கூட்டமைப்பே உலக நாடுகளின் ஆலோசனைகளோடு ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்: உ.த.ப.இயக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 07:54.20 AM GMT ]
இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களின் முடிவை உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
அதிலும் முக்கியமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவுகள் மேற்படி நாடுகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமானதொன்றாக கணிக்கப்படவுள்ளன.
இந்த வகையில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற உலக நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தீர்க்கமான எதிர்பார்ப்போடு உள்ளன.
முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ள எதிர்வரும் தேர்தல் முடிவுகளின் படி அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற உலக நாடுகளின் பரிந்துரைகளின்படி, ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுத் தரவல்ல வல்லமையும் அங்கீகாரமும் கொண்டது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே ஆகும்.
இவ்வாறு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள இலங்கைத் பொதுத் தேர்தல் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முன்னர் எப்போதும் இல்லாத அளவில் எதிர்வரும் பொதுத் தேர்தல் அனைத்துக் கட்சிகளுக்குமே பெரும் சவால்கள் நிறைந்தவையாகவே காண்பபடுகின்றன.
குறி;ப்பாக நமது ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் நலன்களைப் பேணுவதற்காகவும் தமிழ்த் தேசியத்தின் வழிகாட்டிகள் என்ற பெயருக்கு ஏற்றதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றதொரு பங்கு வகிக்கின்றது.
இது இ;வவாறிருக்க, தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நாலா திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த தவறான விமர்சனங்களும், எதிர்ப்புக்களும் சில சக்திகளால் வேண்டுமென்றே பரப்பப்படுவதற்கு காரணம் சக தமிழ்க் கட்சிகளே. ஆனாலும் அவற்றையெல்லாம் முறியடித்து மக்கள் மனங்களில் வெற்றியாளர்களாக நிற்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களே.
இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, ஈழத்தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடத்துவதற்குரிய தலைமைத்தவப் பண்பு கொண்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கூட, ஈழத் தமிழர்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்திற்கு இணையாக கருத்துச் செறிவுகள் கொண்ட ஒரு அறிவியல் போராட்டம் எமக்கு தேவை என்பதை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் இயக்கத்தை தோற்றுவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றும் எமது மக்களின் மனங்களில் நிறைந்து காணப்படுகின்றது. அத்துடன் எமது புலம்பெயர் மக்களின் அமைப்புக்களில் பல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளதோடு மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களின் மனங்களில் நிறைந்தும் காணப்படுகின்றன.
இந்தவகையில் விடுதலைப் புலிகளின் வாழ்த்துக்களோடு இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் அமோக வெற்றிகளை ஈட்ட வேண்டும். அவர்களுக்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைத் தன்மை கொண்டவை அல்ல என்பதை நிருபிக்க நாம் முயல வேண்டும்.
உதிரிக்கட்சிகளின் வேட்பாளர்கள்கள் பரப்புகின்ற கருத்துக்களில் பொய்மையே புரையோடிக் கிடக்கின்றது என்பதை நாம் எமது தாயக தமிழ்ப் பேசும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு நாம் செயற்பட்டால் தேர்தலில் வெற்றிகளை குவிக்கப்போவதும், உலக நாடுகளின் ஏற்பாட்டின்படி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை பெற்றுத் தரவல்ல வல்லமை கொண்டதுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மைப் பலத்தோடு பாராளுமன்றத்தில் அமரும் நாளிற்காக காத்திருப்போம்.
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகில சிறப்புத் தலைவர், கனடா வாழ் திரு வி. எஸ். துரைராஜா மற்றும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் ஆகியோரால் இணைந்து வெளியிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyITWSVmr6E.html
மன்னாரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பரப்புரைக்கூட்டம்! பல முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 07:57.50 AM GMT ]
இக்கூட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா கலந்து கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்தினார்.
இதன்போது வன்னி வேட்பாளர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.விநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வேட்பாளர்களான இ.சாள்ஸ் நிமலநாதன், சிவப்பிரகாசம் சிவமோகன், கந்தையா சிவநேசன், மாசிலாமணி றோய் ஜெயக்குமார், சாந்தி சிறீஸ்கந்தராசா, பெருமாள் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு அறிமுக உரையாற்றினர்.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டத்திற்கு தங்களது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் வாழ்வதா? வீழ்வதா? என்பதை தீர்மானிக்கப் போகும் பொதுத்தேர்தல்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 08:07.08 AM GMT ]
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த வேதனைகள் மற்றும் சோதனைகள் அவர்களை துருவமயப்படுத்தியதைப் பிரதிபலிப்பதாக நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்தது. அந்த தேர்தலில் எவர் ஜனாதிபதியாக வர வேண்டுமென்பதை விட எவர் ஜனாதிபதியாக வரக் கூடாது என்பதற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.
அந்த தேர்தல் நாட்டில் நல்லிணக்கம் தோற்றுவிட்டது என்பதால் மாற்றமொன்று அவசியம் என்பதையும் உலகிற்கு வெளிப்படுத்தியது. ஆனால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் எவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவும் அந்த ஆட்சியில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பேரம்பேசும் சக்திகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் வாக்களிக்கவுள்ளார்கள்.
இதில் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பேரம்பேசும் சக்தியை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காக வாக்களிக்க வேண்டியவர்களாக உள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் சதிவலைகளில் சிக்கி மழைக்கால காளான்களாக தோன்றும் கட்சிகளின் மாயைகளில் மயங்கி வாக்குச் சிதறல்கள் ஏற்பட்டால் அது தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும். தமிழ் மக்களுக்கு இன்று அவசியமாவது உணர்ச்சிவசப்பட்டு கலையாடி எல்லாவற்றையும் போட்டுடைக்கும் அரசியல் அல்லாது பொறுப்புணர்வுடன் கூடிய பக்குவமான அரசியலாகும்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திற்கு வெளியே குறிப்பாக, கொழும்பில் வாழும் தமிழ்மக்களின் பூர்வீகம் எதுவாக இருந்தாலும் அவர்கள் இனத்தாலும், மொழியாலும், உணர்வுகளாலும் ஒன்றான தனித்துவமான இனமாக உள்ளார்கள். இவர்கள் கொழும்பில் தனித்துவமான பலம்மிக்க அரசியல் சக்தியொன்றாக பரிணமிக்க வேண்டியவர்களாகவும் உள்ளார்கள்.
இவ்வாறு கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அரசியல் சக்தியொன்றாகத் தோற்றம் பெறுவது அவர்களுடைய உரிமைகளை கொழும்பில் வென்றெடுப்பதற்கு மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் எமது உறவுகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் பக்கபலமொன்றாக அமையும்.
மக்கள் விழிப்புணர்வு பெற்று அரசியல் சக்தியாக மாற்றம் பெறும் போது அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் தாம் சிந்திப்பதைச் செயற்படுத்துபவர்களாக அல்லாது மக்கள் சிந்திப்பதைச் செயற்படுத்துபவர்களாக செயற்படுவார்கள்.
இவ்வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் இலக்குகள் இரண்டாக அமையும். ஒன்று தாம் இழந்தவைகளை மீளப்பெற முடியுமென நம்பிக்கை தரக் கூடிய நல்லாட்சியொன்று நாட்டில் ஏற்படுவதில் பங்காளிகள் ஆகுவதற்காக வாக்களிக்க வேண்டியது.
மற்றையது, தமது உணர்வுகளையும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமது உறவுகளின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் துணிந்து குரல் கொடுக்கக் கூடியவர்களை தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வாக்களிக்க வேண்டியது.
இந்நிலையில், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வினை அரசியலமைப்பிற்கான பதின்மூன்றாவது திருத்தத்தினுள் காண முடியாது. ஏனெனில் பதின்மூன்றாவது திருத்தமானது, மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை ஒரு கரத்தால் வழங்கி இரு கரங்களால் பறிப்பதாக உள்ளது. அதிலுள்ளவைகள் இருப்பதாகத் தோன்றும் .ஆனால், இருக்கமாட்டாது.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தமது அரசியல் மற்றும் அற கோரிக்கைகள் மறுக்கப்பட்டு தமது சொந்த மண்ணில் இரண்டாந்தர பிரஜைகளாக வாழ்ந்து வந்தார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னரான நிலைமாறுகால நீதி என்பது தமிழ் மக்களுக்கு கானல் நீராகவே இருந்தது.
யுத்த காலத்தில் புரியப்பட்ட குற்றங்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிதல் மற்றும் அதற்கான பதிலளிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், இராணுவ மயமாக்கலை இல்லாதாக்கல், இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றல், மாகாண சபைகளின் அதிகாரங்களை முழுமை பெறச் செய்தல் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுதல் என பல விடயங்களில் அரசியல் பிழைத்ததால் இந்த ஆண்டு ஜனவரியில் அறம் கூற்றாகியது. அறம் பிழைத்தவர்களுக்கு அரசியலும் கூற்றாக வேண்டுமென்றால், அத்தகைய ஆட்சி மாற்றத்திற்காகப் பொருத்தமான கட்சிக்கு கொழும்பு வாழ் தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டியவர்களாக உள்ளார்கள்.
மேலும், கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அரசியல் அக்கறையின்றி தமது வாக்கு பலத்தைப் பயன்படுத்தத் தவறினால் அல்லது அவர்களின் வாக்குகள் இலக்குகளின்றி சிதறினால் தமிழ் மக்கள் கொழும்பில் மட்டுமன்றி, நாட்டிலும் அரசியல் அநாதைகளாக வாழவேண்டிய நிலை ஏற்படும்.
நாம் ஒன்றாக எழுந்தால், தனியாக விழ மாட்டோம் என்பதை உணர்ந்து எமது தனிமனித வாக்குகளை எமது பலமாக மாற்றி எமது அரசியல் சக்தியை எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் மட்டுமன்றி கொழும்பிலும் வெளிப்படுத்துவோம்.
அ.சர்வேஸ்வரன்,
சிரேஷ்ட விரிவுரையாளர்
சட்டபீடம்,
கொழும்பு பல்கலைக்கழகம்.
சிரேஷ்ட விரிவுரையாளர்
சட்டபீடம்,
கொழும்பு பல்கலைக்கழகம்.
http://www.tamilwin.com/show-RUmtyITWSVmr6G.html
Geen opmerkingen:
Een reactie posten