தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 augustus 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!- பொன்.செல்வராசா/ஜனாதிபதி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற நினைப்பவர் அல்ல: இராதாகிருஸ்ணன்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரி வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 11:27.10 AM GMT ]
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாத்தறை, வல்கம பிரதேசத்தில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரி வீட்டின் மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் வந்த நபர்களே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தினால் எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை. வீட்டில் ஒவ்வொரு இடங்களில் இருந்து டீ56 ரக துப்பாக்கிக்கான 10 தோட்டாக்கள் மாத்திரமே காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்கைகளுக்கு இடையிலான தேர்தலாக மாற்றுங்கள்: சோபித தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 11:31.50 AM GMT ]
இம்முறை நடக்கும் தேர்தல் இனவாதத்தை தூண்டும் தேர்தல் அல்ல எனவும் இதனை கொள்கைகளுக்கு இடையிலான தேர்தலாக மாற்றுமாறும் மாதுளுவாவே சோபித தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் பாதாள உலக வன்முறையாளர்களுக்கு தலைத்தூக்க இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புளுமெண்டால் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த உண்மையாக ஓய்வு பெறவுள்ளாராம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 12:10.52 PM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரகசியமாக வழங்கிய வாக்குறுதி உண்மை என சிங்கள இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்சவின் கௌரவமான பிரியாவிடைக்காக ஜனாதிபதியிடம் சந்தர்ப்பம் ஒன்று கோரப்பட்டுள்ளதாகவும், ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் கலந்துரையாடலின் முடிவாகவே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக குறித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் மொஹமட் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ என்பவர்களுக்கு வழங்கப்பட்ட சிரேஷ்ட பிரதமர் பதவியினை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கு ஜனாதிபதியிடம் இருந்து சிறப்பானதொரு பதில் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
பொது தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் செயற்பாடுகளுக்கு இடமளித்து ஓய்வு பெறுவதாகவும் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதிக்கு வாக்குறுதியளித்ததாக இதற்கு முன்னர் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சந்திக்கவுள்ள தோல்வியின் பொறுப்பினை ஜனாதிபதி மீது சுமத்தி மஹிந்த ராஜபக்சவை தொடர்ந்து அரசியலில் செயற்படுவதற்கான முயற்சி தொடர்பில் தகவல் வெளியாகியதனை தொடர்ந்தே இக்கோரிக்கை மற்றும் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற சுதந்திர கட்சியின் ஐவரை கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு கட்சி மாநாடொன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரப்பட்டது இதன் ஊடாக ஜனாதிபதியினை கடினமான நிலைக்கு உட்படுத்த முயற்சித்தனர்.
ஜனாதிபதி இவ்யோசனையினை எதிர்ப்பார் என மஹிந்த தரப்பினர் எதிர்பார்த்தனர், ஜனாதிபதி கட்சி தலைவர் அதிகாரத்தை பயனபடுத்தி குறித்த ஐவரின் உறுப்புரிமையை ரத்து செய்தமையினால் மஹிந்த தரப்பினரின் திட்டம் தோல்வியடைந்தன.
மைத்திரி தரப்பினருக்கு எதிராக தேர்தல் நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளும் மஹிந்த தரப்பினருக்கு தோல்வியை மாத்திரம் கொண்டு வந்தது.
இந்நிலையினை அறிந்துக்கொண்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச கௌரவமாக ஓய்வு பெறுவதற்கான சந்தர்ப்பம் கோருவதற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என குறித்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மட்டுமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!- பொன்.செல்வராசா
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 12:19.25 PM GMT ]
புரையோடிப்போயுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் மட்டுமே தீர்வினைக் காணமுடியும் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இன்று காலை கல்லடி, உப்போடையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
10 வருடமாக நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல சேவைகளை புரிந்துள்ளேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்காத காலத்திலும் பல சேவைகளையாற்றியுள்ளேன். குறிப்பாக போர் மற்றும் சுனாமி அனர்த்த காலத்தில் பல சேவைகளையாற்றியுள்ளேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என சிலர் கேட்கின்றனர். இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இனத்தின் தேவைப்பாடுகள், தமிழர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே தீர்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்று கேட்பவர்கள் அபிவிருத்தியை மட்டும் வைத்து தமிழர்களிடம் செல்கின்றனர். அவர்கள் தமிழர்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் சிந்திப்பதில்லை. இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்று எங்களிடம் நேரடியாக கேட்டால் அதற்குரிய பதிலை நாங்கள் விரிவாக அளிப்போம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாட்டில் இருந்திருக்காவிட்டால் இன்று நீதிமன்றில் கூட தமிழ் மொழி பாவனையில் இருந்திருக்காது. தமிழை இந்த நாட்டில் அரசகரும மொழியாக்கியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே. தமிழர்களின் மிக முக்கிய பிரச்சினைகளை தீர்த்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே.
2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட போது வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தலைமை யார் என்ற கேள்வியெழுந்த போது 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் தலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டினர்.
அதேபோன்று 2010 தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பகுதிகளில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே தெரிவு செய்யப்பட்டனர். தமிழ் தேசியத்தினை கிழக்கு மக்கள் முழுமையாக ஆதரித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினை தமிழ் மக்கள் புறக்கணிக்கவில்லை.
நாங்கள் கடந்த அரசாங்கத்துடன் இனப்பிரச்சினையை தீர்க்கும் வகையில் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். பல சுற்று பேச்சுகள் நடைபெற்றன. அவர்கள் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முன்வராமல் தாங்களாகவே பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டனர்.
உள்நாட்டில் புறையோடிப் போன இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை உணர்ந்து கொண்டதன் காரணமாகவே சர்வதேசத்துக்கு தமிழர்களின் இன்னல்களை வேதனைகளை தெளிவுபடுத்தினோம். அதன் காரணமாகவே ஐ.நா.வில் மூன்று தடவைகள் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஐ.நா.வின் இறுதி அறிக்கை தள்ளிப்போடப்பட்டுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் அந்த அறிக்கை வெளிவரவுள்ளது.
அந்த அறிக்கை வெளிவந்தால் அதனால் மகிந்தவுக்கு பிரச்சினையை கொடுக்கும் அதனைக் கொண்டு அவர் அரசியல் செய்ய முற்படுவார் என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற தேர்தலை அறிவித்தார். தீர்க்கதரிசனத்துடன் இதனை ஜனாதிபதி மைத்திரிபால செய்தார்.
இந்த தேர்தல் தமிழ் மக்களை பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இருக்கின்றது. சர்வதேச சமூகம் புதிய அரசாங்கத்திற்கு தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற அழுத்தத்தினை வழங்கும் நிலையுருவாகியுள்ளது.அதற்காக நாங்கள் பலமான சக்தியாக மாற்றமடைந்து சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கவேண்டிய கட்டாயதேவையுள்ளது.
அதேபோன்று எதிர்வரும் தேர்தலில் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத கட்சியாக மாறும் நிலையுள்ளது. அந்தவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றாவது நிலையில் இருக்கும் கட்சியாக மாறும்.இதன் காரணமாக பேரம்பேசும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு திகழும். ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நாடும் நிலையேற்படும்.
இந்த நிலையை தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். எந்தக் காலத்திலும் இல்லாத மிகவும் சாதகமான நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் பேரம் பேசும் சக்தியை பெறும் நிலைக்கு நாங்கள் வரக்கூடிய சாத்தியமான நிலை அதிகம் உள்ளது.
கடந்த 2010 தேர்தலில் 14 பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கிய தமிழ் மக்கள் இந்த தேர்தலில் அதனைவிட அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உருவாக்குவார்கள் என நம்புகின்றோம்.
நாங்கள் தேசிய கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் எங்கள் பேரம்பேசும் சக்தியை இல்லாமல் செய்துவிடும் என்பதற்காகவே தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என நாங்கள் கோரி வருகின்றோம்.
இன்று இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணாவிட்டால் என்றும் அதற்கு தீர்வு காணமுடியாத நிலையே ஏற்படும்.
இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் மட்டுமே நாங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காணமுடியும். ஐ.தே.கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளையும் இணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலம் இனப்பிரச்சினைகான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க அவரால் மட்டுமே முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyITWSVmsyC.html


ஜனாதிபதி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற நினைப்பவர் அல்ல: இராதாகிருஸ்ணன்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 01:02.28 PM GMT ]
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் தேர்தலின் பின்பு தலையிட்டு தீர்த்து வைப்பதாக கூறியதை பொறுக்க முடியாத ஒரு சிலர், பொய்யான தகவல்களை வெளியிட்டு தொழிலாளர்களை மீண்டும் ஏமாற்ற நினைக்கின்றார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.
இன்று தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றுமே பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டு மக்களை ஏமாற்ற நினைப்பவர் அல்ல. அதனை அவர் செயல் மூலம் நிருபித்து காட்டி இருக்கின்றார்.
தேர்தல் காலத்தில் தான் நடுநிலை வகிப்பதாக கூறிய ஜனாதிபதி எவ்வாறு ஒரு சில தொழிற்சங்கங்களுக்கு மட்டும் இப்படியொரு உத்தரவாத்தை கொடுத்திருப்பார்?
இது எமது மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு ஒரு சிலரால் திட்டமிடப்பட்டு செய்யப்படும் சதியாகும்.
அப்படி ஜனாதிபதி தெரிவித்திருந்தால் அவருடைய ஊடகப்பிரிவு ஊடாக அதனை நாட்டு மக்களுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் தெளிவுபடுத்தியிருப்பார்.
ஆனால் அப்படி இந்த தேர்தலில் ஒரு பக்கசார்பாக நடந்து கொள்ளமாட்டார். மேலும் அவருடன் சென்று பேசிய கூட்டம் அவரை தோற்கடிப்பதற்கு மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் என்பதையும் அவர் நன்கு அறிவார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அடுத்த அரசாங்கத்தினூடாக தாம் தலையிட்டு இதனை தீர்த்து வைப்பதற்கு முன் வருவதாக,
அண்மையில் நுவரெலியாவில் நடைப்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.
இதனை இன்று எமது பெருந் தோட்டத்துறை தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதற்கு எதிர் கருத்து கூற வேண்டும் என்பதற்காகவே சில தொழிற்சங்கங்கள் இந்த பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றன.
உண்மையில் ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கி இருப்பாராயின் அவர் இதனை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியிருப்பார்.
கடந்த மஹிந்த ஆட்சியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டி தருவதாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பொழுது அதனையும் இந்த தொழிற்ச்சங்கங்கள் தாங்கள் 50 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டார்கள்.
ஆனால் அதற்கு நிதி ஒதுக்கப்படாமல் அது வெறும் வார்த்தைகளாகவும், மக்களை ஏமாற்றும் செயலாகவுமே இருந்தது. அதனை இம் மக்கள் என்றும் மறக்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோல்வியடையச் செய்து மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டவர்கள் இன்று அவர் வெற்றி பெற்றவுடன் அவரோடு சேர்ந்து ஒட்டிக் கொண்டார்கள்.
இந்த நாடகத்தை எல்லாம் ஜனாதிபதியும் இந்த நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.
கடந்த மஹிந்த அரசாங்கத்தில் எமது பெருந் தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவுகளில் ஒன்றான கோதுமை மாவிற்கு கூடுதலான வரியை அதிகரித்து விலையேற்றம் செய்தார்கள்.
அதே போல மண்ணெண்ணைக்கும் வரியை அதிகரித்து விலையேற்றம் செய்து பெருந் தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்தார்கள்.
கடந்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டப் பொழுதும் இவர்கள் ஜனாதிபதியுடனே இருந்தார்கள். ஏன் அப்பொழுது ஜனாதிபதியிடம் பேசி நல்ல ஓர் சம்பள அதிகரிப்பை பெற்று கொடுத்து இருக்கலாம்.
தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் எல்லாவற்றையும் கைநழுவ விட்டு விட்டு இந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகின்றார்கள்.
சம்பள பிரச்சினை மட்டுமல்ல பெருந் தோட்ட தொழிலாளர்களின் சொந்த காணி, தனி வீடு, வேலை வாய்ப்பு என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துக் கொண்டு மற்ற சமூகங்களை போல சமமாக வாழ வேண்டுமானால் அது ஐக்கிய தேசிய கட்சியின் அட்சியில் மாத்திரமே முடியும்.
எனவே எதிர்வரும் 17 ஆம் திகதி எமது பெருந் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் முதன்மை கடவுளான பிள்ளையாருக்கு வாக்களித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களுக்கு விருப்பு வாக்கை அளிக்க முன்வர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyITWSVmsyE.html

Geen opmerkingen:

Een reactie posten