தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 augustus 2015

வடக்கை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து புலிகளின் ஆக்கிரமிப்பை அழிக்க வேண்டும்!- கோத்தபாய

யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாம் முடிவுக்கு கொண்டுவந்த ஆயுத கலாசாரத்தை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
வடக்கை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து புலிகளின் ஆக்கிரமிப்பினை முழுமையாக அழிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று விஹாரமகாதேவி உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் விமல் வீரவன்சவின் “ யுத்தம் இல்லாத நாடு- நல்லாட்சியின் பின்னர் இரண்டாகும் நிலை “ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
வெள்ளை வான் கடத்தல்கள், பாதாள உலக கொள்ளைக்கூட்டம் அனைத்தும் எம்மிடம் தான் உள்ளதென எம்மை விமர்சித்தவர்கள் இன்று ஆட்சியை அமைத்துள்ளனர். ஆனால் இவர்களின் ஆட்சியில் என்ன நடக்கின்றது. இன்று பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடும், கடத்தல்களும் தாக்குதல் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.
நல்லாட்சி என்ற இந்த ஆட்சியில் ஒரு தெளிவான கொள்கைத்திட்டம் இல்லாது போயுள்ளது. தமது வேலைத் திட்டத்தை தெளிவாக இவர்களால் குறிப்பிட முடியாது. நல்லாட்சியில் இவர்களின் வேலைத்திட்டங்கள் நாட்டில் முழுமையாக சென்றடையவில்லை.
எமது ஆட்சியில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வடக்கில் உண்மையான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு தமிழ் மக்களின் உண்மையான ஜனநாயகத்தை நாம் பெற்றுக் கொடுத்தோம். அதேபோல் அனாவசிய காணிகளை நாம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தோம். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தவில்லை.
ஆனால் இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலான நிலைமையில் உள்ளது. அரசியல் சுயநல வேலைத்திட்டங்களை கருத்தில் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி விட்டனர். நாம் புலிகள் பயங்கரவாத இயக்கத்தை அழித்த போதிலும் புலிகளினால் போசனை வழங்கப்பட்ட அரசியல் புலிகளை நாம் அழிக்கவில்லை.
அதன் விளைவு இன்று ஆட்சிமாற்றத்தின் பின்னர் மீண்டும் பிரிவினையின் பக்கம் நகர ஆரம்பித்துள்ளது. எமது கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இருந்தபோது நாடு அமைதியாக இருந்தது. ஆனால் இன்று நாம் இல்லாத நிலையில் மீண்டும் நாட்டில் கிளர்ச்சிகள் உருவாக ஆரம்பித்துள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளோம். தேசிய பாதுகாப்பை சரியான வகையில் பலப்படுத்தியுள்ளோம். ஆனால் இந்த ஏழு மாதகாலத்தில் நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாம் இந்த நாட்டில் ஆயுத கலாசாரத்தை முழுமையாக தடுத்திருந்தோம்.
சர்வதேச புலிகள் அமைப்புகளை இலங்கையின் விடயங்களில் தலையிடவிடாது தடுத்திருந்தோம். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மீண்டும் நாட்டில் ஆயுத கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்ப் புலிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆகவே எமது கட்டுப்பாட்டில் எவ்வாறு நாடு இருந்ததோ அதே நிலைமை மீண்டும் உருவாக வேண்டும். வடக்கை எமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும்.
யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாட்டை பிரிக்கும் வேலைத்திட்டத்தில் நெருங்கிவிட்டனர். அவை அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும்.
மக்கள் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க வேண்டுமென்றால் நாட்டின் சிங்கள மக்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten