மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை ரோஷமுள்ள ஒவ்வொரு தமிழனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
யானைச் சின்னத்திற்கு அல்லது வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் எந்தவொரு தமிழ் பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகஸ்வரன் இங்கு மேலும் பேசுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வாக்குகளைச் சேகரித்துக் கொடுக்கும் கருவியாகவே இருப்பார்கள். இது கடந்த முறை தமிழர்கள் கற்றுக் கொண்ட பாடமாகும்.
கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலிலே யானைச் சின்னத்தில் ஐந்து தமிழர்களும் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிட்டார்கள். ஆனால் இறுதியில் முஸ்லிம் நபர் ஒருவரே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அதே போன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பல தமிழர்கள் போட்டியிட்டும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவரே பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றார். இவ்வாறாக தழிழ் வாக்காளர்கள் இம்முறையும் பிழையான முறையில் வழிநடாத்தப்பட அனுமதிக்கக் கூடாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 சதவீத தமிழர்களுக்கு நான்கு ஆசனங்களும் 25 சதவீத முஸ்லிம்களுக்கு ஒரு ஆசனமும் கிடைப்பதே நியாயமானதாகும். அந்த அடிப்படையில் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் சமூகத்தை பிரதிபலிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்து அவர்களது பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்கு நாம் தடையில்லை.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதில் தான் நிம்மதி தங்கியிருக்கின்றது. இதனால் தான் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கூட்டு அரசாங்கத்தை அமைத்துள்ளது என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten