இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் ஐ.நா. தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க கோரியும், இலங்கை பிரச்சினையில் கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மத்திய மந்திரி நாராயணசாமியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட முயற்சித்தனர்.
இது குறித்து தெரியவருவதாவது:
அமைச்சர் நாராயணசாமி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவை வருவது வழக்கம். தனது அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் நாராயணசாமி தனது அலுவலகத்துக்கு வருவதாக காங்கிரஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் அமைச்சரைச் சந்திக்க அலுவலக வளாகத்தில் காங்கிரஸார் திரண்டிருந்தனர். அப்போது திடீரென பொலிஸார் அங்கு வந்தனர்.
இதையடுத்து காங்கிரஸார், பொலிஸாரை என்ன எதற்காக வந்தீர்கள் என விசாரித்தனர். அப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் ஐ.நா. தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க கோரியும், இலங்கை பிரச்சினையில் கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை (வேல்முருகன் கட்சியினர்) முற்றுகையிட வரவுள்ளதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காங்கிரஸார் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள். இந்த நிலையில் வேல்முருகன் கட்சியினர் மாநில தலைவர் ஸ்ரீதர் தலைமையில் 10 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
நேராக மோட்டார் சைக்கிளில் கம்பன் கலை அரங்கத்துக்கு நுழைந்த அவர்களை தயாராக நின்று கொண்டிருந்த காங்கிரஸார் தடுத்து நிறுத்தி தாக்கினர்.
இதனால் வேல்முருகன் கட்சியினர் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் காங்கிரஸார் அவர்களை விடாமல் ஓட ஓட விரட்டி தாக்கினர்.
மேலும் பொலிஸாரும் வேல்முருகன் கட்சியினரை தாக்கினர். அப்போது தப்பி ஓடிய வேல்முருகன் கட்சியை சேர்ந்த சிலர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதன்பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற காங்கிரஸார் பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய மந்திரி நாராயணசாமியை முற்றுகையிட வந்தவர்களை எப்படி அனுமதிக்கலாம்? என கூறி ஆவேசமாக பேசினார்கள்.
இதையடுத்து பொலிஸார் முற்றுகையிட வந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் புதுவை மாநில தலைவர் ஸ்ரீதர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten