சிறிலங்காவில் தமிழர்களுக்கு சொற்களால் விபரிக்க முடியாத கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இன்று காலை, ஆளும் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதற்கு முன்னர், புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொழும்பு எதிரான கடும்போக்கை முதல்முறையாக சோனியா காந்தி வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது வழக்கத்துக்கு மாறானது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“எமது இதயங்கள் சிறிலங்கா தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது.
2009இல் போரின் இறுதி நாட்களில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சொற்களால் விபரிக்க முடியாத கொடூரங்கள் குறித்து வெளியாகும் அறிக்கைகளால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து நம்பகமான, நடுநிலையாக விசாரணைகளை நாம் கோருகிறோம்.
தமிழர்களுக்கு சமஉரிமை, சமமான பாதுகாப்புக்கு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலத்தில் இருந்தே எமது ஆதரவு உள்ளது.
அவர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவது வருத்தமளிக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலத்தில் இந்தியாவின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் பகிரங்கமாக, சிறிலங்காவுக்கு எதிராக கடுமையான தொனியில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது இதுவே முதல் முறை என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, திமுகவின் அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் எத்தகைய தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
http://asrilanka.com/2013/03/19/16042
Geen opmerkingen:
Een reactie posten