உள்நாட்டுப் பொறிமுறையூடாக அனைத்து இனமும் ஏற்கத்தக்க தீர்வுத்திட்டமொன்றினை இலங்கை அரசாங்கம் முன்வைத்தால், அத்திட்டம் கூட்டாட்சி, நல்லாட்சி, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமையுமாக இருந்தால் அடுத்த ஜெனிவாத் தொடருக்கு நாம் தலைநிமிர்ந்து செல்லலாம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
ஆனால் நம் நாட்டு நடப்புக்களோ அதற்கேற்ற வகையில் இல்லை. இன்னுமோர் சனல் 4 காணொளி வெளிவரும். அது வெளிவந்தவற்றைவிட மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தும்.
கெகலிய ரம்புக்வெல்ல அப்போதும் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்தால் இன்று கூறியவற்றையே அடுத்த முறையும் கூறுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் அமளிகள் மற்றும் இலங்கை அரசின் நிலைப்பாடுகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் தொடரந்:து கருத்துத் தெரிவித்த அவர்,
காணொளிகளும் காட்சிகளும் ஜெனிவா தளமும் இலங்கைக் களமும் இப்போதைக்கு முடிவடைவது போல கள நிலைமைகள் கூறவில்லை. இது ஒரு தொடர்கதையாக அல்லது மெகா தொடராக மாறும் நிலைமையினையே அரசு உருவாக்கியுள்ளது.
கடந்த வருடமும் ஜெனிவா கூட்டத்தொடர் காலத்திலும் சனல் 4 காணொளி காட்சியினை வெளியிட்டது. அதனை அரசு அப்போது தனது வழமையான அமைச்சர்கள், அதிகாரிகள், ஆகியோரை பயன்படுத்தி பொய் புரட்டு புனையப்பட்டது என்ற வாதத்தினை முன்வைத்தது.
யுத்தம் ஒன்று நடைபெறும் போது அந்நாட்டில் முதலில் பலியாவது உண்மை. அதன் பின்னர் பலியாவதே உயிர்களும் உடைமைகளும் என்பது போர் தொடர்பான நடுநிலை ஆய்வாளர்களது ஏகோபித்த கருத்தாகும். இதற்கு இலங்கை அரசு மட்டும் எப்படி விதிவிலக்காகும்.
சர்வதேச அரசியல் என்பது இன்று புதுவடிவம் பெற்றுள்ளது. உள்நாட்டு விவகாரம் என்றும் வெளித்தலையீடு தேவையில்லை என்றும் வீம்பு பிடிப்பது வீணென்று உணராத நிலையில் அரசு உள்ளது.
ஜெனிவா அரங்கு இக்காலத்தில் நிகழும் என்பதும் அதில் இலங்கை தொடர்பான முன்னைய தீர்மானம் கேள்விக்குள்ளாகும் என்பதும் அதற்குரிய குறைந்தபட்ச நியாயமான பதிலையேனும் சர்வதேச அவையில் சமர்ப்பிக்கவேண்டும் என்ற ரீதியில் அரசு காய் நகர்த்தல் களை மேற்கொள்ளவில்லை.
முள்ளிவாய்க்கால் யுத்த வெற்றிகூட அமெரிக்கா, இந்திய மற்றும் சர்வதேச ஆதரவுகளால் பெற்ற வெற்றி என்பதைவிட தமது இராணுவத்தின் திறமைகளால் பெற்ற வெற்றியாகவும் இன்றும் அரசு கணக்குப் போட்டுக் கொண்டுள்ளது.
கடந்த வருட ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற்ற வேளை காணொளிக் காட்சியினை வெளியிட்ட சனல் 4 இம்முறையும் ஜெனியா கூட்டத் தொடர் நடைபெறும் வேளை போர்க் குற்றங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் சம்பவங்களைக் கொண்டு காணொளியினை வெளியிட்டு மனித மனத உரிமை ஆர்வலர்களையும். சிவில் சமூகத்தினரையும் ஆட்சித் தலைவர்களையும் ஐ.நா. அதிகாரிகளையும், ஏன் ஒட்டு மொத்த சர்வ தேசத்தையுமே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
குறிப்பாக 12 வயது பாலகன் பாலச்சந்திரன் முகம் வெளிப்படுத்தும் அதிர்வுகள் மனம் படைத்த மனிதர்களது இதயங்களை ஒருகணம் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
பாலச்சந்திரன் சம்பவம் விடுதலைப் புலிகளின் தலைவரது மகன் என்பதால் அதிர்வினை ஏற்படுத்தவில்லை. பால்வடியும் முகம் கொண்ட ஒரு பாலகன் உண்ணக் கொடுத்து உயிரைப் பறித்த சம்பவம் உலகில் எங்குமே நடைபெறாத வரலாறாகும்.
இதே வேளை காணொளியினைத் தயாரித்த அவர்களது கருத்துப்படி இத்துடன் இந்த காணொளி விவகாரம் முடிந்து விட்டது என்று நிம்மதியாக இலங்கை அரசு இருந்து விடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது காணொளிச் சம்பவங்களை விடவும் மேலும் வலிதான போர்க்குற்ற ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவ்வப்போது அவை வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் ஆட்சியாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்த நிலைமைக்கு ஆக்கியுள்ளது. இதனால் தான் இக்காணொளி விவகாரத்தை நான் மெகா தொடர் என விளித்தேன்.
உண்மையில் அரசு யுத்தம் முடிவடைந்த கையோடு வெற்றி முழக்கம் அறிவித்த வேளை யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை மையமாக வைத்து யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மனம் திறந்து கலந்துரையாடி சகல சமூகங்களும் சமத்துவமாக நம் நாட்டில் வாழக் கூடிய வகையில் ஒரு தரவுத் திட்டத்தினை வைத்திருந்தால் இந்த மூன்றாண்டுகளில் நம் நாடு எங்கோ சென்றிருக்கும்.
ஆனால் அரசோ பேரினவாதத்தை விதைத்து சிறுபான்மை இனம் ஒன்று இல்லை என்று கோசமிட்டு மெல்ல மெல்ல சிறுபான்மை இனத்தினை அவர்களது நிலம் அமைவிடம் கலாசாரம் மொழி என கல வழிகளாலும் அழித்து வருகின்றது.
இன்னமும் காலம் கடந்து விடவில்லை. அரசு கூறுவது போல உள்நாட்டுப் பொறிமுறையூடாக அனைத்து இனமும் ஏற்கத்த்க தீர்வுத்திட்டமொன்றினை முன்வைத்தால், அத்திட்டம் கூட்டாட்சி, நல்லாட்சி, பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமையுமாக இருந்தால் அடுத்த ஜெனிவாத் தொடருக்கு நாம் தலைநிமிர்ந்து செல்லலாம். முகம் கொடுக்கலாம்.
ஆனால் நம் நாட்டு நடப்புக்களோ அதற்கேற்ற வகையில் இல்லை என்றே தோன்றுகிறது. நான் நினைக்கின்றேன். இன்னுமோர் சனல் 4 காணொளி வெளிவரும். அது வெளி வந்தவற்றைவிட மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தும். கெகலிய ரம்புக்வெல்ல அப்போதும் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்தால் இன்று கூறியவற்றையே அடுத்த முறையும் கூறுவார்.
ஏனெனில் அரசு ஆட்சியாளர்கள் கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் படிக்கவில்லை பட்டறிவும் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten