இந்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்தல். அடுத்த மாதமே, ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டம். இந்த இரண்டு நிகழ்ச்சி நிரலையும் இணைக்கிற ஒரே வார்த்தை, ஒற்றை வார்த்தை - 'நாற்காலி'.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நாற்காலியில் அமர்ந்தே ஆகவேண்டும் என்கிற இக்கட்டான நிலை, மகிந்த ராஜபக்சவுக்கு! தோற்றுவிட்டால், மின்சார நாற்காலியில் தன்னை உட்கார வைத்து விடுவார்களோ என்கிற அச்சம் அதிகரித்தபடியே இருக்கிறது அந்த மிருகத்துக்கு!
மகிந்த தரப்பிலிருந்து கேட்கிற புலம்பல் ஒன்று, மகிந்தனின் அச்சத்தை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தியிருக்கிறது.
"போர்க் குற்றச்சாட்டுகள் மூலம் மகிந்த ராஜபக்சேவை மின்சாரக் கதிரையில் (மின்சார நாற்காலியில்) அமர்த்த நடக்கிற முயற்சிகள் வலுவடைந்து வருகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சர்வதேச அமைப்புகளும், அரசும் ராஜபக்சேவைத் தண்டிக்க முயல்கின்றன......
ராஜபக்சவை, அதிபர் மைத்திரி காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. என்றாலும், பிரதமர் ரணில் மீது நம்பிக்கை இல்லை.....
போர்க்குற்ற விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், மின்சார நாற்காலிக் கதைகளும் வெறும் கற்பனை என்றே நினைத்தோம். இப்போதிருக்கும் நிலையில், மின்சார நாற்காலிக் கதைகள் பொய்யானவை அல்ல என்று தோன்றுகிறது...."
இப்படியெல்லாம் ஒப்பாரி வைத்திருப்பவர், மகிந்தனுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா. மகிந்தனின் கூட்டணி சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்தான் இப்படியெல்லாம் பேசியிருக்கிறார் அவர்.
அதிபர் மைத்திரிபால தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடந்திருக்கிறது, இந்தச் சந்திப்பு. (சுதந்திரக் கட்சியில் மைத்திரி தலைவர், மகிந்த தொண்டர் - என்கிற காமெடி உங்களுக்கு நினைவிருக்கிறதா!)
உண்மையில், இந்த மின்சார நாற்காலி காமெடியை ஆரம்பித்து வைத்ததே மகிந்தன் தான். அதிபர் நாற்காலியில் மீண்டும் அமர்வதற்காக மகிந்தன் உதிர்த்த வசனம் அது. 'இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற மின்சார நாற்காலியில் அமரவும் தயார்' என்றெல்லாம், சென்ற டிசம்பரில் பேசினான் மகிந்தன்.
அப்படியெல்லாம் பேசினால், பெரும்பான்மை சிங்கள மக்கள் தன்னைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள் என்று அந்த மிருகம் நினைத்தது பொய்யாகிவிட்டது. தமிழர்கள் மட்டுமல்ல, சரிபாதி சிங்களவர்களும் சேர்ந்தே மகிந்தனைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார்கள், அப்போது!
2010 அதிபர் தேர்தலில், 'விடுதலைப் புலிகளை நான்தான் வீழ்த்தினேன்' என்கிற வீரவசனத்தின் மூலம் சிங்கள இனவெறியைத் தூண்டிவிட்டு, வெற்றி பெற்றான் மகிந்தன். விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களும் விடுதலைப் புலிகளா - என்று அப்போது யாரும் அவனைக் கேட்கவில்லை.
2015 ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலில், மின்சார நாற்காலி பற்றி மகிந்தன் பேச வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. இப்போது, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், மகிந்தன் வைத்த அதே ஒப்பாரியை அவனது கூட்டாளிகள் வைக்கிறார்கள்.
ஜனவரியில் மண்ணைக் கவ்விய மகிந்தனை நம்பி, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் அவனது கூட்டாளிகள். மின்சார நாற்காலி - வசனத்துக்கு ஏகத்துக்கும் 'பில்டப்' கொடுப்பவர்கள் அவர்கள்தான்!
எப்படியாவது சிங்கள மக்களிடையே 'இனவெறியைத் தூண்டிவிட்டு' அவர்களது வாக்குகளைக் கவர்ந்துவிட வேண்டும் - என்கிற நப்பாசை அவர்களுக்கு! அதற்காகத்தான், சிங்கள மக்களுக்கு சிக்னல் கொடுக்கிற விதத்தில், 'விஷம் கலந்த' சில வார்த்தைகளை இந்த சோக வசனத்துக்கு இடையே செருகியிருக்கிறார்கள். உண்மையில், அவர்கள் வடிப்பது நிஜக் கண்ணீர் அல்ல, விஷக் கண்ணீர்.
'சிங்கள மக்களிடையே இனவெறியைத் தூண்டிவிட்டு' - என்கிற அவர்களது வார்த்தைகளை மிகுந்த எச்சரிக்கையுடன்தான் இங்கே பயன்படுத்துகிறேன். 'மின்சார நாற்காலி' புலம்பல் மூலம் சிங்கள மக்களின் அனுதாப வாக்குகளைப் பெற மகிந்த தரப்பு முயல்வதை, இனவெறியைத் தூண்டிவிடும் முயற்சியாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும் - என்று, என் மின்னஞ்சல் நண்பர்கள் நிச்சயமாகக் கேட்பார்கள். அப்படி அவர்கள் கேட்பதற்கு முன்பே அதற்குப் பதில் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறேன்.
ராஜபக்சேவை மின்சார நாற்காலியில் அமர்த்த - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சர்வதேச அமைப்புகளும், அரசும் முயல்கின்றன......" என்பது டிலான் பெரேராவின் பகிரங்க குற்றச்சாட்டு. சர்வதேச அமைப்புகளும், இலங்கை அரசும் அப்படியொரு முயற்சியில் இறங்கியிருக்கின்றனவா - என்கிற கேள்விக்கு பிறகு வருகிறேன்.
அப்படி முயற்சிப்போரின் பட்டியலில், முதலிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெரேரா வைக்கிறாரே.... ஏன்? இந்தக் கேள்விதான் முக்கியமென்று படுகிறது எனக்கு! மகிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் உட்கார வைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போது முயற்சித்தது - என்பது அடுத்த கேள்வி.
2009ல், வன்னி மண்ணில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காகவும், அந்த இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான ராஜபக்சக்களைக் காப்பாற்றுவதற்காகவும் தான், 'போர்க்குற்றம்' என்கிற போலி வார்த்தையை இலங்கை பயன்படுத்தியது.
அதை அறிந்தே, அந்த வார்த்தையைத் தாங்கிப் பிடித்த முதல் தமிழர் அமைப்பு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான்! அதன் முன்னணியில் நின்றவர்கள் இரண்டுபேர். ஒருவர், சம்பந்தன். இன்னொருவர் சுமந்திரன். அவர்கள் இருவராலும் என்னுடைய இந்த வெளிப்படையான குற்றச்சாட்டை சுற்றி வளைத்துக்கூட மறுக்க முடியாது.
இலங்கையின் வார்த்தைச் சதியை அறியாமல்தான் கூட்டமைப்பு - குறிப்பாக சம்பந்தன் சுமந்திரன் கூட்டணி - அதை வழிமொழிந்தது' என்கிற வாதம் முன்வைக்கப்பட்டால், 'அதைக்கூட அறியாத மேதாவிகளுக்கு தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிக்க என்ன தகுதி இருக்கிறது' என்கிற கேள்வி தானாகவே எழும். அப்படியொரு கேள்வியை நான் எழுப்ப வேண்டிய அவசியமே இல்லை.
நடந்தது இனப்படுகொலையா போர்க்குற்றமா - என்கிற கேள்வி கூட என்னுடைய கேள்வி இல்லை. அது, ஒன்றரை லட்சம் உயிர்களின் கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிற தகுதி, குற்றவாளி இலங்கைக்கு எப்படி இருக்க முடியும்? சர்வதேச விசாரணை மூலம்தான், எது உண்மை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிய வரும்.
இது தெரிந்தும், 'சர்வதேச விசாரணை தேவையற்றது' என்கிற தங்களது மேலான கருத்தை அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்தது யார்? சம்பந்தனா? சுமந்திரனா? அல்லது இருவருமேவா? அமெரிக்காவில் நடந்த சந்திப்பு ஒன்றில், 'இனப்படுகொலை' என்கிற வார்த்தையைப் பயன்படுத்திய இளைஞர்கள் மீது எரிந்து விழுந்து அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட மகானுபாவர் யார்?
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூடும் போதெல்லாம், தாய்மண்ணில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நீதி கேட்பதற்காக ஆயிரக்கணக்கில் திரளுகின்றனர், புலம்பெயர் உறவுகள். பொழுதுபோக்குகளுக்காகவே பொழுதையும் பணத்தையும் செலவு செய்யும் இந்தப் பூவுலகில், தங்களது சொந்தச் செலவில் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து ஜெனிவா வந்து நடுத்தெருவில் நின்று போராடும் அந்த மனிதர்கள், அரிதினும் அரிதானவர்கள். அவர்களது போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியவர்கள் யார்?
ஜெனிவாவில் தொடர்ந்து போராடும் எங்கள் புலம்பெயர் உறவுகளின் உணர்வுகளை மதிக்காமல், இலங்கைக்கு வாய்தா வாங்கிக் கொடுப்பதற்காகவே அடிக்கடி அங்கே போய்வந்து கொண்டிருந்த ராஜபக்சக்களின் ஏஜென்டுகள் யார் யார்? ஒவ்வொரு முறையும் சுமந்திரன் ஜெனிவா போவது, இனப்படுகொலைக்கு நீதி கேட்பதற்காகவா, மகிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் ஏற்றுவதற்காகவா? அல்லது, 'இலங்கையை இலங்கையே விசாரித்துக் கொள்ளட்டும்' என்று வக்காலத்து வாங்குவதற்காகவா?
இன்று நேற்றல்ல, சுமார் 70 ஆண்டுகளாக இன அழிப்பு தொடர்கிறது இலங்கையில்! 'நீ என்னுடன் சேர்ந்துதான் வாழ வேண்டும்' - என்று சொல்லிச் சொல்லித்தான் கொல்கிறது இலங்கை. இதை 40 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த தந்தை செல்வா போன்ற மக்கள் தலைவர்கள், இலங்கையின் சுதந்திர தின விழாவை வெளிப்படையாகப் புறக்கணித்தனர்.
அந்த உன்னதமான தலைவர்களை அவமதிக்கும் விதத்தில், ஒன்றரை லட்சம் தமிழர் சிந்திய இரத்தம் உலர்வதற்கு முன்பே, இலங்கை சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட விசுவாச சிகாமணிகள் யார் யார்?
எம் குழந்தைகளைக் கூட பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிக் கொன்று குவித்த மிருகங்களோடு கூடிக் குலவி கும்மியடிக்க நேரமிருக்கும் அந்த விசுவாசிகளுக்கு, ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு அஞ்சலி செலுத்த மட்டும் நேரமில்லாமலேயே போய்விட்டதே.... ஏன்? முள்ளிவாய்க்கால் மண்ணை உதாசீனப்படுத்தியதன் மூலம், எமது இரத்தம் குடித்த புத்தர்களுக்கு என்ன சிக்னல் கொடுத்திருக்கிறார்கள் அவர்கள்?
இலங்கையை ஆண்ட சிங்கள ஆட்சியாளர்கள் அனைவருமே இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் தான் - என்கிற உண்மையை ஒளிவு மறைவின்றி பேசுகிறார், மக்களின் முதல்வர் விக்னேஸ்வரன். 2009ல் நடந்தது இனப்படுகொலைதான் - என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.
அதை நேரடியாக மறுக்க முடியாமல், 'ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு' என்று பேச்சுக்கு பேச்சு சிங்கள மூச்சு விட்டுக் கொண்டிருப்பவர்கள் யார்? 'இனப்படுகொலை - என்று எப்படி தீர்மானம் நிறைவேற்றலாம்' என்று விக்னேஸ்வரன் மீதே பாய முயன்றவர்கள் யார்?
இவர்களா - இவர்களது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா - மின்சார நாற்காலியில் மகிந்தனை ஏற்ற முயன்றது.... முயல்கிறது? இன்றைய தேதியில் இதுதான், தமிழ் பேசும் நல்லுலகின் நம்பர் ஒன் காமெடியாக இருக்க முடியும்.
எனக்கென்னவோ, மகிந்த தரப்பிலிருந்து எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க நடக்கிற சதி என்று தோன்றுகிறது. முதல் மாங்காய் - சிங்கள வாக்குகள்.... அதை மகிந்தனுக்கு ஆதரவாகத் திருப்புவது. இரண்டாவது மாங்காய் - தமிழரின் வாக்குகள்..... அதை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குச் சாதகமாகத் திருப்புவது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் மகிந்தனை மின்சார நாற்காலியில் ஏற்ற முயற்சிக்கிறது - என்கிற குற்றச்சாட்டின் மூலம், 'ஒரு சிங்களத் தலைவனை தமிழர்கள் மின்சார நாற்காலியில் ஏற்ற அனுமதிப்பதா' என்கிற இனத் துவேஷத்தை சிங்களவர்களிடம் ஏற்படுத்துவது எளிது. அப்படியொரு இன வெறுப்பைத் தூண்டிவிட்டு, அப்பாவிச் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைக் கைப்பற்றுவது அதைவிட எளிது.
என்றாலும், இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை. 'மகிந்தனை மின்சார நாற்காலியில் ஏற்ற தமிழர்கள் முயல்கிறார்கள்' என்று சொன்னாலே போதும்...... பௌத்த சிங்கள வெறியர்களுக்கு முழுமையாக தீனி போட்டதாகிவிடும்.
யதார்த்தம் அப்படியிருக்கையில், மகிந்தனை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவே முட்டுக்கட்டையாக இருக்கிற கூட்டமைப்பின் மீது - 'இவர்கள்தான் மகிந்தனை மின்சார நாற்காலியில் ஏற்றப் பார்க்கிறார்கள்' என்கிற காமெடி குற்றச்சாட்டை ஊரறிய முன்வைக்கிறார்களே, ஏன்? இதன் மூலம், அப்பாவித் தமிழ் மக்களிடம், 'ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நீதி கேட்க கூட்டமைப்புதான் உண்மையிலேயே முயல்கிறது' என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி, கூட்டமைப்புக்கு வாக்கு சேகரிக்க முயல்கிறார்களா?
'இனப்படுகொலை - என்கிற உண்மையை மூடிமறைப்பதில் நமக்குத் துணையாக நின்றவர்களே தமிழர் பிரதிநிதிகளாக மீண்டும் வந்தால்தான், ஜெனிவா நெருக்கடியைச் சமாளிப்பது எளிதாக இருக்கும்' என்று கணக்குப் போட்டே மகிந்த தரப்பு காய் நகர்த்துகிறதோ என்கிற ஐயத்தை எழுப்பியிருக்கிறது டிலான் பெரேராவின் காமெடி.
'விலை போகாத அரசியல்வாதிகள்தான் நமக்குத் தேவை, மக்களுக்கான அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும்' - என்பது முதல்வர் விக்னேஸ்வரனின் விருப்பம்.
இனப்படுகொலை செய்த பௌத்த சிங்களப் பொறுக்கிகளின் விருப்பம் அதற்கு நேர் எதிரானதாகத்தானே இருக்க முடியும்! நல்ல விலைக்குத் தங்களை விற்கவும், தமிழர் நலனை சிங்களவர்களுக்கு அர்ப்பணிக்கவும் தயாராக இருப்பவர்கள் வெற்றிபெற்றால்தான் இனப்படுகொலையை மூடி மறைக்க முடியும் - என்றுதானே அவர்கள் எதிர்பார்ப்பார்கள்!
இலங்கைத் தேர்தலில், சிங்கள அரசியல் கட்சிகள், மகிந்தன் மற்றும் ரணில் தலைமையில் பிரிந்து நின்று பலப்பரீட்சை நடத்துகின்றன. என்றாலும், இரண்டு தரப்புமே, '2009ல் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை இல்லை - அது போர்தான்' என்கிற பொய்யைப் பரப்புவதில் ஒற்றுமையாக இருக்கின்றன.
சிங்களக் கட்சிகளின் இந்தப் பச்சைப் பொய்க்கு நேர் எதிரான ஒரு நிலையைத்தான் தமிழர் தரப்பு எடுத்திருக்க வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும், 'நடந்தது இனப்படுகொலைதான்' என்கிற உண்மையை உரக்கப் பேசியிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை.
சிங்களக் கட்சிகள் பச்சைப் பொய்யைக் கூட துணிவுடன் பேசுகிற நிலையில், உண்மையைப் பேசக்கூட தமிழர் கட்சிகள் சில தயங்குவதைப் பார்க்கும் போது, உங்களைப் போலவே எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது
புகழேந்தி தங்கராஜ்
Geen opmerkingen:
Een reactie posten