இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. நாளை இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடை பெற உள்ள நிலையில் இந்திய அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க தீர்மானத்தில் வலுவான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்து வருகின்றன.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு தி.மு.க. 2 கோரிக்கைகள் விடுத்தது. அதை ஏற்காவிட்டால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
இதையடுத்து, மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் கருணாநிதியுடன் பேச்சு நடத்தினார்கள்.
இந்த நிலையில் நேற்று தி.மு.க. தனது ஆதரவை வாபஸ் பெற்றது. காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது.
தி.மு.க. புகாருக்கு பதில் அளித்து மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கமல்நாத், மணிஷ்திவாரி ஆகியோர் டெல்லியில் இன்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
ப.சிதம்பரம் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு எதிராக ஜெனீவா ஐ.நா. மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம் தொடர்பாக மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோருடன் நானும் சென்னை சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், அக்கட்சியின் பிற தலைவர்களையும் சந்தித்துப் பேசினோம்.
ஜெனீவா கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் போது இந்தியா அதை ஆதரித்து வாக்களிப்பது குறித்து விரிவாக விவாதித்தோம்.
இலங்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தி.மு.க. கூறியது. பேச்சுவார்த்தை விவரங்களை டெல்லி திரும்பியதும் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடமும் விளக்கினோம். அதன் பிறகு அன்றைய தினம் காலையில் (நேற்று) நடந்த காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சோனியாகாந்தி பேசுகையில், இலங்கை விவகாரம் தொடர்பாக மிக வலுவான கருத்தை முன் வைத்தார்.
அந்த கூட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதிலும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்படும் தீர்மானம் தொடர்பான தி.மு.க.வின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது இறுதி செய்யப்பட்ட வரைவு தீர்மானம் திங்கட்கிழமை இரவுதான் கிடைத்தது.
அந்த தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள வரிகளை திருத்தி தீர்மானத்தை வலுப்படுத்தும் அம்சங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட வில்லை. இதற்காக ஜெனீவாவில் உள்ள இந்திய பிரதிநிதி டெல்லி வரவழைக்கப்பட்டார். இந்தியாவின் திருத்தங்களுடன் அவர் ஜெனீவா திரும்பி மாநாட்டில் முன் மொழிவார்.
அடுத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்ற தி.மு.க.வின் மற்றொரு கோரிக்கை குறித்து அனைத்து கட்சிகளுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் நேற்று ஆலோசனை நடத்தினார். இன்று முடிவு அறிவிக்கப்படும்.
இதில் ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகள் இடம் பெறும். இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தி.மு.க. அறிவித்துள்ளது. இதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
தி.மு.க.வின் முடிவால் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறேன். பொருளாதார சீரமைப்பு மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் முடிவை மாற்றிக் கொள்ள தயார் என்று தி.மு.க. தலைவர் கூறியுள்ளார்.
கருணாநிதி நாட்டின் மிக முக்கியமான கட்சியின் மூத்த தலைவர். அவரது கருத்துக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.net/show-RUmryDRUNZnsz.html
Geen opmerkingen:
Een reactie posten