிகள் கொல்லப்பட்ட போதும், கருணா போன்ற தளபதிகள், இந்த அணியின் தாக்குதலில் இருந்து தப்பிய போதும், அவ்வளவு பெரிதாக அதன் தாக்கம் புலிகளால் உணரப்படவில்லை.
2001ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி புதுக்குடியிருப்பில் இருந்து மிகக் குறுகிய தொலைவில், இந்த அணியால் நடத்தப்பட்டதொரு கிளைமோர் தாக்குதலில் புலிகளின் மூத்த தளபதியான கோ்ணல் சங்கர் கொல்லப்பட்ட போது தான் புலிகள் ஆபத்தை உணரத் தொடங்கினர்.
அதன் பின்னர், கடற்புலிகளின் தளபதி கங்கைஅமரன், இன்னொரு கடற்புலிகளின் தளபதி செழியன், தளபதி மகேந்தி, இராணுவப் புலனாய்வு பொறுப்பாளர் கோ்ணல் சார்ள்ஸ் போன்றோர் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.
அதுமட்டுமன்றி புலிகளின் தளபதிகளான பிரிகேடியர்கள் பால்ராஜ், ஜெயம், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலரும் இந்த அணியின் தாக்குதல்களில் இருந்து ஏதோவொரு சந்தர்ப்பத்தில், மயிரிழையில் தப்பித்துக் கொண்டனர்.
வன்னியில் மிகவும் ஆழமாக இந்தப் படைப்பிரிவு ஊடுருவியது.
இராணுவத்தின் முன்னரங்க நிலையிலிருந்து 50 கி. மீற்றருக்கு அப்பால் கூட, ஆழ ஊடுருவும் அணியினர் புலிகள் மீது தாக்குதல் நடத்தினர். பல சமயங்களில் அவர்கள் புலிகளின் சீருடையையும் பயன்படுத்தினர்.
இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட கொமாண்டோக்களின் உடல்களைப் புலிகள் கைப்பற்றியும் இருந்தனர்.
அப்போது இப்படி ஒரு படைப்பிரிவு தம்மிடம் கிடையாது என்று கூட இராணுவத் தரப்பு மறுப்பு வெளியிட்டது.
இப்போது வெளிப்படையாகவே இந்தப் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு நிகழ்வு நடத்தப்படுகிறது. மகாசேன பிரிகேட் என்று அழைக்கப்படும் இந்த ஆழ ஊடுருவும் அணி, விடுதலைப் புலிகளை நான்காம் கட்ட ஈழப் போரில் கடுமையான நெருக்கடிக்குள்ளாக்கியது.
புலிகளின் தளபதிகளின் சுதந்திரமான நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தியது.
புலிகளின் இராணுவ புலனாய்வுப் பிரிவு இந்த அணிகளின் ஊடுருவல் பற்றிய தகவல்களை, தமது தகவல் மூலங்களின் ஊடாக அறிந்துகொள்ள முடிந்த போதும், அதை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது இருந்தது.
ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல் மன்னார் களமுனையில் இடம்பெறவுள்ளதான தகவல்களைத் திரட்டி தலைமைக்கு அனுப்பிய இராணுவ புலனாய்வுப் பொறுப்பாளர் கோ்ணல் சார்ள்ஸ் கூட, அந்தப் பகுதியில் இந்த அணியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் போனது.
இராணுவத் தளபதிகள் நிம்மதியாக இருந்து போருக்கான திட்டமிடல்களை மேற்கொள்ள முடியாத வகையில், தொல்லைகளைக் கொடுத்து, பலவீனப்படுத்துவது புலிகளின் போரபாயமாக இருந்து வந்தது.
ஆனால் நான்காவது கட்ட ஈழப் போரில் இந்த உபாயத்தை இலங்கை இராணுவம் கையில் எடுத்துக் கொண்டது.
மன்னார் களமுனையில் சண்டையை வழிநடத்திய, புலிகளின் தளபதிகள், பிரிகேடியர்கள் பானு, ஜெயம் போன்றவர்கள் இந்த அணியின் ஆபத்து குறித்து எச்சரிக்கப்பட்டிருந்ததாக, புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான், கோ்ணல் சார்ள்ஸ் பற்றிய ஒரு நினைவுக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அவர்கூட நினைத்தவுடன் அங்கு செல்ல முடியாதிருந்ததை அந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருந்தார். புலிகளின் தலைமை மற்றும் தளபதிகளுக்கு இந்த இராணுவ அணி பெரும் சவாலாகவே இருந்தது. இவ்வாறானதொரு நெருக்கடி நிலை ஏற்படுத்தப்படுகின்ற போது இயல்பாகவே போர்த் திட்டமிடலில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
அது விடுதலைப் புலிகள் விடயத்திலும் மிகத் தெளிவான உண்மையாகியும் விட்டது.
இவ்வாறு விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் பின்புலமாக இருந்த ஆழ ஊடுருவும் படையணியை இலங்கை இராணுவம் எதற்காக இப்போது பலப்படுத்திக் கொள்ள முனைகிறது?.
இதற்குப் போர் இல்லாவிட்டால், இராணுவம் பயிற்சி பெறுவதில்லையா என்ற பதில் வரப்போவது இயல்புதான்.
ஆனால் இந்தப் பயிற்சி ஏனைய வழக்கமான காலாற்படைப் பிரிவு பயிற்சிகளுடன் ஒப்பிடக் கூடியதொன்றல்லவே.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten