நாட்டில் நீடிக்கும் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக சமஷ்டி கோரிக்கை மட்டும் முன்வைக்கப்படுமாகவிருந்தால் அது குறித்து எதிர்காலத்தில் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோமென ஐ.நாவுக்கான முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
இணைந்த வடகிழக்கு சுயநிர்ணய கோரிக்கை என்பது பிரிவினைவாதமேயாகும். எனவே அக்கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வு தொடர்பான அடிப்படை விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி முறையிலேயே அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
சமஷ்டி என்ற விடயத்திற்கு நாம் எதிரானவர்களல்ல. சமஷ்டி என்பது பல்வேறு வகையில் காணப்படும் ஆட்சி முறையாகும். சர்வதேசத்தில் சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி நடைபெறும் நாடுகள் பலவுள்ளன. குறிப்பாகக் கூறுவதானால் எமது அண்டை நாடான இந்தியாவில் கூட சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறையே காணப்படுகின்றது.
பிராந்தியங்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் சமஷ்டியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட தீர்வுக் கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில் நாம் அதுகுறித்துப் பேசத் தயாராகவுள்ளோம்.
ஆனால் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தை ஏற்கமுடியாது. ஐக்கிய இலங்கையை பிளவுபடுத்தும் விடயமாகும். இணைந்த வடக்கிழகில் சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கை பிரிவினையையே குறித்து நிற்கின்றது. இதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே அவர்களின் கோரிக்கை பிரிவினையில் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
அதேநேரம் எமது அண்டை நாடான இந்தியாவை எடுத்துக் கொண்டால் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் கூட சுயநிர்ணய உரிமையைக் கோரவில்லை. அதேநேரம் காஷ்மீர் பிரதேசத்தில் கூட சுயநிர்ணய உரிமை கோரிக்கை காணப்படவில்லை.
சர்வதேசத்தில் எதியோப்பியாவில் கூட சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது சுயநிர்ணய உரிமையைக் கோரவில்லை. அவ்வாறிருக்கையில் சமஷ்டிக்குள் சுயநிர்ணய உரிமை கோரப்படுவதானது வேறொரு உள்நோக்கத்திற்காகவேயாகும்.
இதேவேளை ஜூலை 25ஆம் திகதி மருதனார்மடம் சந்திக்கருகில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருக்கும் அக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேடையில் அமர்ந்திருந்த போது பிரபாகரன் பற்றி அதிகமாக பேசப்பட்டது.
அதன்போது அங்கு கூடியிருந்தோர் கரகோஷம் எழுப்பி ஆரவாரித்திருந்தனர். இந்நிகழ்வைப் பார்க்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரபாகரன் மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார் என்ற நிலைமையே உள்ளது.
இக்கூட்டத்தில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தொடர்பாக எவரும் பேசவில்லை. பிரிவினையைக் கோரிய பிரபாகரன் தொடர்பிலேயே அதிகமாகப் பேசினர். இக்கூட்டம் பொங்குதமிழ் நிகழ்வு போன்றே இருந்தது என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten