தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 16 maart 2013

சட்ட விரோதமாக வெலிஓயாவுடன் கொக்கிளாய் இணைப்பு!- தடுத்து நிறுத்துமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை !


கொக்கிளாய் தமிழ்க் கிராமம் அவசர அவசரமாக வெலிஓயாவுடன் இணைக்கப்பட்டு, சிங்கள நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசின் சிங்களமயமாக்கும் திட்டம் தமிழர் பகுதியில் நிறைவேற்றப்படுவதைத் தாமதமின்றித் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என பா. உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் ஓய்வுக்கு வந்து நான்கு வருடங்களுள் மீள்குடியேற்றம் செய்யப்படாது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உறவினர், நண்பர் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மீள்குடியேறியோருக்கான காணி அனுமதி முறையாக வழங்கப்படாமல் அவர்களது வதிவிடங்களைவிட்டு அகற்றும் நடவடிக்கைகள்  வடக்கில் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றன.
இங்கு வீதி ஓரக் காடழிப்பு, உள்ளக வீதிகள் திருத்தம், மின்சார விநியோகம், குடிநீர் வசதி, குளத்திருத்தம் முதலான உட்கட்டுமான மற்றும் வாழ்வாதார அபிவிருத்திகள் அரசால் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை. மேலும்,  வீட்டுத்திட்ட வழங்கலிலும் திட்டமிட்ட புறக்கணிப்பு இடம் பெறுகின்றன. 
உயிர், உடமையுட்பட எல்லாவற்றையும் இழந்த எமது மக்கள் தாம் கௌரவமாக வாழ தமது சொந்த இடங்களில் குடியேற தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காலம்காலமாக வாழ்ந்த பூர்வீக நிலங்கள் பறித்தெடுக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்படுகின்றன.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்ட மருதிமேற்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள ஆறு கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 76 கிராமங்களை, வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த 14.02.2013 திகதிய பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பிரதேச நிர்வாகப் பிரிவின் எல்லை நிர்ணய சபையின் செயலாளரால் வெலிஓயா பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வக் கடிதத்தில்,
பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக் கோட்டை இனங்காணல் என்ற தலைப்பிட்டு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் கிராமம் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்குவதாகவும், பிரதேச எல்லைகளை மீண்டும் சீரமைக்க வேண்டியுள்ளதென்பதையும் தெரிவிப்பதாகவும் வெலிஓயா பிரதேச செயலாளரின் 04.01.2013 திகதிய கடிதத்திற்குப் பதிலாகக் குறிப்பிடப்பட்டுளன்ளது.
இதனைவிட, மீள்குடியேற்றம் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக்கான ஜனாதிபதியின் செயலணியின் செயலாளரால் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட 05.02.2013 திகதிய கடிதத்தில்,
கொக்கிளாயில் 254 குடும்பங்களைச் சேர்ந்த 960 பேர் வசிப்பதாகவும் கரைத்துறைப்பற்றுக்குட்பட்ட இக்கிராமம் முல்லைத்தீவிலிருந்து 37 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ளதோடு உரிய கிராம சேவையாளர் வாரத்தில் ஒரு நாள் வந்து அலுவல வேலைகளை மேற்கொள்வதாகவும் அவர் ஒரு தமிழர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கொக்கிளாயிற்கு அருகில் சிங்களக் கிராமங்கள் பலவுள்ளதால் இங்கு மாற்றங்கள் செய்யப்படவேண்டியுள்ளதோடு, இதனை வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைத்து சிங்கள கிராம சேவையாளர் ஒருவரை பணிக்கமர்த்துவதற்கு ஏதுவாக விபரமாகப் பதில் அனுப்புமாறும் வெலிஓயா பிரதேச செயலாளர் கேட்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே முல்லைத்தீவின் பல பூர்வீகத் தமிழ் கிராமங்களை உள்வாங்கி ஏனைய அனுராதபுர சிங்களக் கிராமங்களுடன் இணைத்து வெலிஓயா என்ற பெயரில் அநுராதபுர மாவட்ட செயலகத்தின்கீழ் இயங்கிய இப்புதிய பிரதேச செயலாளர் பிரிவினை 2009 மே மாதத்தின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்துடன் வலிந்து இணைத்தனர்.
முல்லைத்தீவு கல்வி வலையத்தின் கீழ் எட்டுச் சிங்களப் பாடசாலைகளுடனான வெலிஓயாக் கல்விக் கோட்டமும் புதிதாக இணைக்கப்பட்டு, 2012 இறுதியில் 81 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டன.
மேலும் எத்தகைய சட்டபூர்வமான வெளிப்படுத்தல்களும் வெலிஓயா பற்றி இதுவரை அரச இதழ் மூலம் பிரசித்தப்படுத்தவுமில்லை. ஆனால் வெலிஓயா பிரதேச செயலாளரின் சம்பளம் முதற்கொண்டு அதன் அனைத்து நிர்வாக வேலைகளையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமே மேற்கொள்கின்றது.
தமிழர் பிரதேச காடழிப்பு, பூர்வீக நிலங்கள் பறித்தெடுப்பு, காணிப் பத்திரங்கள் வழங்கப்படாமை, வீட்டுத்திட்டப் புறக்கணிப்பு முதலான அடிப்படை வாழ்வியல் உரிமைகள் பறிக்கப்பட்டு நொந்து போயுள்ள எமது மக்களிற்கு மேலும் பேரிடியாக இத்தகைய எல்லையோரக் கிராமங்கள் அபகரிப்பு, மாவட்ட மற்றும் பிரதேச எல்லைகள் மீளமைக்கப்படுதல் இதன்மூலம் இனவிகிதாசாரம் மாற்றப்படுதல் முதலானவை அரசால் நிறைவேற்றப்படுகின்றன.
தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்கும் அரசின் இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதோடு, கொக்கிளாயில் ஏற்கனவே பறிபோன ஆயிரக்கணக்கான தமிழர் விவசாய நிலங்களையும் மீட்டு எஞ்சியிருக்கும் தற்போது எல்லை மாற்றப்படும் நிலப்பரப்புக்களையும் காப்பாற்ற சர்வதேச சமூகம் தமது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் சிவசக்தி ஆனந்தன் கோரியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten