தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 augustus 2015

போராளிகளுக்காக எழுதுகின்றேன்....... பாகம்-02



தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்பு இலங்கை பாராளுமன்ற தேர்தலில் நேரடியாகவே களம் இறங்குவது தொடர்பான சில கேள்விகளுடன் சென்ற பகுதியை நிறைவு செய்திருந்தேன்.
இப்பகுதியில் முன்னாள் போராளிகள் தொடர்பில் அக்கறையுடைய தமிழ் தேசாபிமானிகளின் கருத்துக்களை விரிவாக ஆய்வுக்குட்படுத்தி எழுதுகிறேன்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் குறிக்கோள் சனநாயக அடிப்படையானது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மேன்மைமிகு குறிக்கோளான சமவுடமை, தன்னாட்சி, தமிழீழம். என்ற கோட்பாடு.
தமிழ் சமுதாயத்தின் மீது ஓரே இரவில் வானில் இருந்து விழுந்த எரிகல் அல்ல.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதுமல்ல. மாறாக இலங்கைத்தீவில் கௌரவமாக வாழ நினைத்த நம் முன்னோடிகளால் 1976 மே 16ம் நாள் வட்டுக்கோட்டையின் பண்ணாகத்தில் தீர்மானமாகி,
1977 யூலை 21 ம் நாள் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்களின் ஆணைக்காக விடப்பட்ட போது 421488 வாக்காளர்களால் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடே தமிழீழம் என்ற தனிநாடு.
இலங்கையின் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது இறைமையின் பெயரால் வழங்கிய இந்த ஆணையை ஏற்றுக்கொண்டு, அதற்காக இறுதிவரை போராடியவர்களே புலிகள் என்பNது வரலாறு சொல்லும் சேதி.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் குறிக்கோள் தர்மத்தின் பாற்பட்டது.
ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டது. ஆகவே இதற்காக போராடிய புலிகளை ஆயுதமேந்திய 'சனநாயக போராளிகள்" என்று அiழைப்பதே பொருத்தமானதாகும்.
ஆயுதமேந்திப் போராடிய புலிகள் அமைப்பின் ஒருபகுதியினர் இலங்கையின் ஓற்றையாட்சி வரம்பினுள் சனநாயக அரசியலில் குதிப்பது சரியா? என்பதே இன்று பல அன்பர்களின் கேள்வியாக உள்ளது.
சரி, பிழை என்பதற்கப்பால் ஒரு விடயத்தை கருத்திற் கொள்ளவேண்டும்; சூழ் நிலைகளே முடிவுகளை தீர்மானிக்கின்றன என்ற கருதுகோளின் அடிப்படையில் நோக்கும் போது ஜனநாயப் போரளிகளாகியுள்ள நம் உடன்பிறப்புகளின் பக்கம் உள்ள நியாயத்தன்மை புரிகின்றது.
2009 மே 18ம் நாள் நிலவரத்தை உங்களுக்கு மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றேன். முள்ளிவாய்க்காலில் மேற்குக்கரையில் இறுதியாக கேட்டுக்கொண்டிருந்த சத்தங்களும் ஓய்ந்து விட்டிருந்தன.
மூன்றரை இலட்சம் மக்கள் கம்பிக் கூண்டிற்குள், சுமார் பத்தாயிரத்திற்கு போராளிகள் படையினரின் காவலில் அனைத்துமே உறைந்து போன உணர்வு எல்லோரிடமும்.
போர்க் கைதியாக பிடிக்கப்பட்ட போராளிக்கு துணையாக எவரும் இருக்கவில்லை. இறுதிவரை எவரும் வரவுமில்லை. அவனுக்கு அண்மித்திருந்தது சுடுவதற்கு தயாராகவிருந்த துப்பாக்கியின் முனைகளே.
குதிரை திடலில் ஒடியபோது பந்தயம் கட்டியவர்களும், கரகோசம் செய்தவர்களும் எங்கையோ ஒளித்துக்கொண்டிருந்தனர். அல்லது பந்தயத்தில் தோற்ற குதிரையை வசை பாடினர்.
போர் தொடங்கினால் 40000 சவப்பெட்டிகள் தென்னிலங்கைக்கு அனுப்பப்படும் என்று வீரமுழக்கம் செய்த தமிழ் அரசியல்வாதி மூச்சுக்காட்டாமல் இருந்தார். அவர் வருவார், இவர் வருவார், என்று வழிமேல் விழிவைத்து காத்திருந்த போராளியை சந்திக்க வந்ததெல்லாம்.
மதகுருமாரும், தியானக்கலை பயிற்றுவிப்பாளர்களும் சில தொண்டுநிறுவனங்களுமே. அத்துடன் போராளியுடன் சேர்ந்து சிலுவை சுமந்த, இன்றும் சுமக்கும் அவனது உறவுகளுமே.
தனது விடுதலைக்கான வழியை தானே திறக்க வேண்டிய நிலைபோராளிக்கு பாம்பின் முதுகிலேறித் தப்பும் தவளையின் தந்திரோபாயம் இங்கு பரிசோதிக்கப்பட்டது. பலர் வந்தார்கள். சிலர் இருக்கிறார்கள். சிலர் வரவேயில்லை. சிலர் வரப்போவதுமில்லை.
வந்தவர்களுக்கு என்ன நடந்தது?
நாம் எதிரியாக நினைத்து போரிட்டவன் கூட தான் பிடித்தவர்களில் எஞ்சியவர்களை விடுவித்தான். ஆனால், தன்னை போருக்கு அனுப்பிவைத்த தன் சமூகத்திடம் ஒரு போராளி திரும்பிவந்த போது அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்ன?
இது விடயத்தில் நாம் ஒவ்வொருவருக்கும் சொந்த அனுபவங்கள் இருப்பதனால் மீண்டும், மீண்டும் எழுதத் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால் இலங்கைத்தீவில் இரண்டு இராணுவங்கள் உள்ளன என்று உலக ஊடகங்கள் குறிப்பிட்ட போது உண்மையில் எல்லோரும் பூரித்துத்தான் போனோம்.
ஆனால் ஒரு இராணுவ படைக்கட்டுமானத்தின் வெளித்தெரியும் விம்பமாக போர் வெற்றிகளும், கம்பீரமான படையணிகளின் அணிவகுப்புகளும், ஆயதங்கள் மற்றும் படை வாகனங்களுமே. எல்லோருக்கும் வெளித்தெரிந்த விடயங்களாகும்.
ஆனால் மறுவளமாக தோல்விகளும், மரணங்களும், காயங்களும், சொத்து அழிவுகளும், வெளிப்படையாக தெரிவதில்லை. அல்லது முன்கொணரப் படுவதுமில்லை என்பதே யதார்த்தம்.
புலிகளின் வெற்றிகர நடவடிக்கைகள் பற்றிய ஒளிப்படங்கள் இன்னும் தமிழனின் வீரத்திற்கு சான்று பகர்கின்றன. ஆனால்தனது அவல நிலையை எடுத்து சொல்லி உதவி கோரும் மாற்றுவலுவுடைய போராளிகளினதும்,
பிரதான உழைப்பாழியை இழந்த மாவீரர் குடும்பங்களினதும் சோகத்தை சொல்லும் செய்திகள், ஒளிப்படங்கள் பல முகநூல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வலம் வருகின்றன. இதற்கு யார் பொறுப்பு?
போராட்டத்தின் வெற்றி எல்லோருக்கும் அதன் தோல்வி மட்டும் போராடியவர்களுக்கா?
பொறுப்பெடுப்பவர்கள் யாருமில்லை.
இலங்கைத்தீவின் தமிழர் தரப்பு இராணுவத்திற்கு இந்த நிலை, ஆனால் சம காலத்தில் போராடிய சிங்களத்தரப்பு இராணுவமும் இழப்புகளை சந்தித்திருந்தாலும், அவர்க்களுக்கு உயிர்களை தவிர ஏனைய அனைத்தும் சிங்கள மக்களாலும் அவர்களால் தெரிவு செய்யப்பட் பிரதிநிதிகளாலும், அரசினாலும் மிக உச்சமாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியம், இழப்பீடு, வைத்திய வசதி வீட்டு வசதி பராமரிப்பு குடியிருப்புகள் என் இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.
அப்படியானால் தமிழர் தரப்பு விசேட தேவையுள்ளவர்களும், குறிப்பாக முன்னாள் போராளிகளுக்கு யார்தான் பொறுப்பு?
இந்த இடத்தில் ஒரு விடயம் குறிப்பிடவேண்டியுள்ளது.
போராட்ட தியாகங்கயையும், அதன் அழிவுகளையும் தோணியாக்கி தேர்தல் ஆற்றை கடக்கும் போக்கு தமிழ் அரசியல் வாதிகளிடம் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் முன்னாள் போராளிகளின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால்.
2009 மே 18 இன் பின்னர். அரசியல் கைதிகளின் விடுதலை, மாற்றுவலுவுள்ளோருக்கான மறுவாழ்வு, போராளி மாவீரர் குடும்பங்களுக்கான நல் வாழ்வு தொடர்பில் தங்களால் தனிப்பட்ட ரீதியாகவும், கட்சி ரீதியாவும் மேற்கொள்ளப்பட்ட நடவடடிக்கைகள் என்ன? என்பதனை வெளிப்படுத்த முடியுமா?
இவ்விபரங்களை தேர்தல் பரப்புரைகளுக்கூடாக நீங்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கான் எம்போன்றவர்களின் ஆதரவு பெருக வாய்ப்புள்ளது என்பதனையும் குறிப்பிட விருப்புகின்றேன்.
ஜனநாயக போராளிகளின்" கருத்துப்படி தமிழ் பேசும் அரசியல் தலைமைகளில் தமக்கு ஏற்பட்ட அதிருப்தியே தமது அரசியல் களத்திற்கான புலிப்பாய்ச்சல் நடைபெறக்காரணம் என கூறி வருகின்றனர்.
ஆகவே நிர்க்கதியான சூழ்நிலையில் இருக்கும் போராளிகள் தமது பிடிவாதத்தையும், மௌனத்தையும் கலைத்து இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலில் கால்பதிப்பது என்பது சூழ்நிலை ஏற்படுத்திய இயற்கை விளைவு என்றே உய்த்துணரக் கூடியதாகவுள்ளது.
இருப்பினும் சுயேட்சைக்குழு 04 இல், சிலந்தி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் போராளிகளின் வலைவிரிப்பால், தமிழ் தேசியத்தின் பேரம் பேசும் சக்தி சிக்கலுக்குள்ளாகுமா? என்பதே பலரின் ஆதங்கம் அடுத்த பகுதியில் தொடரும்......
இ.உயிர்த்தமிழ்
uyirththamilzh@gmail.com

Geen opmerkingen:

Een reactie posten