தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 augustus 2015

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை என்றால் என்ன? சிறு விளக்கம்


இலங்கையில் 1978ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்பு அமுல்படுத்தப்பட்டதையடுத்து, விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகமானது.
விகிதாசாரத் தேர்தல் முறை என்பது,
ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்தவ) தேர்தல் தொகுதியில் (அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில்) வேட்பாளருக்கு அல்லது பல வேட்பாளர்களை உள்ளடக்கிய (பட்டியல்) ஒரு குழுவிற்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களை ஒதுக்கும் உபாயங்களைக் கொண்ட வாக்களிக்கும் முறை ஆகும்.
இந்த விகிதாசார முறையானது,  1. தனிமாற்று வாக்குரிமை, 2. பட்டியல் முறை ஆகிய இரண்டு பிரதான மாதிரிகளைக் கொண்டதாகும்.
தனிமாற்று வாக்குரிமையின் கீழ் இலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். இத்தகையத் தேர்தல் 1982,1988, 1994, 1999, 2005, 2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பட்டியல் முறையின் கீழ் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மாகாண சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (மாநகர, நகரசபை, பிரதேச சபை) என்பன நடைபெறும்.
இம்முறைக்கமைய 1989, 1994, 2000, 2002, 2004ம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.  
விகிதாசார தேர்தல் தொகுதியின் கீழ் தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்படுவதில்லை. மாறாக தேர்தல் மாவட்டங்களே வரையறை செய்யப்படுகின்றன. 2ம் குடியரசு யாப்பின் 96ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை இருபதுக்குக் குறையாததும், இருபத்து நான்கிற்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங்களாகப் பிரித்து அவற்றிற்குப் பெயர்களைக் குறித்தொதுக்குதல் வேண்டும்.
அரசியலமைப்பின் 95ம் உறுப்புரையின் 1ம் உபபிரிவுக்கமைய 1978– 11– 29ம் திகதி திரு ஜீ.பீ.ஏ சில்வா என்பவரின் தலைமையிலான தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழுவினை இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனா அமைத்தார்.
இவ்வாணைக் குழுவின் அறிக்கை 1981 தேர்தல் தொகுதி வரையறை ஆணைக்குழு அறிக்கை எனப்படுகின்றது. இவ்வறிக்கையின் படி (26ம் பக்கம்) இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாக வரையறை செய்யப்பட்டது.
இலங்கையில் விகிதாசார முறையின் கீழ் இதுவரை நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகவே வரையறை செய்யப்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கதாகும்.
சுதந்திர இலங்கையின் செயற்பட்ட சோல்பரி அரசியலமைப்பிலோ, 1ம் குடியரசு அரசியலமைப்பிலோ பாராளுமன்ற அங்கத்துவர் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை. (நெகிழும் அங்கத்துவத்தைக் கொண்டதாகவே அங்கத்துவ எண்ணிக்கை அமைந்திருந்தது) ஆனால் 2ம் குடியரசு யாப்பில் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்துவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கிணங்க அமைக்கப்பட்ட பல்வேறு தேர்தல் மாவட்டங்களில் தேருநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்க வேண்டும்.
அதே நேரம் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்துக்கிணங்க (1988ல்) இந்த எண்ணிக்கை 225 ஆக உயர்த்தப்பட்டது. இந்த 225 அங்கத்தவர்களும் பின்வரும் ஒழுங்கில் இடம்பெறுவர்.
1 இலங்கையின் முழு வாக்காளர் தொகையையும், கருத்திற் கொண்டு 160 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்படுதல்.
2. ஒரு மாகாணத்திற்கு 4 என்ற வீதம் 9 மாகாணங்களுக்கும், 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.(ஆக மேற்படி 196 உறுப்பினர்களும், 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நேரடியாக மக்கள் மூலம் தெரிவு செய்யப்படுவர்)
தேசிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளும், குழுக்களும் பெறும் வாக்கு விகிதாசாரத்துக்கு அமைய மீதமான 29 பிரதிநிதிகளும் தேசியப் பட்டியல் மூலம் இடம்பெறுவர்.
தேர்தல் தொகுதி வரையறை செய்யப்படக்கூடிய முறையினை நோக்குமிடத்து பெரும்பான்மைத் தேர்தல் முறையினை விட விகிதாசாரத் தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்குத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ள அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
ஏனென்றால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் சிறுபான்மை சமூகத்தினர் சிதறியே வாழ்ந்து வருகின்றனர்.
எனவே தொகுதி ரீதியாக அமையும் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது மிகக் கடினமானதொன்றாகும். ஆனால் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தேர்தல் மாவட்டமாக வரையறை செய்யப்படுவதினால் மாவட்டத்தில் சிதறிவாழும் சிறுபான்மையினருக்கு ஓரிரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.
2004, 2010 மட்டு. மாவட்ட வாக்களிப்புகளும், விகிதாசார முறையில் கிடைக்கப்பெற்ற மக்கள் பிரதிநிதித்துவங்களும்
13வது நாடாளுமன்றத் தேர்தல் – 02.04.2004
த.தே.கூட்டமைப்பு – 161,011 வாக்குகள்
ஸ்ரீ.ல.மு.கா – 43,131 வாக்குகள்
ஐ.ம.சு.கூட்டணி – 26,268 வாக்குகள்.
Ø பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 303,928
Ø அளிக்கப்பட்ட வாக்குகள்: 254,023 (83.58%)
இதனடிப்படையில் த.ஐ.வி.முன்னணி அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
5%த்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 3 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 230,310 வாக்குகளை எஞ்சிய 4 ஆசனங்களுக்காகப் பிரித்தபோது, ஒரு ஆசனத்திற்கு 57,577 வாக்குகள் தேவைப்பட்டன.
அதன்படி த.தே. கூட்டமைப்பின் 161,011 வாக்குகளில் 2ம், 3ம் ஆசனங்களுக்காக 115,154 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 45,857 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக தலா 57,577 வாக்குகள் இப்போது எந்தக் கட்சிகளிடமும் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 45,857 வாக்குகளைக் கொண்டிருந்த த.தே. கூட்டமைப்புக்கு 4வது ஆசனமும், 43,131 வாக்குகளைப் பெற்றிருந்த ஸ்ரீ.ல.மு.காவுக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த 57,843 விருப்பு வாக்குகள் பெற்ற கே. கனகசபை, 50,545 விருப்பு வாக்குகள் பெற்ற தங்கேஸ்வரி கதிர்காமன், 44,457 விருப்பு வாக்குகள் பெற்ற எஸ். ஜெயானந்தமூர்த்தி, 38,633 விருப்பு வாக்குகள் பெற்ற கிங்ஸ்லி இராசநாயகம், ஸ்ரீ.ல.மு.கா.வைச் சேர்ந்த 21,232 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எஸ்.எஸ். அமீர்அலி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
14வது நாடாளுமன்றத் தேர்தல் – 08.04.2010
த.தே.கூட்டமைப்பு – 66,235 வாக்குகள்
ஐ.ம.சு. முன்னணி – 62,009 வாக்குகள்
ஐ.தே.முன்னணி – 22,935 வாக்குகள்
த.ம.வி.புலிகள் – 16,886 வாக்குகள்
Ø பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 333,644
Ø அளிக்கப்பட்ட வாக்குகள்: 195,367 (58.56%)
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்ற மேற்படி 4 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 168,065 வாக்குகளை எஞ்சிய 4 ஆசனங்களுக்காகப் பிரித்தபோது ஒரு ஆசனத்திற்காகத் 42,016 வாக்குகள் தேவையாகின.
அதன்படி த.தே.கூட்டமைப்பின் 66,235 வாக்குகளில் 2வது ஆசனத்திற்கான 42,016 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 24,219 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
அடுத்து, ஐ.ம.சு. கூட்டமைப்பின் 62,009 வாக்குகளில் 3வது ஆசனத்திற்காக 42,016 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 19,993 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக தலா 42,016 வாக்குகள் இப்போது எந்தக் கட்சிகளிடமும் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 24,219 மீதி வாக்குகளைக் கொண்டிருந்த த.தே.கூட்டமைப்புக்கே 4வது ஆசனமும், 22,935 வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய தேசிய முன்னணிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த 29,569 விருப்பு வாக்குகள் பெற்ற எஸ். யோகேஸவரன், 18,485 விருப்பு வாக்குகள் பெற்ற பொன். செல்வாசா, 16,504 விருப்பு வாக்குகள் பெற்ற பி. அரியநேத்திரன், ஐ.ம.சு. கூட்டணியைச் சேர்ந்த 22,256 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த 11,678 விருப்பு வாக்குகள் பெற்ற பஷீர் சேகுதாவூத் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
17.08.2015ல் நடைபெறவுள்ள 15வது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவாகவுள்ள கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் விபரங்களை இன்னும் 15 தினங்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.http://www.tamilwin.com/show-RUmtyITYSVmtzI.html

Geen opmerkingen:

Een reactie posten